தமது அணியின் சிறந்த ஆட்டம் இன்னும் வெளிவரவில்லை – மிச்செல் ஸ்டார்க்

135
Image Courtesy - Getty Images

லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 37ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை தோற்கடித்திருக்கும் அவுஸ்திரேலியா, இந்த உலகக் கிண்ணத் தொடரில் தமது 7ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதேநேரம் இந்த கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் முதல் அணியாக அரையிறுதிச் சுற்றுக்கு தெரிவாகியிருந்த அவுஸ்திரேலியா, குறித்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணியின் உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பினையும் சற்று கடினமாக்கியுள்ளது.

மிச்சல் ஸ்டார்க்கின் வேகத்தால் வீழ்ந்தது நியூசிலாந்து

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இன்றைய உலகக் கிண்ணப்……….

அவுஸ்திரேலிய அணிக்கு நியூசிலாந்து அணியுடனான லீக் போட்டியில் வெற்றிபெற, இடதுகை வேகப்பந்துவீச்சாளரான மிச்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி உதவியிருந்தார்.

அத்தோடு மிச்செல் ஸ்டார்க் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி மூலம் உலகக் கிண்ணத் தொடர் ஒன்றில் மூன்று தடவைகள் 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் நிகழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தனது அணியின் வெற்றி தொடர்பில் கருத்து வெளியிட்ட மிச்செல் ஸ்டார்க், அவுஸ்திரேலிய அணியின் சிறந்த ஆட்டம் இன்னும் வெளிப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.

“நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே இந்த (உலகக் கிண்ணத்) தொடரின் முடிவில் உச்ச பதிவு ஒன்றினை பெற எதிர்பார்த்திருக்கின்றோம். இதேநேரம் எங்களது சிறந்த ஆட்டத்தினை நாம் இன்னும் தேடிக்கொண்டே இருக்கின்றோம்.”

“நாங்கள் இத்தோடு முடித்துக் கொள்ள போவதில்லை. நாங்கள் களத்தில் எங்களால் துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரண்டின் மூலமும் என்ன செய்ய முடியும் என்பதை ஒரு பகுதியாக காட்டி வருகின்றோம். ஆனால், எங்களுக்கு இன்னும் முன்னேற்ற வேண்டிய விடயங்கள் இருக்கின்றது, அதுவே இந்த குழுவின் எதிர்பார்ப்பாக உள்ளது.” என ஸ்டார்க் குறிப்பிட்டார்.

இந்த உலகக் கிண்ணத் தொடரில் 8 போட்டிகளில் விளையாடியிருக்கும் அவுஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு எதிரான தமது மோதலில் மட்டுமே தோல்வியினை தழுவியிருந்தது. எனினும், இந்த தோல்வியினை தள்ளிவைத்து விட்டு உலகக் கிண்ண அரையிறுதி சுற்றில் அவுஸ்திரேலிய அணி சிறப்பாக செயற்படும் என மிச்செல் ஸ்டார்க் கூறினார்.

“எங்களது சிறந்த ஆட்டத்தினை அரையிறுதி போட்டியில் வெளிப்படுத்த வேண்டும். அத்தோடு இறுதிப் போட்டியில் இன்னும் சிறப்பாக செயற்பட வேண்டும். இதுவே, இந்த தொடரின் பிரதான எதிர்பார்ப்பு

இந்தியாவோ அல்லது நியூசிலாந்தோ அதனை கருத்திற்கொள்ளாமல் நாம் ஒவ்வொரு போட்டியிலும் முன்னேறும் போது, எங்களுக்கு போட்டிக்கான நாளில் சரியான திட்டம் தீட்டி அதனை சரியான முறையில் நிறைவேற்றிக் கொள்ள முடியும்

“நியூசிலாந்து அணியினை வீழ்த்தியது சிறந்த முடிவு என்ற போதிலும், இந்த ஒரு வெற்றி உலகக் கிண்ணத்தை வென்று தராது.”

ரஷித் கானை இலக்கு வைத்து விளையாடியதால் வெற்றி: இமாத் வசிம்

உலகத்தரம் வாய்ந்த சுழல் பந்து வீச்சாளர்களைக் கொண்ட ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக விளையாடி…….

கடந்த (2015) உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலிய அணி, உலகக் கிண்ண சம்பியன்களாக மாற முக்கிய காரணமாக அமைந்திருந்த மிச்செல் ஸ்டார்க் இந்த உலகக் கிண்ணத் தொடரில் கைப்பற்றிய விக்கெட்டுக்களுடன் சேர்த்து மொத்தமாக 46 விக்கெட்டுக்களை உலகக் கிண்ணப் போட்டிகளில் மாத்திரம் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதேநேரம், இந்த விக்கெட்டுக்கள் அனைத்தும் 12.97 என்ற மிகச் சிறந்த சராசரியுடன் கைப்பற்றப்பட்டிருக்கின்றமை முக்கிய விடயமாகும். எனினும், உலகக் கிண்ணப் போட்டிகளை வெல்லாது போனால் சாதனைகள் ஒரு போதும் பேசப்படாது என மிச்செல் ஸ்டார்க் நம்புகின்றார்.

“நாம் உலகக் கிண்ணத்தை வெல்லாது போனால், சாதனைகள் பெரிதாக கருத்திற்கொள்ளப்படாது.” 

இதேநேரம் ஸ்டார்க் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற காரணமாக இருந்த அதன் தலைவர் ஆரோன் பின்ச்சினையும் பாராட்டியிருந்தார்.

“எங்களது வெற்றிகளுக்கு மிக முக்கிய காரணம் எமது பொறுமையான தன்மையாகும். ஏனெனில், எமது அணி பின்ச் மூலம் வழிநடாத்தப்படுவதன் காரணமாகும். அவர் மிகச் சிறந்த ஒரு அணித்தலைவராக செயற்பட்டிருக்கின்றார்.”

அவுஸ்திரேலிய அணி, அடுத்ததாக தமது கடைசி உலகக் கிண்ண லீக் மோதலில் தென்னாபிரிக்க அணியினை எதிர்வரும் சனிக்கிழமை (06) மன்செஸ்டர் நகரில் எதிர்கொள்கின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<