நுவரெலியாவில் நடைபெறவுள்ள சர்வதேச ஒலிம்பிக் தின கொண்டாட்டங்கள்

93

சர்வதேச ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு தேசிய ஒலிம்பிக் சங்கத்தினால் ஏற்பாடு செய்துள்ள ஒலிம்பிக் தின ஓட்ட நிகழ்வு எதிர்வரும் 25ஆம் திகதி நுவரெலியாவில் நடைபெறவுள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் 1894ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனையடுத்து ஒவ்வொரு வருடமும் குறித்த தினத்தில் ஒலிம்பிக் தினம் கொண்டாட்டப்பட்டு வருகின்றது.

மைலோ அஞ்சலோட்ட போட்டித் தொடர் ஜுன் 24இல் பதுளையில் ஆரம்பம்

கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறைப்…

இதன்படி, சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டுள்ள உலகின் அனைத்து நாடுகளிலும் குறித்த காலப்பகுதியில் ஒலிம்பிக் தின கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில், இம்முறை இலங்கையில் இடம்பெறும் ஒலிம்பிக் தின நிகழ்வுகளை நுவரெலியா மாவட்டத்தில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேசிய ஒலிம்பிக் சங்கம் மேற்கொண்டுள்ளது.

ஒலிம்பிக் தினம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நுவரெலியா மாவட்டத்தின் ஆயிரம் பாடசாலை மாணவர்கள் ஒலிம்பிக் தின ஓட்ட நிகழ்வில் பங்குபற்றவுள்ளனர்.  

அத்துடன், இம்முறை ஒலிம்பிக் தின ஓட்ட நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக உலகின் மிக உயரமான மலைச் சிகரமாக விளங்குகின்ற எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது இலங்கையரான ஜயந்தி குருஉதும்பாலவும், அண்மையில் அந்தப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த மற்றுமொரு மலையேறும் வீரரான ஜொஹான் பீரிஸும் பங்குபற்றவுள்ள அதேநேரம், இலங்கைக்கான இரண்டாவது ஒலிம்பிக் பதக்கத்தை 2002ஆம் ஆண்டு வென்று கொடுத்த முன்னாள் வீராங்கனையான சுசந்திகா ஜயசிங்கவும் இந்த ஓட்ட நிகழ்வில் மாணவர்களுடன் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, நுவரெலியாவில் உள்ள ஜனாதிபதி இல்லத்திலிருந்து அன்றைய தினம் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாவுள்ள ஒன்றரை கிலோ மீற்றரைக் கொண்ட இந்த ஓட்ட நிகழ்வானது நுவரெலியா சினேசிடா மைதானத்தில் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில், இம்முறை ஒலிம்பிக் தின கொண்டாட்ட நிகழ்வுகள் குறித்து தெளிவுபடுத்த தேசிய ஒலிம்பிக் சங்கம் ஏற்பாடு செய்திருந்த விசேட செய்தியாளர் சந்திப்பொன்று ஒலிம்பிக் இல்ல கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

எவரெஸ்ட் மலையை தொட்டார் ஜொஹான்

எவரெஸ்ட் மலை உச்சியை இலங்கை நேரப்படி நேற்று…

இதில் ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா கருத்து வெளியிடுகையில்,

”சுரேஷ் சுப்ரமணியம் தலைமையிலான ஒலிம்பிக் சங்கம் இவ்வருடத்திலிருந்து புதியதொரு பயணத்தை ஆரம்பித்துள்ளது. தேசிய ஒலிம்பிக் சங்கமானது பல்வேறு வேலைத்திட்டங்களுடன் இலங்கையின் விளையாட்டுத்துறையில் பாரிய மாற்றங்களையும், அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளது.  

இதன்படி, இம்முறை தேசிய ஒலிம்பிக் தின கொண்டாட்டங்களை நுவரெலியாவில் நடாத்தி, அங்குள்ள பாடசாலை மாணவர்களுக்காக விளையாட்டுடன் தொடர்புடைய அனைத்து வேலைத்திட்டங்களையும் ஆரம்பித்து வைக்கவுள்ளோம்.  

  • சுரேஷ; சுப்ரமணியம்

அதுமாத்திரமின்றி, முதற்தடவையாக ஸ்போர்ட்ஸ் விளையாட்டையும் அறிமுகம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இந்தோனேஷியாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக பங்கேற்க வீரரொருவர் தகுதிபெற்றுள்ளார். அதேபோல, 2022 ஆசிய விளையாட்டு விழாவிலும் இந்த விளையாட்டை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் காலங்களில் ஸ்போர்ட்ஸ் விளையாட்டை அபிவிருத்தி செய்ய தேசிய ஒலிம்பிக் சம்மேளனம் நடவடிக்கை எடுக்கும்” எனவும் தெரிவித்தார்.

அத்துடன், இம்முறை ஒலிம்பிக் தின ஓட்ட நிகழ்வில் இலங்கையின் நாமத்தை முழு உலகிற்கும் எடுத்துச் சென்ற மலையேறும் வீரர்களான ஜயந்தி குருஉதும்பால மற்றும் ஜொஹான் பீரிஸை அழைத்து வந்து இங்குள்ள மாணவர்களுக்கு அதுதொடர்பிலான அறிவினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேநேரம், தேசிய ஒலிம்பிக் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வருடத்திற்கான ஒலிம்பிக் தின கொண்டாட்டமானது, பல வகையான நிகழ்ச்சிகளை உள்ளடக்கியுள்ளன.

இதன் முதற்கட்டமாக எதிர்வரும் 24ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்களுக்கான விசேட கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது ஒலிம்பிக்கின் முக்கியத்துவம், அதன் விழுமியங்கள் தொடர்பான கல்விச் செயற்பாடுகள், புதிய விளையாட்டுக்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படவுள்ளது. அதிலும் குறிப்பாக நுவரெலியாவில் மிகவும் பிரபல்யமாக உள்ள கால்பந்து மற்றும் கரப்பந்தாட்ட விளையாட்டுக்கள் தொடர்பிலும் இதன்போது அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது. இதற்காக இலங்கை கால்பந்து மற்றும் கரப்பந்தாட்ட சம்மேளனங்கள் ஒத்துழைப்பு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

MCC அணியின் தலைவராக மஹேல ஜயவர்தன

கிரிக்கெட்டின் தாயகம் என வர்ணிக்கப்படும்…

அத்துடன், இந்த கருத்தரங்கை தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் நிகழ்ச்சித் திட்டத்தின் இயக்குனரான பேராசிரியர் பி.எல்.எச் பெரேரா முன்னெடுக்கவுள்ளார்.

இதனையடுத்து 25ஆம் திகதி காலை புனித சவேரியார் கல்லூரியில் தெரிவுசெய்யப்பட்ட 100 மாணவர்களது பங்குபற்றலுடன் சித்திரம் வரைதல் போட்டியொன்று இடம்பெறவுள்ளது. விளையாட்டு என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இந்த சித்திரம் வரைதல் போட்டியில் முதல் ஐந்து இடங்களைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.

அதுமாத்திரமின்றி நுவரெலியா மாவட்டத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட 50 பாடசாலைகளுக்கு புத்தகங்களும், விளையாட்டு உபகரணங்களும் இதன்போது வழங்கிவைக்கப்படவுள்ளதுடன், இறுதியாக ஒலிம்பிக் தின ஓட்ட நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் விசேட சான்றிதழும் வழங்குவதற்கு தேசிய ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, தேசிய ஒலிம்பிக் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய ஒலிம்பிக் தின கொண்டாட்டங்களுக்கு ஆசிரி ஹெல்த் அமைப்பும், நெஸ்ட்லே லங்கா நிறுவனமும் பிரதான அனுசரணை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<