கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் நாளை முதல் சுகததாஸ விளையாட்டரங்கில்

397

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 56 ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் நாளை (23) முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நவீன மயப்படுத்தப்பட்ட கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பாமகவுள்ளது.

ஒவ்வொரு வருடமும் கனிஷ்ட வீரர்களுக்காக நடத்தப்படுகின்ற முக்கியமான தொடராக இது கருதப்படுவதுடன், கடந்த காலங்களைக் போன்று இம்முறையும் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் அதிகளவான வீரர்கள் கலந்துகொள்கின்றனர். எனவே, இம்முறை போட்டித் தொடர் அதிகளவு போட்டித் தன்மை கொண்டதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்படி, இம்முறை போட்டித் தொடரில் நாடளாவிய ரீதியில் இருந்து 2520 வீர, வீராங்கனைகள் 130 தங்கப் பதக்கங்களுக்காக போட்டியிடவுள்ளனர். அத்துடன், 16, 18, 20 மற்றும் 23 ஆகிய வயதுப் பிரிவுகளுக்காக தொடர்ந்து 4 நாட்களுக்கு நடைபெறவுள்ள இம்முறை போட்டித் தொடரில் 16 மற்றும் 18 வயதுப் பிரிவுகளில் அதிகளவான வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளதுடன், 20 மற்றும் 23 வயதுப் பிரிவுகளில் வீராங்கனைகளின் பங்குபற்றல் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்கள் எதிர்வரும் மே மாதம் 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடர் மற்றும் எதிர்வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை ஜப்பானின் புஜி நகரில் நடைபெறவுள்ள ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடர் என்பவற்றில் பங்கேற்பதற்கான வாய்ப்பையும் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

80 வருடங்களின் பின் பொதுநலவாய போட்டி வரலாற்றில் சிறப்பித்த இலங்கை

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஜுலை மாதம் பின்லாந்தில் நடைபெறவுள்ள உலக கனிஷ்ட மெய்வல்லுனர் தொடர் மற்றும் ஆர்ஜென்டீனாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மூன்றாவது தடவையாக நடைபெறவுள்ள கோடைகால இளையோர் (18 வயதுக்கு உட்பட்ட) ஒலிம்பிக் போட்டிகளுக்கான வீர வீராங்கனைகளை தெரிவு செய்வதற்கான தகுதிகாண் போட்டியாகவும் இப்போட்டித் தொடர் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த காலங்களைப் போன்று இம்முறை போட்டித் தொடரிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிலும் குறிப்பாக, தேசிய மட்டப் போட்டிகளில் கோலூன்றிப் பாய்தல், தட்டெறிதல், ஈட்டி எறிதல் மற்றும் குண்டு எறிதல் உள்ளிட்ட மைதான நிகழ்ச்சிகளில் அண்மைக்காலமாக தமது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டி வருகின்ற வட பகுதியைச் சேர்ந்த வீர, வீராங்கனைகளும், சுவட்டு மைதான நிகழ்ச்சிகளில் தமது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்ற கிழக்கு மாகாண வீரர்களும் நவீனமயப்படுத்தப்பட்ட சுகததாஸ விளையாட்டரங்கில் தமது திறமைகளை வெளிப்படுத்தி புதிய சாதனைகளை படைப்பார்கள் என நம்பப்படுகின்றது.

 

சாதனை நாயகி அனித்தா

இலங்கையின் மெய்வல்லுனர் அரங்கில் கோலூன்றிப் பாய்தலின் இளவரசியாக வர்ணிக்கப்படும் வட மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன், இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் தனது சொந்த சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் பழைய மாணவியான அனித்தா, கடந்த வருடம் நடைபெற்ற 43 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் 3.48 மீற்றர் உயரத்தைத் தாவி ஒரே வருடத்தில் தொடர்ச்சியாக 4 ஆவது முறையாகவும் தேசிய சாதனையை முறியடித்த வீராங்கனையாக வரலாற்றில் இடம்பிடித்தார்.

எனவே, இதுவரை காலமும் புற்தரை மைதானங்களில் விளையாடி வந்த அனித்தாவுக்கு இம்முறை நவீனமயப்படுத்தப்பட்ட சுகததாஸ செயற்கைத் தள ஓடுபாதையில் பாய்வதற்கான வாய்ப்பு கிட்டவுள்ளதுடன், இந்த முறை அவர் புதிய சாதனையுடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இந்துனேஷியாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவுக்கான அடைவுமட்டத்தை பூர்த்தி செய்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியிலிருந்து 12 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தல் மற்றும் கோலூன்றிப் பாய்தல் போட்டிகளில் சந்திரகுமார் ஹெரினாவும், 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் எஸ். டிலக்ஷனும் திறமைகளை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.


நெப்தலியின் அடுத்த இலக்கு

அண்மைக்காலமாக நடைபெற்று வருகின்ற தேசிய மட்டப் போட்டிகளில் 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டிகளில் தொடர்ச்சியாக தங்கப் பதக்கங்களை யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவர்கள் வென்று வருகின்றனர்.

பொதுநலவாய பதக்கம் வென்றவர்களுக்கு 19 மில்லியன் பணப்பரிசு

அதிலும் குறிப்பாக, இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் பாடசாலை மெய்வல்லுனர் போட்டிகளில் அதிக தங்கப் பதக்கங்களை வென்ற வீரர்களின் பட்டியலில் முன்னிலையில் உள்ள வீரராக திகழ்கின்ற யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியின் நெப்தலி ஜொய்சன் தொடர்பில் அதிக எதிர்பார்ப்பு வைக்கப்பட்டுள்ளது.

இறுதியாக கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 4.45 மீற்றர் உயரம் தாவி புதிய பாடசாலை வர்ண சாதனையுடன் தங்கப் பதக்கத்தை நெப்தலி வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த வருடம் நடைபெற்ற பாடசாலை விளையாட்டு விழாவில் அளவெட்டி அருணோதயா கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் முதல் தடவையாக தங்கப்பதக்கம் வென்ற வி. சத்விகா மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற ஆர். யதூஷன் தொடர்பிலும் இம்முறை அதிக எதிர்பார்ப்புகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


சாவகச்சேரியின் நம்பிக்கை நட்சத்திரங்கள்

அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் கோலூன்றிப் பாய்தலில் கனிசமான வெற்றிகளைப் பதிவு செய்துவருகின்ற பாடசாலையாக யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியை குறிப்பிட முடியும். இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் அக்கல்லூரியிலிருந்து 10 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

அதிலும் குறிப்பாக, அக்கல்லூரிக்காக பதக்கங்களை பெற்றுக்கொடுக்கின்ற முதன்மை வீரர்களாக 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் ஆ. புவிதரனும், 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் மற்றும் ஈட்டி எறிதலில் பங்குபற்றவுள்ள சந்திரசேகரன் சங்கவியும், அதே பிரிவில் போட்டியிடவுள்ள N. டக்சிதாவும் விளங்குகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2 வருடங்களாக 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வெண்கலப் பதக்கங்களை வென்ற சாவகச்சேரி இந்து கல்லூரியின் பாலசுப்ரமணியம் கிரிஜாவும் இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் சக வீராங்கனைகளுக்கு போட்டியாக இருப்பார் என நம்பப்படுகின்றது.


வரலாறு படைக்கவுள்ள ஹார்ட்லி வீரர்கள்

அண்மைக்காலமாக தேசிய மற்றும் அகில இலங்கை பாடசாலை மட்டப் போட்டிகளில் வட மகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி மைதான நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற முதன்மை பாடசாலையாக யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி விளங்குகின்றது.

இதேநேரம், இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் மைதான நிகழ்ச்சிகளுக்காக 7 வீரர்களைக் கொண்ட பலம் மிக்க அணியொன்றை ஹார்ட்லி கல்லூரி களமிறக்குகின்றது.

ஹார்ட்லி கல்லூரியின் அனுபவமிக்க வீரர்களில் ஒருவராக விளங்குகின்ற எஸ். பிரகாஷ்ராஜ், 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதலில் கலந்துகொள்ளவுள்ள அதேநேரம், சிறந்த பெறுபேறுகளைப் பெற்று இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இவ்வருடம் நடைபெறவுள்ள தெற்காசிய மற்றும் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர்களில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், யாழ். ஹார்ட்லி கல்லூரிக்காக அண்மைக்காலமாக மைதான நிகழ்ச்சிகளில் பதக்கங்களை வென்று வருகின்ற மற்றுமொரு முக்கியமான வீரராக மிதுன் ராஜ் திகழ்கிறார். குண்டு எறிதல், ஈட்டி எறிதல் மற்றும் தட்டெறிதல் ஆகிய மூவகை போட்டிகளிலும்  வெற்றிகளைப் பதிவு செய்து வருகின்ற அவர், கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா மற்றும் ஜோன் டார்பட் கனிஷ்ட மெய்வல்லுனரில் 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்ததுடன், ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.

2020 இல் தியகமவில் சர்வதேச தரத்திலான விளையாட்டுத் தொகுதி

இதேவேளை, கடந்த வருடம் நடைபெற்ற பாடசாலை விளையாட்டு விழாவில் முதல் தடவையாக கலந்துகொண்டு குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற யாழ். ஹார்ட்லி கல்லூரியின் ரகுராஜா சன்ஜேயும், இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் பிரகாசிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.


அதிவேக வீரராகும் கனவுடன் களமிறங்கும் சபான்

2013 ஆம் ஆண்டு முதல் அகில இலங்கை பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் அம்புக்காகம முஸ்லிம் மஹா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப்பந்தயங்களில் பங்குபற்றி வெற்றிகளைப் பதிவு செய்து வருகின்ற சபான், கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் வருடத்தின் அதிவேக பாடசாலை வீரராகும் வாய்ப்பை தவறவிட்டு 2 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்போட்டியை 21.61 செக்கன்களில் நிறைவுசெய்து, முதலிடத்தைப் பெற்று மீண்டும் அசத்தினார்.

இந்நிலையில், சபானுக்கு பலத்த போட்டியைக் கொடுத்து போட்டியை 21.63 செக்கன்களில் நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்ற அகுரம்பொட வீரகெப்பெட்டிப்பொல தேசிய பாடசாலையின் அருண தர்ஷன, இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் சபானுக்கு சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.


கிழக்கிலிருந்து வீரர்களின் வீழ்ச்சி

அண்மைக்காலமாக தேசிய மட்டத்தில் பல நட்சத்திர மெய்வல்லுனர் வீரர்களை உருவாக்கி வருகின்ற கிழக்கு மாகாணம், அகில இலங்கை பாடசாலை மட்டத்தில் மிகப் பெரிய பின்னடைவை எதிர்நோக்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகளில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எந்தவொரு வீரர்களும் வெற்றிகளைப் பெற்றுக் கொள்ளவில்லை

இந்நிலையில், கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் கிண்ணியா முள்ளிபொத்தானை மத்திய கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் வெண்கலப் பதக்கம் வென்ற ஏ. ஆபித் மற்றும் அதே பாடசாலையைச் சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் கலந்துகொண்ட எம். ரிஹான் ஆகிய வீரர்கள் இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளனர்.

எனினும், 100, 200, 400 மற்றும் 110 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டிகளுக்காக கிழக்கு மாகாணத்திலிருந்து அதிகளவு வீரர்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.