இந்திய தொடரிலிருந்து வெளியேறினார் நுவன் பிரதீப்

1165

இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 81ஆவது ஓவரை வீசும்போது இடது தொடைப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்ட நுவன் பிரதீப், இந்தியாவுடனான எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன தெரிவித்த கருத்துக்படியே பிரதீப் ஓய்வில் இருக்க உள்ள விடயம் அறியக்கிடைக்கின்றது. 

இந்திய அணி 622 ஓட்டங்கள் பெற இலங்கை தட்டுத்தடுமாற்றம்

இந்த விடயம் பற்றி கருணாரத்ன கூறும்போது, சிலவேளை அவர் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு அணியில் இடம்பெற மாட்டார்என்றார். இன்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நாள் ஆட்டத்திற்கு பின்னரான செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்தார்.   

இரண்டாவது டெஸ்டில் ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் மாத்திரம் களமிறங்கிய இலங்கை அணியின் வியூகம், நுவன் பிரதீப் 81 ஆவது ஓவரின் நான்காவது பந்தை வீசிய பின்னர் வெளியேறிதால் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியது. எனினும் அவர் முதல் இன்னிங்ஸில் பந்துவீசாதபோதும் தேவைப்படின் துடுப்பெடுத்தாட களமிறங்குவார் என்று அணி முகாமை ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தது.

கிரிக்கெட் முகாமையாளர் அசங்க குருசிங்க ESPNCricinfo இணையதளத்திற்கு கூறும்பொழுது,காயம் குறித்து இன்று இரவு அல்லது நாளை காலையில் மேலும் தெரியவரும் என்றார்.

நுவன் பிரதீப்புக்கு எவ்வாறான காயம் என்பது தெளிவில்லாமல் உள்ளது. எவ்வாறாயினும் அவரது பின்தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இது அவரை குறைந்தது ஒரு சில வாரங்களுக்கு போட்டியில் இருந்து விலகியிருக்கச் செய்வதாகும். இன்றைய தின ஆரம்பத்தில் பிரதீப் MRI SCAN சோதனை ஒன்றை செய்துகொண்டிருப்பதோடு அது அவரது காயத்தின் முழு அளவை காண்பித்துள்ளது.   

அண்மைக் காலத்தில் தடுமாற்றம் கண்டுவரும் இலங்கை அணியில், திறமையை வெளிப்படுத்திவரும் ஒருசில பந்துவீச்சாளர்களில் ஒருவரான பிரதீப்பும் இருந்து வருகின்றார். எனவே, அவரது இழப்பு இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. ஒரு வாரத்திற்கு முன் காலியில் ஆரம்பமான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் பிரதீப் 132 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்திருந்தார்.

இந்த தொடரில் இலங்கை அணி வீரர்கள் தொடர்ச்சியான காயங்களை எதிர்கொண்டுள்ளனர். நிமோனியா காய்ச்சல் காரணமாக டினேஷ் சந்திமாலுக்கு முதல் டெஸ்டில் விளையாட முடியாமல்போனதோடு தனது பெருவிரலில் ஏற்பட்ட முறிவால் அசேல குணரத்ன தொடரில் இருந்து நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.