இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்ற 48ஆவது சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 2ஆவது நாளான இன்றைய தினம் 9 போட்டி சாதனைகள் நிகழ்த்தப்பட்ட அதேநேரம், 4 போட்டி சாதனைகள் சமப்படுத்தப்பட்டதுடன், 7 போட்டி சாதனைகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டன.

இதில் சுவட்டு மைதான நிகழ்ச்சிகளில் 7 சாதனைகளும், மைதான நிகழ்ச்சிகளில் 2 சாதனைகளும், நிகழ்த்தப்பட்டதுடன், யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ். மிதுன் ராஜ், 15 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதலில் புதிய போட்டி சாதனை நிகழ்த்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதன்படி, ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரின் முதல் நாளான நேற்றைய தினம் (08) 15 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான தட்டெறிதல் மற்றும் 13 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தல் மற்றும் 14 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 80 மீற்றர் சட்டவேலி ஓட்டம் ஆகிய போட்டிகளில் 3 புதிய போட்டி சாதனைகள் நிலை நாட்டப்பட்டதுடன், இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் 12 போட்டி சாதனைகள் முறியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மிதுனின் புதிய சாதனையுடன், மிதுஷானுக்கு 3ஆவது இடம்

48ஆவது சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இரண்டவாது நாளான இன்று (09) நடைபெற்ற 15 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ்.மிதுன் ராஜ் புதிய போட்டி சாதனை படைத்தார்.

சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனரில் ஹார்ட்லி மாணவன் மிதுன் புதிய போட்டி சாதனை

இப்போட்டித் தொடரின் முதல் நாளான நேற்று நடைபெற்ற 15 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் கலந்துகொண்ட மிதுன் ராஜ், வெண்கலப்பதக்கம் வென்று அக்கல்லூரிக்காக முதல் பதக்கத்தை வென்று கொடுத்திருந்தார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற 15 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் கலந்துகொண்ட மிதுன் ராஜ், 53.23 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய போட்டி சாதனை நிகழ்த்தினார். முன்னதாக 2014ஆம் ஆண்டு சிலாபம் ஆனந்த கல்லூரியைச் சேர்ந்த ரவின் ருமேஷ்க, 46.28 மீற்றர் தூரத்தை எறிந்து நிலைநாட்டிய சாதனையை சுமார் 2 வருடங்களுக்குப் பின் மிதுன் ராஜ் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த போட்டியில் யாழ். ஹார்ட்லி கல்லூரி சார்பாக போட்டியிட்ட மற்றுமொரு வீரரான பிரேம்குமார் மிதுஷன், 43.43 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப்பதக்கம் வென்றார். இதன்படி 3 வீரர்களுடன் இம்முறை போட்டித் தொடரில் களமிறங்கிய யாழ். ஹார்ட்லி கல்லூரி, இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் ஒரு தங்கம் மற்றும் 2 வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளது.

ஒரே போட்டியில் இரு புதிய சாதனைகள்

14 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 80 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் இரத்தினபுரி சுமனா மகளிர் வித்தியாலயத்தைச் சேரந்த டி. கஹங்கம, இரு தடவைகள் போட்டி சாதனைகளை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டினார்.

இதில் நேற்று நடைபெற்ற 14 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 80 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தின் அரையிறுதிப் போட்டியில் பங்குபற்றிய கஹங்கம, 12.9 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து 1996ஆம் ஆண்டு கொழும்பு விசாகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கிரிஷாந்தி ஜயதிலக்க மற்றும் 2014ஆம் ஆண்டு கண்டி ஸ்வர்ணபாலி பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த கே. தென்னகோன் ஆகியோரால் (13.6 செக்கன்கள்) நிலைநாட்டிய சாதனையை சுமார் 21 வருடங்களுக்குப் பிறகு முறியடித்து புதிய போட்டி சாதனை நிகழ்த்தியிருந்தார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட கஹங்கம, குறித்த போட்டியை 12.7 செக்கன்களில் நிறைவுசெய்து 2ஆவது தடவையாகவும் புதிய போட்டிச் சாதனையை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொடகவெல குலரத்ன மத்திய கல்லூரியைச் சேர்ந்த டி விஜயகுமார போட்டியை 13.1 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப்பதக்கத்தையும், கொழும்பு மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மைத்திரி பீரிவஸ் போட்டியை 13.5 செக்கன்களில் நிறைவுசெய்து வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர். எனினும் குறித்த இரு வீராங்கனைகளும் முன்னை போட்டி சாதனையை முறியடித்திருந்ததுடன், போட்டியை 13.7 செக்கன்களில் நிறைவுசெய்து 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட இரத்தினபுரி சுமனா மகளிர் கல்லூரியைச் சேர்ந்த சத்சரனி, முன்னைய போட்டி சாதனையை சமப்படுத்தியும் இருந்தார்.

ருவன்சாவின் 2ஆவது போட்டி சாதனை

சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் வரலாற்றில் சுமார் 23 வருடங்களுக்குப் பிறகு நேற்று நடைபெற்ற 13 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தலில் புதிய போட்டி சாதனை நிகழ்த்திய நாவல ஜனாதிபதி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த ருவன்சா வீரக்கொடி, இன்று நடைபெற்ற பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் புதிய போட்டி சாதனை படைத்தார்.

குறித்த போட்டியை 26.7 செக்கன்களில் ஓடி முடித்து அவர் இந்த புதிய மைல்கல்லை எட்டினார்.

முன்னதாக 2008ஆம் ஆண்டு மாத்தளை ஸ்ரீ சங்கமித்த மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மெதானி விக்ரமநாயக்க, 28.8 செக்கன்களில் ஓடி முடித்து நிலைநாட்டிய சாதனையை சுமார் 9 வருடங்களுக்குப் பிறகு ருவன்சா வீரக்கொடி முறியடித்தார்.

இந்நிலையில், போட்டியை 28.1 செக்கன்களில் நிறைவு செய்த நைனாமடம ஜெனின்ங்ஸ் சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த ஆர். தனனி வெள்ளிப்பதக்கத்தையும், போட்டியை 28.2 செக்கன்களில் நிறைவு செய்த நுகேகொடை லைசியம் சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த ஷனெல்லா செனவிரத்ன வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.

அத்துடன் இப்போட்டியில் 2 முதல் 5ஆவது வரையான இடங்களைப் பெற்றுக்கொண்ட வீராங்கனைகள் முன்னைய சாதனையை முறியடித்திருந்ததுடன், 28.8 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட மாத்தளை விஜய தேசிய பாடசாலையைச் சேர்ந்த எஸ். விஹங்கா, முன்னைய சாதனையை சமப்படுத்தியும் இருந்தார்.

80 மீற்றர் சட்டவேலியில் மேலும் இரு புதிய சாதனைகள்

இன்று காலை நடைபெற்ற 13 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 80 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் திக்வெல்ல விஜித மத்திய கல்லூரியைச் சேர்ந்த தருஷ ஹன்சிகா புதிய போட்டி சாதனை நிகழ்த்தினார். அவர் குறித்த போட்டியை 13.9 செக்கன்களில் நிறைவுசெய்திருந்ததுடன், இம்முறை போட்டித் தொடரில் தனது 2ஆவது பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக, நேற்று நடைபெற்ற 13 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தலில் அவர் வெள்ளிப்பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனரில் 3 போட்டி சாதனைகள்

எனினும், 2003ஆம் ஆண்டு கொழும்பு புனித பிரிட்ஜட்ஸ் கன்னியாஸ்திரிகள் மடத்தைச் சேர்ந்த எஸ். மஹலியன, 14.4 செக்கன்களில் ஓடி முடித்து நிலைநாட்டிய சாதனையை சுமார் 14 வருடங்களுக்குப் பிறகு தருஷ ஹன்சிகா முறியடித்தார்.

இதேவேளை, 14 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 80 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் கலந்துகொண்ட மாத்தறை ராஹுல கல்லூரியைச் சேர்ந்த நதிவ் துல்னித், போட்டியை 11.5 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய போட்டி சாதனை படைத்தார்.

முன்னதாக கடந்த வருடம் நடைபெற்ற ஜோன் டார்பட் போட்டியில் பேராதனை ரணபிம றோயல் கல்லூரியைச் சேர்ந்த பி. கருணாரத்னவால் (11.7 செக்கன்கள்) நிகழ்த்தப்பட்ட சாதனையை அவர் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 11.7 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து முன்னைய சாதனையை சமப்படுத்திய இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியைச் சேர்ந்த எஸ். சிரிவர்தன வெள்ளிப்பதக்கத்தையும், 12.0 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த மாத்தறை ராஹுல கல்லூரியைச் சேர்ந்த ஜி. நாணயக்கார வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.

நீளம் பாய்தல், 800 மீற்றரில் புதிய சாதனை

15 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தலில் திக்வெல்ல விஜித கல்லூரியைச் சேர்ந்த சதுனி கவீசா புதிய போட்டி சாதனை படைத்தார். அவர் குறித்த போட்டியில் 5.47 மீற்றர் தூரம் பாய்ந்து இம்மைல்கல்லை எட்டினார். முன்னதாக 2015ஆம் ஆண்டு கம்பஹா திருச்சிலுவைக் கல்லூரியைச் சேர்ந்த பிரசாதி லக்‌ஷானி(5.32 மீற்றர்) நிலைநாட்டியிருந்த சாதனையை சதுனி முறியடித்தார்.

இந்நிலையில், 15 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் மாதம்பை டி. எஸ் சேனநாயக்க கல்லூரியைச் சேர்ந்த அவிஷ்க குருசிங்க, போட்டியை 2 நிமிடங்களும் 04.9 செக்கன்களில் நிறைவுசெய்து ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் 4 வருடங்களுக்குப் பிறகு புதிய போட்டி சாதனை நிகழ்த்தினார்.

முன்னதாக 2013ஆம் ஆண்டு களனி குருகுல கல்லூரியைச் சேர்ந்த இமல்க சஞ்சன(2 நிமிடங்களும் 05.29 செக்கன்கள்) நிலைநாட்டிய சாதனையை அவர் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

200 மீற்றரில் 2 சாதனைகள் நிலைநாட்டல்

இன்று காலை நடைபெற்ற 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் மேலும் 2 புதிய போட்டி சாதனைகளும், ஒரு போட்டி சாதனையும் நிகழ்த்தப்பட்டன.

இதில் 15 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் காலி மஹிந்த கல்லூரியைச் சேர்ந்த எச்.எஸ் மல்வான்ன புதிய போட்டி சாதனை படைத்தார். குறித்த போட்டியை 22.6 செக்கன்களில் நிறைவுசெய்த அவர், கடந்த 2015ஆம் ஆண்டு சிலாபம் புனித மரியாள் கல்லூரியைச் சேர்ந்த மிலிந்த பெரேராவினால்(22.8 செக்கன்கள்) நிகழ்த்திய சாதனையை இவ்வாறு முறியடித்தார்.

இந்நிலையில், 14 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட கொழும்பு ஆனந்த மகளிர் கல்லூரியைச் சேர்ந்த ஜி. விஜேதுங்க, 26.4 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து புதிய போட்டி சாதனை நிகழ்த்தினார். முன்னதாக கடந்த 2013ஆம் ஆண்டு கொழும்பு மியூசியஸ் கல்லூரியைச் சேர்ந்த செந்தாரு பெரேரா நிகழ்த்திய சாதனையை அவர் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2018ஆம் ஆண்டில் அதிக போட்டிகளில் பங்கேற்கவுள்ள இலங்கையின் தடகள வீரர்கள்

இதேவேளை, 13 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றர் போட்டியில் கலந்துகொண்ட கேகாலை ஸ்வர்ன ஜயந்தி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த ஜி. விக்ரமசிங்க முன்னைய போட்டி சாதனையை சமப்படுத்தினார்.

1993 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் மருதானை புனித ஜோசப் மற்றும் கல்கிஸ்சை புனித தோமியர் கல்லூரிகளைச் சேர்ந்த சுஹிரன் ஹெட்டியாரச்சி, ஆர். மகலந்த அகிய வீரர்களினால் (25.6 செக்கன்கள்) நிகழ்த்தப்பட்ட சாதனையை அவர் இவ்வாறு மீண்டும் சமப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை போட்டித் தொடரின் 3ஆவதும் கடைசி தினமான நாளை அஞ்சலோட்டம் உள்ளிட்ட 30 போட்டிகளுக்கான இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், வருடத்தின் சிறந்த கனிஷ்ட வீரர் மற்றும் வீராங்கனைக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளது. அத்துடன், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளுக்காக 8 சம்பியன் பட்டங்களை வழங்குவதற்கும் போட்டி ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.