உபாதையுடன் போட்டியிட்ட நிமாலிக்கு கடைசி இடம் : வருணவுக்கு ஏமாற்றம்

150
Nimali & Waruna

லண்டனில் நடைபெற்றுவருகின்ற உலக மெய்வல்லுனர் தொடரின் 7ஆம் நாளான நேற்றைய தினம் இடம்பெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை சார்பாக களமிறங்கிய நிமாலி லியானாரச்சி போட்டியின் தகுதிச் சுற்றுடன் வெளியேறியதுடன், ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் தகுதிச் சுற்றில் பங்கேற்ற வருண லக்ஷான், போட்டியின் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தார்.

இலங்கை நேரப்படி நேற்று நள்ளிரவு நடைபெற்ற இப்போட்டியின் 2ஆவது தகுதிச் சுற்றில் இடம்பெற்றிருந்த நிமாலி, 7ஆம் இலக்க சுவட்டில் ஓடி கடைசி இடத்தைப் பெற்றுக்கொண்டார். உபாதையுடன் ஓடிய அவர் குறித்த பந்தயத்தை 2 நிமிடங்கள் 08.49 செக்கன்களில் ஓடிமுடித்து அரையிறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை இழந்தார்.

வரலாற்றில் முதல் முறையாக தனிச் சுவட்டில் ஓடி சாதனை படைத்த மக்வாலா!

லண்டனில் நடைபெற்றுவரும் உலக மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பொட்ஸ்வானாவைச்..

இலங்கைகாக கடந்த இரு வருடங்களாக தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த நிமாலி, கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் சுமார் 22 வருடங்களின் பிறகு புதிய சாதனை படைத்தார்.

இதனையடுத்து கடந்த ஜுன் மாதம் சீனா மற்றும் சைனீஸ் தாய்ப்பேயில் நடைபெற்ற ஆசிய க்ரோன் ப்றீ மெய்வல்லுனர் போட்டிகளின் 2ஆவது மற்றும் மூன்றாவது சுற்றுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

எனினும், அண்மைக்காலமாக பல தடவைகள் உபாதைகளுக்கு மத்தியில் போட்டிகளில் பங்கேற்றிருந்த நிமாலிக்கு இம்முறை முதற்தடவையாக உலக மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டியது.

கடந்த மாதம் இந்தியாவின் ஒடிசாவில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கைக்காக ஒரேயொரு தங்கப் பதக்கத்தினை வென்று கொடுத்த நிமாலி, உலக மெய்வல்லுனர் போட்டிகளுக்கான அடைவுமட்டத்தை பூர்த்தி செய்யாத போதிலும், ஆசியாவில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டதால் உலக மெய்வல்லுனர் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அது போன்றே, நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குபற்றிய வருண லக்ஷான், வழங்கப்பட்ட 3 முயற்சிகளில் ஒன்றில் மாத்திரம் உரிய முறையில் 73.16 மீற்றர் தூரத்தை எறிந்தார். எனவே, அவர் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தார்.

29 வயதான வருண லக்ஷான், இவ்வருடம் ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டித் தொடரின் ஈட்டி எறிதலில் 82.19 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய தேசிய சாதனை நிகழ்த்தி உலக தரவரிசையில் 29ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். இதன்படி உலக மெய்வல்லுனர் போட்டித் தொடரில் முதற்தடவையாக பங்கேற்கும் வாய்ப்பை அவர் இறுதி நேரத்தில் பெற்றுக்கொண்டார்.

எனினும், கடந்த மாதம் இந்தியாவின் ஒடிசாவில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றிருந்த வருண லக்ஷானுக்கு எதிர்பார்த்தளவு திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போனது.

பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழாவில் இலங்கைக்கு 2 வெள்ளிப் பதக்கங்கள்

பஹாமாஸ், நசௌவ்வில் நிறைவுக்கு வந்த 6ஆவது பொதுநலவாய இளையோர்…

16ஆவது உலகமெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 4ஆம் திகதி லண்டனில் ஆரம்பமாகியது. 205 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான வீர வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இம்முறை போட்டித் தொடரில் இலங்கையிலிருந்து 2 வீரர்களும், 2 வீராங்கனைகளும் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் ஏற்கனவே இடம்பெற்று முடிந்த ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட அநுராத இந்திரஜித் குரே, 31 வினாடியும், 53 செக்கன்களில் மாத்திரம் போட்டியில் ஓடிய வேளையில், காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக குறித்த போட்டியை வெறுமனே 12 கிலோ மீற்றர் தூரத்துடன் நிறுத்திக்கொண்டார்.

இந்நிலையில், உலக மெய்வல்லுனர் போட்டிகளில் பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை முதற்தடவையாகப் பெற்றுக்கொண்ட அமெரிக்காவில் வசிக்கின்ற இலங்கை வீராங்கனையான ஹிருனி விஜேரத்ன, போட்டியில் 21 கிலோ மீற்றர் தூரத்தை நிறைவு செய்த பிறகு இடைநடுவில் ஏற்பட்ட தடங்கலினால் ஏற்பட்ட உபாதை காரணமாக துரதிஷ்டவசமாக வெளியேறினார். எனினும், குறித்த போட்டியில் சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கும் அதிகமான தூரம் ஓடிய பிறகு நிறைவு கம்பத்தை அண்மித்திருந்த ஹிருணிக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.

இலங்கை விளையாட்டுத்துறையில் அண்மைக்காலமாக கிரிக்கெட்டில் மாத்திரம் சூடுபிடித்திருந்த வீரர்களின் திடீர் உபாதைகள், தற்போது மெய்வல்லுனர் வீரர்களின் மத்தியிலும் பரவலாக ஏற்பட்டு வருகின்றமை விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.