தெற்காசிய நகர்வல ஓட்டத் தொடரில் வெண்கலம் வென்ற நிலானி மற்றும் லயனல்

113

பூட்டானில் இன்று (27) இடம்பெற்று முடிந்திருக்கும், தெற்காசிய நாடுகளுக்கான நகர்வல ஓட்டப் போட்டித் தொடரில், இலங்கையை பிரதிநிதித்துவம் செய்திருந்த நிலானி ரத்னநாயக்க மற்றும் லயனல் சமரஜீவ ஆகியோர் தனிநபருக்கான போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.

இத்தொடரில் பங்குபற்றிய இலங்கை சார்பான மகளிர் அணி, நகர்வலப் போட்டிகளின் ஒட்டுமொத்த (மகளிர்) அணிகளுக்குமான சம்பியன் பட்டத்தினை வெற்றி கொண்டதோடு, இலங்கை சார்பாக பங்குபற்றிய ஆண்கள் அணி இந்திய வீரர்களின் சிறந்த பெறுபேறுகள் காரணமாக ஓட்டுமொத்த அணிகளுக்கான நிலையில்  இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.

திம்பு நகரின் றோயல் கோல்ப் அரங்கில் முதன் முறையாக இடம்பெற்ற இந்த தெற்காசிய நகர்வல ஓட்டத் தொடரில் பங்களாதேஷ், இலங்கை, இந்தியா, நேபாளம், மாலைத்தீவுகள், பாகிஸ்தான் மற்றும் (தொடரை நடாத்துகின்ற) பூட்டான் ஆகிய நாடுகள் கலந்து கொண்டிருந்தன.

இந்த ஓட்டத் தொடரில் இலங்கை சார்பான ஆண்கள் அணியில் மூன்று பேரும், பெண்கள் சார்பான அணியில் நான்கு பேரும் பங்குபற்றியிருந்தனர். ஆசிய நகர்வல ஓட்டத் தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்திருந்த சமந்த புஷ்பகுமார, அதில் பங்குபற்றியிருந்த போது ஏற்பட்ட உபாதையின் காரணமாக முதல் தடவையாக இடம்பெறும் இந்த நகர்வல ஓட்டத் தொடரில் பங்கெடுக்கும் வாய்ப்பினை இழந்திருந்தார்.

பொதுநலவாய விளையாட்டில் தேசிய கொடியை ஏந்தும் பளுதூக்கல் வீரர்!

சமந்த புஷ்பகுமாரவுடன், ஆசிய நகர்வல ஓட்டத் தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்த வீராங்கனையான நிலானி ரத்நாயக்க, இப்போதைய தொடரில் வெண்கலப் பதக்கம் வென்றிருப்பதோடு இலங்கை சார்பான மகளிர் அணி ஒட்டுமொத்த அணிகளுக்குமான சம்பியன் பட்டத்தை வெற்றிகொள்ளவும் பெரும் பங்காற்றியிருக்கின்றார். இலங்கை மகளிர் குழாமில் காணப்பட்ட ஏனைய வீராங்ககனைகளான அனுஷா லாமஹேவா நான்காம் இடத்தினையும், லக்மினி அனுராதி ஆறாம் இடத்தினையும் தொடரில் பெற்றிருக்கின்றனர்.

ஆண்கள் சார்பான அணியில் முன்னணி ஓட்ட வீரரான லயனல் சமரஜீவ வெண்கலம் வென்று தெற்காசிய நகர்வல ஓட்டத் தொடருக்கான இலங்கை குழாமில் சிறந்த பதிவை வைத்திருக்கின்றார். சமரஜீவ இதற்கு முன்னர் 43ஆவது தடவையாக இடம்பெற்றிருந்த தேசிய நகர்வல ஓட்டப் போட்டித் தொடரின் சம்பியன் பட்டம் வென்றதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை சார்பாக தொடரில் பங்குபற்றிய ஏனைய வீரர்களான S. சந்திரதாசன் நான்காம் இடத்தையும், D. எரந்த ஐந்தாம் இடத்தையும் பெற்றிருந்தனர். இந்திய வீரர்கள் இருவர்கள் இந்த நகர்வலத் தொடரின் முதல் இரண்டு இடங்களையும் பெற்றுக் கொண்டதனால், இலங்கை சார்பான ஆண்கள் அணி ஒட்டுமொத்த அணிக்கான தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.