வட மாகாண கூடைப்பந்தாட்ட சம்பியன்களாக யாழ் மாவட்டம்

329

43ஆவது தேசிய விளையாட்டு விழாவிற்கான அணிகளைத் தேர்வு செய்வதற்கான மூன்றாவது கட்ட போட்டிகளான மாகாண மட்ட போட்டிகள் நாடெங்கிலும் பரவலாக இடம்பெற்று வருகின்றது. வட மாகாண ரீதியிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள்  கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் கூடைப்பந்தாட்ட திடலில் இடம்பெற்றிருந்தன. 

கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்த தேசிய விளையாட்டு விழாவின் கூடைப்பந்தாட்ட போட்டியில் வட மாகாணத்தின் பிரதிநிதித்துவம் செய்த யாழ்ப்பாண அணியினர் மகளிர் பிரிவில் இரண்டாவது இடத்தினையும், ஆடவர் பிரிவில் மூன்றாவது இடத்தினையும் தமதாக்கியிருந்தனர். 

மாவட்ட தடகளப் போட்டிகளின் சம்பியனாகிய மண்முனை வடக்கு பிரதேச செயலக அணி

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுத் திருவிழாவினு….

ஆண்கள் பிரிவு 

முதலாவது போட்டியில் அரையிறுதிக் கனவுடன் முல்லைத்தீவு, கிளிநொச்சி அணிகள் போட்டியிட்டிருந்தன. இரு அணிகளும் சம்பியன்களான பலத்துடன் ஆடிய போதிலும் இரண்டாவது அரைப்பகுதியில் விரைவான ஆட்டத்தினை வெளிப்படுத்திய முல்லைத்தீவு அணி 48:36 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று கடந்த வருட இறுதிப்போட்டியாளரான வவுனியா அணிக்கெதிரான அரையிறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.

முதலாவது அரையிறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன்களான யாழ்ப்பாண அணியினை எதிர்த்து மோதிய மன்னார் அணியினரால் சற்றும் ஈடுகொடுக்க முடியவில்லை. போட்டியை 72:22 என வெற்றி பெற்ற யாழ்ப்பாண அணியினர் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றனர். 

வவுனியா, முல்லைத்தீவு அணிகள் மோதிய இரண்டாவது அரையிறுதி போட்டியின் ஆரம்பம் முதல் விறுவிறுப்பானதாக அமைந்தது. முதலாவது அரைப்பகுதியினை 36:32 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி முல்லைத்தீவு வீரர்கள் முன்னிலை பெற்றனர். பலத்த போராட்டத்தினை வெளிப்படுத்தி இரண்டாவது அரைப்பகுதியினை 27:26 என வவுனியா வீரர்கள் கைப்பற்றிய போதும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவதற்கு முதல் பாதியில் பெற்ற முன்னிலை முல்லைத்தீவு வீரர்களுக்கு போதுமாகவிருந்தது. வெற்றியை 03 புள்ளிகள் வித்தியாசத்தில் (62:59) தவறவிட்ட வவுனியா அணியினர் மன்னார் அணியை 58:35 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று மூன்றாவது இடத்தினை பெற்றுக்கொண்டனர்.

தீர்மானம் மிக்க இறுதிப்போட்டியில் பலம்வாய்ந்த யாழ்ப்பாண அணியின் ஆட்ட வேகத்திற்கும், திறனிற்கும் சற்றும் ஈடுகொடுக்க தடுமாறிய முல்லைத்தீவு அணியை 75:12 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்ற யாழ்ப்பாண வீரர்கள்  தொடர்ச்சியான இரண்டாவது இலகு வெற்றியுடன் வட மாகாண கூடைப்பந்தாட்ட சம்பியன்களாக மீண்டுமொருமுறை தம்மை நிலைநிறுத்திக்கொண்டனர். 

பெண்கள் பிரிவு 

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய நான்கு அணிகளினது பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற மகளிருக்கான தொடர்  நேரடியாக அரையிறுதி போட்டிகளுடனேயே ஆரம்பமாகியிருந்தது. 

அரையிறுதியை எதிர்பார்த்துள்ள இலங்கை அணிக்கு இறுதி வாய்ப்பு

உலகக் கிண்ணத் தொடரில் தங்களுடைய அரையிறு….

முதலாவது அரையிறுதிப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட அணியினை 18:05 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று மன்னார் மாவட்ட மங்கையர் இறுதிப்போட்டியில் தமது இடத்தினை உறுதி செய்தனர்.  மற்றைய அரையிறுதி போட்டியில் மிகவும் இளைய வீராங்கனைகளுடன் களமிறங்கியிருந்த கிளிநொச்சி அணியை 35:08 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று யாழ் மாவட்ட அணியினர் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றனர். 

இறுதிப்போட்டியில் மன்னார் மாவட்ட அணியை எதிர்கொண்ட யாழ் மாவட்ட அணியினர் 50:16 என்ற புள்ளிகள் அடிப்படையில் 34 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மீண்டுமொருமுறை சம்பியன்களாக முடிசூடினர். அதேவேளை 08:04 என்ற புள்ளிகள் கணக்கில் கிளிநொச்சி அணியை வெற்றிகொண்டு முல்லைத்தீவு வீராங்கனைகள் மூன்றாவது இடத்தினை தமதாக்கியிருந்தனர். 

 வட மாகாண கூடைப்பந்தாட்டத்தை பொறுத்தவரையில் கடந்த ஆண்டுகளைப் போலவே, இம்முறையும் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஆதிக்கம் தொடர்கின்றது. அண்மைக்காலமாக தேசிய விளையாட்டு விழாவில் பலமான அணிகளான மேல் மாகாணம், கிழக்கு மாகாண அணிகளுக்கு அதிர்ச்சியும் அழுத்தமும் கொடுத்து வருகின்ற அணியாக வட மாகாண அணி விளங்குகின்றது. இந்நிலை இம்முறையும் தொடரும் என்பதிலும் எவ்வித ஐயமுமில்லை என்பதை வட மாகாண வீரர்கள் மற்றும் விளையாட்டுத்துறையினர் நிச்சயமாக பெருமைப்படவேண்டிய விடயம். 

அதே நேரத்தில், வட மாகாணத்தில் கூடைப்பந்தாட்டத்தினுடைய வளர்ச்சியின் பரம்பலை நோக்குகையில், யாழ் மாவட்டத்தில் அதிலும் குறிப்பாக நகரை அண்டிய பகுதிகளில் மாத்திரமே திருப்திகரமானதாக அமைந்துள்ளது. இதற்கு சான்றாக இன்றைய போட்டிகளின் முடிவுகளை எடுத்துக்கொள்ளலாம். 

இனிவரும் காலங்களில் இந்நிலை தொடராது கூடைப்பந்தாட்டத்தை மாகாணத்தின் சகல பகுதிகளிலும் அபிவிருத்தி செய்வதற்குரிய நடவடிக்கையை சங்கங்களும், அதிகாரிகளும் மேற்கொள்ளும் பட்சத்தில் கூடைப்பந்தாட்டத்தினது வட்டம் வடக்கில் பெரிதாகுவது மாத்திரமன்றி தேசிய ரீதியில் வடக்கின் கூடைப்பந்தாட்ட ஆதிக்கத்தினையும் அதிகரித்துக்கொள்ள முடியும் என்பது உறுதி.

Tamil – ThePapare.com

ThePapare.com Tamil – Live Sri Lanka Cricket sports ……

 மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க