திசரவின் அபாரத்தால் த்ரில் வெற்றியை சுவைத்த உலக பதினொருவர் அணி

1692
Pakistan vs World XI 2nd T20I
@AFP PHOTO

பாகிஸ்தான் மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண தொடரின் (Independence Cup) இரண்டாவது T-20 போட்டியில், உலக பதினொருவர் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளதுடன் மூன்று போட்டிகள் கொண்ட தொடரினை 1-1 என சமன் செய்துள்ளது.

பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட்டை மீள கொண்டு வரும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டிருந்த இந்த சுதந்திர கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி ஏற்கனவே வெற்றி பெற்றிருந்த நிலையில், தீர்மானமிக்க தொடரின் இரண்டாவது போட்டி லாஹூர் நகரில் ஆரம்பமாகியிருந்தது.

சங்காவின் சதத்துடன் முதல் இன்னிங்சில் வலுவடைந்திருக்கும் சர்ரே கழகம்

இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் தொடரின் இந்தப் பருவகாலத்திற்கான போட்டியொன்றில்…

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹ்மட் முதலில் தனது அணிக்கு துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தார்.

இதன் அடிப்படையில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஆரம்ப வீரர் பக்கார் சமான் விரைவான முறையில் செயற்பட்டு அணிக்கு ஓட்டங்களை அதிகரிக்க முயன்றிருந்த போதும் அவரால் அது இயலாமல் போனது. பாகிஸ்தானின் முதல் விக்கெட்டாக பறிபோன சமான் 13 பந்துகளிற்கு 21 ஓட்டங்களினை பெற்றிருந்தார்.

தொடர்ந்து பாகிஸ்தானின் முன்வரிசைத் துடுப்பாட்ட வீரர்களான அஹ்மத் ஷேசாத் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் பெறுமதி வாய்ந்த ஓட்டங்களை குவித்ததன் மூலம் அணிக்கு வலுச் சேர்த்திருந்தனர்.

இதில் அஹ்மத் ஷேசாத் 34 பந்துகளிற்கு 5 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடங்கலாக 43 ஓட்டங்களினையும், பாபர் அசாம் 38 பந்துகளிற்கு 5 பெளண்டரிகளுடன் 45 ஓட்டங்களினையும் விளாசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் மத்திய வரிசை வீரராக களமிறங்கிய சொஹைப் மலிக் இத்தொடரின் முதலாவது T-20 போட்டி போன்று இதிலும் அதிரடியினை வெளிப்படுத்த 20 ஓவர்கள் நிறைவில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 174 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டது.

இதில் 23 பந்துகளினை மாத்திரம் எதிர் கொண்ட சொஹைப் மலிக் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பெளண்டரி அடங்கலாக 39 ஓட்டங்களினை விளாசியிருந்தார். உலக பதினொருவர் அணியின் பந்து வீச்சு சார்பாக சிறப்பாக செயற்பட்ட இலங்கை வீரர் திசர பெரேரா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் சாமுவேல் பத்ரி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்ஸ் நிறைவு காரணமாக வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 175 ஓட்டங்களினை பெறுவதற்கு பதிலுக்கு ஆடிய உலக பதினொருவர் அணியில் ஆரம்ப வீரர்களில் ஒருவரான தமிம் இக்பால் 23 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பியிருந்தார்.

அதேபோன்று தொடர்ந்து ஆடவந்த வீரர்களில் அவுஸ்திரேலிய அணியின் டிம் பெயின் மற்றும் உலக பதினொருவர் அணியின் தலைவர் பாப் டு ப்ளேசிஸ் ஆகியோரும் இலக்கு எட்டும் பயணத்தில் அவ்வளவு சிறப்பாக செயற்பட்டிருக்கவில்லை.

எனினும், இத்தருணத்தில் ஜோடி சேர்ந்திருந்த உலக பதினொருவர் அணியின் ஆரம்ப வீரர் ஹசிம் அம்லா மற்றும் திசர பெரேரா ஆகியோர் நான்காம் விக்கெட்டிற்காக ஜோடி சேர்ந்து போட்டியினை சுவாரசியமான முறையில் மாற்றி இருந்தனர்.

இந்த இரண்டு வீரர்களினதும் சாமர்த்தியமான இணைப்பாட்டம் மூலம் நான்காம் விக்கெட்டிற்காக 69 ஓட்டங்கள் பெறப்பட 19.5 ஓவர்கள் நிறைவில் மேலதிகமாக எந்த விக்கெட்டுக்களையும் பறிகொடுக்காத உலக பதினொருவர் அணி 175 ஓட்டங்களினை குவித்து போட்டியின் வெற்றியாளர்களாக மாறியது.

வெற்றி பெற போட்டியின் கடைசி இரண்டு பந்துகளிற்கும் ஆறு ஓட்டங்கள் தேவைப்பட்டு மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இந்தப் போட்டியில், அந்த ஆறு ஓட்டங்களினையும் தனது இரும்புக்கரம் மூலம் பெற்றுக்கொடுத்த இலங்கை அணியின் திசர பெரேரா வெறும் 19 பந்துகளில் மொத்தமாக 5 சிக்ஸர்கள் அடங்கலாக 47 ஓட்டங்களினையும் மறுமுனையில் ஹசிம் அம்லா தனது 7 ஆவது T-20 அரைச் சதத்துடன் 55 பந்துகளில் 72 ஓட்டங்களினையும் குவித்து போட்டியின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்றிருந்தனர்.

இப்போட்டி மூலம் தமது சொந்த மண்ணில் வைத்து முதலாவதாக T-20 போட்டி ஒன்றில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியினது பந்து வீச்சில் இமாத் வஸீம், சொஹைல் கான் மற்றும் மொஹமட் நவாஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சீரற்ற காலநிலையால் மற்றொரு நெருக்கடியில் மேற்கிந்திய தீவுகள் அணி

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற T-20 உலகக் கிண்ணப் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி சம்பியன் …

இலங்கை அணிக்காக அண்மைய போட்டிகளில் அவ்வளவு சிறப்பாக செயற்பட்டிருக்காத திசர பெரேரா இந்தப் போட்டியில் தனது சிறப்பான சகல துறை ஆட்டத்தினை காட்டியமைக்காக ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டதோடு தனது பழைய ஆட்டத்திற்கும் திரும்பிக்கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் அணி – 174/6 (20)  பாபர் அசாம் 45(38), அஹ்மத் ஷேசாத் 43(34), சொஹைப் மலிக் 39(23), திசர பெரேரா 23/2(3), சாமுவேல் பத்ரி 31/2(4)

உலக பதினொருவர் அணி – 175/3 (19.5) ஹசிம் அம்லா 72(55)*, திசர பெரேரா 47(19)*, மொஹமட் நவாஸ் 25/1(3)

போட்டி முடிவுஉலக பதினொருவர் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி