இனிதே நிறைவுற்ற இவ்வருடத்திற்கான ஒலிம்பிக் தின நிகழ்வுகள்

162
Olympic day Celebrations

ஒவ்வொரு வருடமும் ஜூன் 23ஆம் திகதியில் ஒலிம்பிக் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 2017ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் தினத்திற்குரிய கொண்டாட்டம் இம்முறை கோலாகலமாக அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்று முடிந்திருக்கின்றது.

தேசிய ஒலிம்பிக் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த வருடத்திற்கான கொண்டாட்டமானது, பல வகையான நிகழ்ச்சிகளை உள்ளடக்கியிருந்தன. ஒலிம்பிக் தினத்தின் முதற்கட்டமாக  விளையாட்டு தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நிகழ்வுகள் அம்பாறை டி.எஸ் சேனநாயக்க வித்தியாலயத்தில் இடம்பெற்றிருந்தன.

விளையாட்டு அமைச்சரின் ஆவேசத்தால் இலங்கை விளையாட்டில் மாற்றம் ஏற்படுமா?

இந்நிகழ்வுகளில் ஒரு பகுதியாக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் ஒலிம்பிக் விழுமியங்கள் தொடர்பான கல்விச் செயற்பாடுகள் அனைத்தும் ஒலிம்பிக் விழுமியங்கள் தொடர்பான நிகழ்ச்சித் திட்டத்தின் இயக்குனர் பேராசிரியர். B.L.H பெரேரா மூலம் போதிக்கப்பட்டிருந்தது.

பேராசியர், விளையாட்டில் நாம் எடுக்கும் முயற்சிகளின் போது கிடைக்கும் மகிழ்ச்சி, நேர்மையான ஆட்டத்தினை வெளிப்படுத்தல், ஏனையோரினை மதிக்கும் படி செயற்படுதல் மற்றும் உடல், உள விருத்திகள் விளையாட்டின் மூலம் அதிகரித்தல் ஆகிய கருப்பொருள்களை தனது போதித்தலில் உள்ளடக்கியிருந்தார்.

இன்னும், விளையாட்டில் போதைப்பொருள் பாவிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து, வைத்தியர் சிரோனி அவர்களினால் ஆசிரியர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

ஒலிம்பிக் தினத்தில் மற்றுமொரு சிறப்பு நிகழ்ச்சியாக அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் விளையாட்டு விழுமியங்கள் தொடர்பாக, பேராசிரியர் B.L.H பெரேராவுடன் இணைந்து தேசிய ஒலிம்பிக் அமைப்பின் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வாவினால் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், இதில் மாணவர்களுக்கு ”ஒலிம்பிக் விழுமியங்கள் தொடர்பான கலைக்காட்சி” என்னும் தொனிப்பொருளில் வரைதல் போட்டியொன்றிற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருந்தன.  

இதனையடுத்து, மாணவர்கள் பங்குபற்றியிருந்த வரைதல் போட்டி டி.எஸ் சேனநாயக்க கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

சுமார் நூறு மாணவர்கள் வரை கலந்து கொண்டிருந்த இந்த வரைதல் போட்டியில், குறிப்பிட்ட தொனிப்பொருளிற்கு அமைவாக வரையப்பட்டிருந்த சிறந்த 10 ஓவியங்கள் தெரிவு செய்யப்பட்டு அவ் ஓவியங்களை வரைந்த மாணவர்கள் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

மேல் மாகாண பாடசாலைகள் விளையாட்டு விழாவின் வெற்றியாளர்கள் விபரம்

தொடர்ந்து ஒலிம்பிக் தினத்தின் மற்றுமொரு சிறப்பு நிகழ்ச்சியாக ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள், அனைத்துப்படைகளினையும் சேர்ந்த வீரர்கள் வண்ண வண்ண ஆடைகளுடன் பங்குபற்றியிருந்த நடைபவணி இடம்பெற்றது.

சுமார் மூன்று கிலோ மீட்டர் வரையில் நடைபெற்றிருந்த இந்த பவணியினை, இலங்கை சார்பாக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடியிருந்த பட்மின்டன் வீரர் நிலுக்க கருணாரத்ன மற்றும் முன்னாள் குறுந்தூர ஓட்ட வீரர் சுகத் திலகரத்ன ஆகியோர் ஒலிம்பிக் சுடரினை ஏற்றி ஆரம்பம் செய்து வைத்தனர்.

நடைபவணியில் மாணவர்கள் ஒலிம்பிக்கில் விளையாடப்படும் ஒவ்வொரு விளையாட்டுக்களையும், தனித்தனி குழுவாக பிரிந்து வீதிகளில் விளையாடியவாறே சென்றிருந்தனர். இது நிகழ்வினை கண்டு கொண்டிருந்த பார்வையாளர்கள் அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியிருந்தது.  

நடைபவணியினை அடுத்து, அதில் பங்கேற்றிருந்த அனைத்து சாராரும் அம்பாறை H.M. வீரசிங்க பொது மைதானத்தில் ஒன்று கூடியிருந்தனர். ஒன்று கூடலுடன் சேர்த்து மைதானத்தில் ஒலிம்பிக் தினத்திற்குரிய வரவேற்பு வைபவம் நடைபெற்றது.

சம்பிரதாய நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய வரவேற்பு நிகழ்வில், சிறப்பு அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் கௌரவ H.M.M. ஹரீஸ் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். வரவேற்பு நிகழ்வில் பல சிறப்புரைகள் இடம்பெற்றிருந்தன.

இறுதியில் வரைதல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவத்துடன் இவ்வருடத்திற்கான ஒலிம்பிக் தின நிகழ்வுகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவுற்றன.

இந்த ஒலிம்பிக் தின நிகழ்வுகள் தொடர்பாக ThePapare.com உடன் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நிலுக்க கருணாரத்ன,

“ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றியவன் என்ற ரீதியில் எனக்கு இந்த நாள், ஒலிம்பிக்கின் புனிதத்தன்மையினையும் அது பற்றிய அறிவினையும் ஏனையோரிடம் கொண்டு செல்ல கிடைத்த வாய்ப்பாக அமைகின்றது. கொழும்பு அல்லாத (கிராமப்புற) இலங்கையின் பகுதியொன்றில் ஒலிம்பிக் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்துவதில் மகிழ்வுறுகின்றேன். “

எனக் கூறியிருந்தார்.