பாபர் அசாமின் அதிரடியுடன் உலக பதினொருவர் அணியை வீழ்த்திய பாகிஸ்தான்

502
pak-vs-world-xi

நடைபெற்று முடிந்திருக்கும் உலக பதினொருவர் அணி மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சுதந்திர கிண்ணத் தொடரின் (Independence Cup) முதலாவது T-20 போட்டியில் 20 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்ற பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட்டை மீண்டும் கொண்டுவரும் நோக்கோடு,  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தினால் (PCB) பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த முயற்சிகளில் ஒன்றாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் உலக பதினொருவர் அணிக்கும் இடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த T-20 தொடரின் முதல் போட்டி பாகிஸ்தானின் லாஹூர் நகரின் கடாபி மைதானத்தில் பெருந்திரளான ரசிகர்கள் மத்தியில் ஆரம்பமாகியிருந்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் ஓர் திருப்பம்

தீவிரவாதம் என்பது இன்று முழு உலக நாடுகளுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலை…

இந்த விறுவிறுப்பான ஆட்டத்தின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற உலக பதினொருவர் அணியின் தலைவர் பாப் டு ப்ளெசிஸ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை பாகிஸ்தானிற்கு வழங்கியிருந்தார்.

இதற்கு அமைவாக பக்கார் சமான் மற்றும் அஹ்மத் ஷேசாத் ஆகியோருடன் தமது துடுப்பாட்டத்தினை துவங்க மைதானம் விரைந்த பாகிஸ்தான் அணி நல்லதொரு ஆரம்பத்தினை தரவில்லை.

ஆரம்ப வீரர்களில் ஒருவரான பக்கார் சமான் வெறும் 8 ஓட்டங்களுடன் தென்னாபிரிக்க வீரர் மோர்னே மொர்க்கலின் பந்து வீச்சில் அவரது சக அணி வீரர் ஹசிம் அம்லாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து புதிதாக களம் நுழைந்த பாபர் அசாம் களத்தில் நின்ற அஹ்மத் ஷேசாத்துடன் இணைந்து அதிரடியான ஆட்டத்தினை வெளிக்காட்டியிருந்தார். பாகிஸ்தான் அணியின் இரண்டாம் விக்கெட்டிற்காக 122 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்டது. இதனால் வலுவடைந்த பாகிஸ்தானின் இரண்டாம் விக்கெட்டாக ஓய்வறை திரும்பிய அஹமட் ஷேசாத் 39 ஓட்டங்களினை பெற்றிருந்தார்.  

தொடர்ந்து தனது இரண்டாவது T-20 அரைச் சதத்தினை தாண்டி சிறப்பாக செயற்பட்டிருந்த பாபர் அசாமின் விக்கெட்டும் பறிபோனது. ஆட்டமிழக்கும் போது அசாம் 52 பந்துகளில் 10 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 86 ஓட்டங்களினை விளாசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அசாமிற்கு பிறகு வந்த பாகிஸ்தானின் துடுப்பாட்ட வீரர்கள் பெரிதாக சோபிக்காது விடினும், அனுபவமிக்க சொஹைப் மலிக்கின் விரைவான துடுப்பாட்டத்துடன் 20 ஓவர்கள் நிறைவில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுக்களை இழந்து 197 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில், சொஹைப் மலிக் வெறும் 20 பந்துகளிற்கு 4 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 38 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

உலக பதினொருவர் அணியின் பந்து வீச்சில், இலங்கையின் சகலதுறை ஆட்டக்காரர் திசர பெரேரா 2 விக்கெட்டுக்களையும், அவுஸ்திரேலிய அணியின் பென் கட்டிங் மற்றும் தென்னாபிரிக்க அணியின் மோர்னே மொர்க்கல் மற்றும் இம்ரான் தாஹீர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.  

ரெட்புல் கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு மற்றுமொரு இலகு வெற்றி

கிரிக்கெட் விளையாட்டின் 08 முன்னணி நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும்..

இதனையடுத்து வெற்றியிலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 198 ஓட்டங்களை பெறுவதற்கு பதிலுக்கு ஆடிய, உலக பதினொருவர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 177 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.

உலக பதினொருவர் அணியில் அதிகபட்சமாக டர்ரேன் சமி (ஆட்டமிழக்காமல்) மற்றும் பாப் டு ப்ளேசிஸ் ஆகியோர் தலா 29 ஓட்டங்கள் வீதம் பெற்றிருந்தனர். இன்னும் பாகிஸ்தானிற்கு நெருக்கடி தருவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஹசிம் அம்லாவும் 26 ஓட்டங்களுடன் ஓய்வறை நோக்கி நடந்திருந்தார்.

பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் சொஹைல் கான், ரும்மான் ரயீஸ் மற்றும் சதாப் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தி போட்டியின் வெற்றியாளர்களாக மாறியிருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் சுதந்திர கிண்ணத்தின் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. போட்டியின்  ஆட்ட நாயகனாக தனது சிறப்பான அரைச் சதத்திற்காக பாபர் அசாம் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் அணி – 197/5 (20) பாபர் அசாம் 86(52), அஹ்மத் ஷேசாத் 39(34), சொஹைப் மலிக் 38(20), திசர பெரேரா 51/2(4)

உலக பதினொருவர் அணி – 177/7 (20) பாப் டு ப்ளேசிஸ் 29(18), டர்ரேன் சமி 29(16)*, ஹசிம் அம்லா 26(17), சொஹைல் கான் 28/2(4), சதாப் கான் 33/2(4), ரும்மான் ரயீஸ் 37/2 (3)

போட்டியின் சுருக்கம்பாகிஸ்தான்  20 ஓட்டங்களால் வெற்றி