SAG பளுதூக்கல் அணியில் இடம்பிடித்த முதல் தமிழ் வீராங்கனை ஆர்ஷிகா

237

நேபாளத்தின் கத்மண்டு மற்றும் பொக்கஹராவில் நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான இலங்கை பளுதூக்கல் அணியில் யாழ். சுண்டிக்குளி பெண்கள் கல்லூரி மாணவி விஜயபாஸ்கர் ஆர்ஷிகா இடம்பிடித்துள்ளார். 

இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவுக்காக அறிவிக்கப்பட்ட இலங்கை பளுதூக்கல் அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தலா 7 வீர வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்

தெற்காசிய விளையாட்டு விழாவுக்கு தகுதிபெற்ற வடக்கின் நட்சத்திரம் ஆர்ஷிகா

அண்மைக்காலமாக பாடசாலை மற்றும் தேசிய மட்ட பளுதூக்கல்….

இதில் அண்மைக்காலமாக பாடசாலை மற்றும் தேசிய மட்ட பளுதூக்கல் போட்டிகளில் தங்கப் பதக்கங்ளை வென்று சாதனைகளுக்கு மேல் சாதனை படைத்து வருகின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயபாஸ்கர் ஆர்ஷிகாவும் முதல்தடவையாக இடம்பிடித்தார்.  

தெற்காசிய விளையாட்டு விழாவினை இலக்காகக் கொண்டு இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தகுதிகாண் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்பில் நடைபெற்றன.

இதில் பெண்களுக்கான 64 மற்றும் 71 ஆகிய கிலோ கிராம் எடைப் பிரிவுகளில் பங்குகொண்ட ஆர்ஷிகா, ஸ்னெச் முறையில் 70 கிலோ கிராம் எடையையும், க்ளீன் அண்ட் ஜேக் முறையில் 95 கிலோ கிராம் எடையையும் தூக்கி (ஒட்டுமொத்தமாக 171 கிலோ கிராம்) தனது திறமையை வெளிப்படுத்தி தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்பதற்கான வாய்ப்பை பெற்றுக் கொண்டார்.  

இதன்படி, இம்முறை தெற்காசிய விளையாட்டு விழா பளுதூக்கல் அணியில் இடம்பிடித்த இளம் வயது வீராங்கனையாகவும், தெற்காசிய விளையாட்டு விழா போட்டிகள் வரலாற்றில் இலங்கை சார்பாக பளுதூக்கல் போட்டியில் பங்குபற்றுகின்ற முதல் தமிழ் வீராங்கனையாகவும் அவர் தனது பெயரை பதிவு செய்துகொள்கின்றார்.  

இதேநேரம், பெண்களுக்கான 64 கிலோ எடைப் பிரிவில் தற்போதைய தேசிய சம்பியனாக வலம்வந்து கொண்டிருக்கின்ற ஆர்ஷிகா, அண்மையில் நடைபெற்ற 45ஆவது தேசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் ஒரு தேசிய சாதனை, 2 போட்டிச் சாதனைகளுடன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

தேசிய விளையாட்டு பெரு விழாவில் 4 சாதனைகளுடன் தங்கம் வென்றார் ஆர்ஷிகா

தேசிய விளையாட்டு பெரு விழா போட்டிகளில் பெண்களுக்கான….

அதனைத்தொடர்ந்து சுமார் 9 நாட்கள் இடைவெளியில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவிலும் பங்குபற்றிய ஆர்ஷிகா, குறித்த எடைப் பிரிவில் போட்டியிட்டு தனது சொந்த சாதனையை மீண்டும் புதுப்பித்தார். அத்துடன், பெண்கள் பிரிவில் அதிசிறந்த பளுதூக்கல் வீராங்கனைக்கான விருதையும் தட்டிச் சென்றார்.

தனது அப்பாவின் வழிகாட்டலின் கீழ் 13ஆவது வயதிலிருந்து பளுதூக்கல் போட்டிகளில் தொடர்ந்து பங்குபற்றி வருகின்ற பாடசாலை மாணவியான வி. ஆர்ஷிகா, வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பளுதூக்கல் போட்டியில் தொடர்ந்து 6 வருடங்களாக (2014 முதல் 2019 வரை) தங்கப் பதக்கங்களை வென்று வருகின்ற ஒரேயொரு வீராங்கனையாகயும், குறித்த காலப்பகுதியில் பாடசாலை மற்றும் திறந்த மட்டப் போட்டிகளில் 9 தடவைகள் சாதனைகளை முறியடித்தவராகவும் வலம்வந்து கொண்டிருக்கின்றார்

இதுஇவ்வாறிருக்க, இலங்கைக்கு அதிகளவான பதக்கங்களைப் பெற்றுக் கொடுக்கின்ற முக்கிய போட்டிகளில் ஒன்றாக விளங்குகின்ற பளுதூக்கல் போட்டியில் இலங்கை ஆண்கள் அணியின் தலைவராக 2018 பொதுநலவாய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திக்க திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்

அத்துடன், பெண்கள் பளுதூக்கல் அணியின் தலைவியாக 2018 பொதுநலவாய விளையாட்டு விழாவில் வெண்கலப் பதக்கம் வென்ற சமரி வர்ணகுலசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்

இதேநேரம், இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை பளுதூக்கல் ஆண்கள் அணியில் சின்தன கீதால் விதானகே, திவங்க பலகசிங்க, சத்துரங்க லக்மால், சானக பீட்டர்ஸ், இசுரு குமார மற்றும் ஷான் சாருக்க ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்

Northern weightlifting star Aashika speaks after Qualified for SAG 2019

இவ்வருட இறுதியில் நேபாளத்தில் நடைபெறவுள்ள 13ஆவது….

அதேபோல, பெண்கள் அணியில் 2018 பொதுநலவாய விளையாட்டு விழாவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹன்சனி கோமஸ், ஸ்ரீமாலி சமரகோன், நதீஷா ராஜபக்ஷ, நிமாலி ஹப்புதென்ன மற்றும் சதுரிகா ப்ரியன்தி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்

இறுதியாக கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவின் குவஹாத்தியில் நடைபெற்ற 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை பளுதூக்கல் அணி ஒரு தங்கம், 9 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 15 பதக்கங்களை வென்று அசத்தியது

இதில் ஆண்களுக்கான 62 கிலோ கிராம் எடைப் பிரிவில் சுதேஷ் பீரிஸ் தங்கப் பதக்கத்தினை வெற்றி கொள்ள, இந்திக திசாநாயக்க, சதுரங்க லக்மால், சித்தன கீதால் ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தையும், சானக பீட்டர்ஸ் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். இதில் சுதேஷ் பீரிஸைத் தவிர அனைத்து வீரர்களும் இம்முறை தெற்காசிய விளையாட்டு விழா இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இதேவேளை, இறுதியாக நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான பளுதூக்கலில் வெள்ளிப் பதக்கம் வென்ற சமரி வர்ணகுலசூரிய, ஹன்சனி கோமஸ் மற்றும் சதுரிகா ப்ரியன்தி ஆகியோர் இம்முறை இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இந்த நிலையில், இலங்கை பளுதூக்கல் அணியின் பயிற்சியாளராக ஆர்.பி விக்ரமசிங்கவும், உதவி பயிற்சியாளர்களாக எஸ்.எம்.ஆர் குணதிலக்க மற்றும் கே.ஜி.என் டயான் ஆகியோர் செயற்படவுள்ளனர்.

ஆண்கள் அணி 

இந்திக்க திசாநாயக்க (73 கிலோ.கி), சின்தன கீதால் விதானகே (81 கிலோ.கி), திவங்க பலகசிங்க (61 கிலோ.கி), சத்துரங்க லக்மால் (67 கிலோ.கி), சானக பீட்டர்ஸ் (102 கிலோ.கி), இசுரு குமார (55 கிலோ.கி), மற்றும் ஷான் சாருக்க (109 அதிக கிலோ.கி

பெண்கள் அணி 

சமரி வர்ணகுலசூரிய (55 கிலோ.கி), ஹன்சனி கோமஸ் (49 கிலோ கி), ஸ்ரீமாலி சமரகோன் (45 கிலோ. கி), நதீஷானி ராஜபக்ஷ (59 கிலோ கி), நிமாலி ஹப்புதென்ன (76 அதிக கிலோ.கி) மற்றும் சதுரிகா ப்ரியன்தி (76 கிலோ.கி), வி. ஆர்ஷிகா (64 கிலோ.கி)

மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க