இலங்கையுடன் மோதவுள்ள பாகிஸ்தான் டெஸ்ட் குழாம் அறிவிப்பு

83

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட்  தொடருக்கான அஸார் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணியின் 16 பேர் கொண்ட குழாம் இன்று (07) வெளியிடப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு இலங்கை அணி இருதரப்பு தொடருக்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் இலங்கை கிரிக்கெட் அணியினரை இலக்கு வைத்து 2009 மார்ச் 3ஆம் திகதி நடாத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னர் முதல் டெஸ்ட் அணியாக இலங்கை அணி பாகிஸ்தான் செல்கிறது. 

பாகிஸ்தான் செல்லும் இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு

அத்துடன், இலங்கை டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…

கடந்த ஒக்டோபர் மாதம் அனுபவ வீரர்களை இழந்து இலங்கை ஒருநாள் மற்றும் டி20 இளம் அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. இருந்தாலும் தற்போது பலம் வாய்ந்த இலங்கை அணியொன்று பாகிஸ்தானில் வரலாற்று டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த இருதரப்பு தொடருக்காக திமுத் கருணாரத்ன தலைமையிலான 16 பேர் கொண்ட இலங்கை அணியின் பலம்வாய்ந்த குழாம் கடந்த வெள்ளிக்கிழமை (29) அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது குறித்த தொடருக்கான பாகிஸ்தான் குழாம் வெளியிடப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இறுதியாக அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 சர்வதேச தொடரை இழந்ததுடன், டெஸ்ட் தொடரில் படுமோசமான தோல்வியை சந்தித்திருந்தது. குறித்த ஆஸி. டெஸ்ட் தொடருக்காக வெளியிடப்பட்டிருந்த குழாமிலிருந்து இலங்கை தொடருக்காக இரு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ன.

இந்நிலையில் வெளியிடப்பட்டுள்ள குழாமில் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவராக தொடர்ந்தும் செயற்படும் அடிப்படையில் அஸார் அலி பெயரிடப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 4 இன்னிங்ஸ்களில் 44 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற இப்திகார் அஹமட் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

2009ஆம் ஆண்டு கொழும்பில் இலங்கை அணியுடன் நடைபெற்ற போட்டியில் டெஸ்ட் அறிமுகம் பெற்று வெறும் 3 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடிய நிலையில் டெஸ்ட் அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டிருந்த இடதுகை துடுப்பாட்ட வீரர் பவாட் அலாம் 10 வருடங்களின் பின்னர் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். 

கடந்த காலங்களில் முதல் தர போட்டிகளில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியமையே பவாட் அலாம் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளமைக்கு முக்கிய காரணமாக திகழ்கின்றது. மேலும், அவுஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் அறிமுகம் பெற்ற 19 வயதுடைய வேகப் பந்துவீச்சாளர் முஹம்மட் முஸா குறித்த போட்டியில் பிரகாசிக்காததன் காரணமாக குழாமிலிருந்து தூக்கப்பட்டுள்ளார்.  

அவரின் வெற்றிடத்திற்காக பாகிஸ்தான் அணியின் மற்றுமொரு வேகப் பந்துவீச்சாளரான 25 வயதுடைய உஸ்மான் ஷென்வாரி டெஸ்ட் அறிமுகம் பெறும் அடிப்படையில் முதல் முறையாக டெஸ்ட் குழாமிற்கு அழைக்கப்பட்டுள்ளார். உஸ்மான் ஷென்வாரி 17 ஒருநாள் மற்றும் 16 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

அவுஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் தனது 16 வயதில் டெஸ்ட் அறிமுகம் பெற்ற நஸீம் ஸாஹ் தொடர்ந்தும் பாகிஸ்தான் டெஸ்ட் குழாமில் இடம்பெற்றுள்ளார். பாகிஸ்தான் தேசிய அணியில் விளையாடும் நஸீம் ஸாஹ் ஜனவரியில் நடைபெறவுள்ள இளையோர் உலகக்கிண்ண தொடருக்கான குழாமிலும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

PSL 2020: லாஹூர் அணியில் இலங்கை சீக்குகே பிரசன்ன

அடுத்த வருடம் (2020) நடைபெறவுள்ள பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) கிரிக்கெட்…

மேலும், டெஸ்ட் அறிமுகம் பெறும் அடிப்படையில் அவுஸ்திரேலிய தொடருக்கான குழாமில் இடம்பெற்றிருந்த சகலதுறை வீரர் காஸிப் பாத்தி டெஸ்ட் அறிமுகம் பெறாவிட்டாலும், தொடர்ந்தும் இலங்கையுடனான டெஸ்ட் குழாமில் இடம்பெற்றுள்ளார்.  

16 பேர் கொண்ட பாகிஸ்தான் குழாம்

அஸார் அலி (அணித்தலைவர்), ஆபித் அலி, அஸாட் சபீக், பாபர் அஸாம், பவாட் அலாம், ஹாரிஸ் சுஹைல், இமாம் உல் ஹக், இம்ரான் கான், காஸிப் பாத்தி, மொஹம்மட் அப்பாஸ், மொஹமட் றிஸ்வான் (விக்கெட் காப்பாளர்), நஸீம் ஸாஹ், சஹீன் அப்ரிடி, ஷான் மஸூத், யாஸிர் ஸாஹ், உஸ்மான் ஷென்வாரி

இரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் புதன்கிழமை (11) ராவல்பின்டியில் நடைபெறவுள்ளது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<