கடைசி இரண்டு ஓவர்களிலும் தனது துடுப்பாட்டத்தால் சாகசம் நிகழ்த்திய தினேஷ் கார்த்திக் பங்களாதேஷுடனான இறுதிப் போட்டியில் திரில் வெற்றி ஒன்றை பெற்று இந்திய அணிக்கு சுதந்திரக் கிண்ணத்தை வென்று கொடுத்தார்.

கடைசி இரண்டு ஓவர்களுக்கும் இந்திய அணி 34 ஓட்டங்களைப் பெறவேண்டிய நிலையில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 19ஆவது ஓவரில் 22 ஓட்டங்களை விளாசியதோடு வெற்றிபெற கடைசி பந்துக்கு 5 ஓட்டங்களை எடுக்க வேண்டிய நிலையில் சிக்ஸர் ஒன்றை பெற்றார்.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) இரவு நடைபெற்ற சுதந்திரக் கிண்ண T20 முத்தரப்பு இறுதிப் போட்டியில் இந்திய அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கி இருந்தது. கடந்த போட்டியில் 50 ஓட்டங்களை விட்டுக் கொடுத்த மொஹமது சிராஜ் நீக்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட் மீண்டும் அணிக்கு திரும்பினார். குறிப்பாக இந்த தொடரில் ஸ்திரமான அணியாகவே இந்திய அணி காணப்பட்டது. அந்த அணியின் 10 வீரர்கள் அனைத்து போட்டிகளிலும் இடம்பிடித்தனர்.  

மறுபுறம் கடந்த வெள்ளிக்கிழமை (16) இலங்கையுடனான போட்டியில் வென்ற அதே பங்களாதேஷ் அணியே இறுதிப் போட்டியிலும் கலந்துகொண்டது. அதாவது அந்த போட்டியில் ஒரு பந்துகூட வீசாத இடதுகை சுழல் பந்து வீச்சாளர் நஸ்முல் இஸ்லாம் இந்தப் போட்டியிலும் சிறப்பு பந்து வீச்சாளராக களமிறங்கியதோடு தொடரில் சோபிக்கத் தவறிவரும் சௌம்யா சர்கரும் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.   

சுதந்திர கிண்ண டி20 இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ்

இந்நிலையில் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித் தலைவர் ரோஹித் ஷர்மா முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார். தொடரின் ஆறு லீக் போட்டிகளில் ஐந்தில் இரண்டாவதாக துடுப்பாடிய அணிகளே வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான தமிம் இக்பால் மற்றும் லிடோன் தாஸ் ஓட்டங்களை அதிகரிக்க முயன்றபோதும் இருவரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். முதல் வரிசையில் வந்த சப்பிர் ரஹ்மான் முகம் கொடுத்த முதல் நான்கு பந்துகளுக்கு ஓட்டம் பெறத் தடுமாறிய நிலையில் அடுத்த பந்துக்கு பவுண்டரி ஒன்றை விளாசி தனது ஓட்ட எண்ணிக்கையை ஆரம்பித்தார்.

மறுமுனையில் விக்கெட்டுகள் முக்கியமான தருணங்களில் பறிபோனபோதும் சப்பிர் ரஹ்மான் நின்றுபிடித்து வேகமாக ஓட்டங்களை குவித்தார். மீண்டும் ஒருமுறை சோபிக்கத் தவறிய செம்யா சர்கர் ஒரு ஓட்டத்துடன் வெளியேறியதோடு தொடரில் சோபித்து வந்த முஷ்பிகுர் ரஹிமால் 9 ஓட்டங்களையே பெற முடிந்தது. இதனால் பங்களாதேஷ் அணி 68 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்ததோடு முதல் 10 ஓவர்களுக்கும் 6.80 என்ற ஓட்ட வேகத்தையே பெற்றது.

எனினும் அடுத்து வந்த மஹ்முதுல்லாஹ் 5ஆவது விக்கெட்டுக்கு சப்பிர் ரஹ்மானுடன் இணைந்து பெற்ற 38 ஓட்ட இணைப்பாட்டமும் அந்த அணி 100 ஓட்டங்களை தாண்ட உதவியது. குறிப்பாக மஹ்முதுல்லாஹ் 4 ஓட்டங்களை பெற்றபோது பங்களாதேஷ் அணிக்காக T20 சர்வதேச போட்டிகளில் 1000 ஓட்டங்களைப் பெற்ற நான்காவது வீரராக பதிவானார். இதற்கு முன்னர் தமிம் இக்பால், ஷகிப் அல் ஹஸன் மற்றும் முஷ்பிகுர் ரஹிம் ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

எனினும் மஹ்முதுல்லாஹ் 16 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 21 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சப்பிர் ரஹ்மான் தொடர்ந்து அதிரடியாக ஆடி தனது 4ஆவது T20 அரைச் சதத்தை பெற்றார்.

பங்களாதேஷ் அணி கடைசி ஓவர்களில் வேகமாக விக்கெட்டுகளை பறிகொடுத்தபோதும் அதற்கு ஏற்ப வேகமாக ஓட்டங்களையும் சேகரித்தது. 19 ஆவது ஓவரில் பங்களாதேஷ் 3 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தபோதும், கடைசி ஓவரில் மஹ்தி ஹசன் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை விளாச அந்த ஓவரில் மொத்தம் 18 ஓட்டங்கள் பெறப்பட்டது.

இதன் மூலம் பங்களாதேஷ் அணி 20 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை குவித்தது. சப்பிர் ரஹ்மான் 50 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களுடன் 77 ஓட்டங்களை பெற்றார். கடைசி நேரத்தில் மஹ்தி ஹசன் 7 பந்துகளில் ஆட்டமிழக்காது 19 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி சார்பில் யுஸ்வேந்தர் சஹால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு ஜெய்தேவ் உனத்கட் 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் சஹாலுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருக்கும் 18 வயதுடைய வொஷிங்டன் சுந்தர் (8 விக்கெட்டுகள்) இந்த போட்டியில் ஒரு விக்கெட்டையே வீழ்த்தினார்.    

கிரிக்கெட் உலகிற்கு மோசமான நடத்தைகளை வெளிக்காட்டிய பங்களாதஷ் வீரர்கள்

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பாடக் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் பெரிதாக நெருக்கடி இன்றி ஓட்டங்களை சேகரித்தது. மஹிதி ஹசன் வீசிய இரண்டாவது ஓவரில் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசினார்.

எனினும் மறுமுனையில் துடுப்பாடிய ஷிகர் தவான் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததோடு அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா வைட் திசையில் செல்லும் பந்துக்கு துடுப்பை செலுத்தி விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஓட்டமின்றியே வெளியேறினார்.

ரோஹித் ஷர்மாவும் லோகேஷ் ராகுலும் ஸ்திரமாக ஆடிவந்தபோதும் ராகுல் 14 பந்துகளில் 24 ஓட்டங்களை எடுத்து வெளியேறினார். இந்நிலையில் தேவைப்படும் ஓட்ட வேகம் உயர்ந்து கொண்டுபோக ரோஹித் ஷர்மா வேகமாக துடுப்பெடுத்தாட முயன்றார். இதனால் நஸ்முல் இஸ்லாம் வீசிய பந்தை சிக்ஸரை நோக்கி செலுத்த அது பவுண்டரி எல்லையில் பிடியெடுப்பாக மாறியது. 42 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 56 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்திய அணி ஓட்ட வேகத்திற்கு ஏற்ப துடுப்பெடுத்தாட தடுமாறியது. குறிப்பாக 18 பந்துகளுக்கு 35 ஓட்டங்களைப் பெறவேண்டிய நிலையில் முஸ்தபிசுர் ரஹ்மான் வீசிய 18 ஆவது ஓவர் இந்திய அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அந்த ஓவரின் முதல் நான்கு பந்துகளுக்கும் ஒரு ஓட்டத்தை கூட பெற முடியாமல் விஜே ஷங்கர் தடுமாறினார். தொடர்ந்து ஓவரின் கடைசி பந்தில் சிறப்பாக துடுப்பாடி வந்த மனிஷ் பாண்டே 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

எனினும் அடுத்த ஓவருக்கு முகம்கொடுக்க களமிறங்கிய தினேஷ் கார்த்தி வாணவேடிக்கை காட்டினார். முதல் மூன்று பந்துகளுக்கும் இரண்டு சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி விளாசியதோடு கடைசி பந்துக்கு மற்றொரு பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் 22 ஓட்டங்களைக் குவித்தார்.

இதனால் கடைசி ஓவருக்கு 12 ஓட்டங்கள் பெறவேண்டி ஏற்பட்டது. இந்த ஓவரின் நான்காவது பந்தில் பவுண்டரி ஒன்றை விளாசிய விஜே ஷங்கர் ஐந்தாவது பந்தில் பிடிகொடுத்து 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனால் இந்திய அணி வெற்றி பெற கடைசி பந்துக்கு 5 ஓட்டங்கள் பெற வேண்டி ஏற்பட்டது. இதன்போது துடுப்பெடுத்தாடிய தினேஷ் கார்த்திக் அபார சிக்ஸர் ஒன்றை விளாசி இந்திய அணிக்கு திரில் வெற்றி ஒன்றை தேடிக் கொடுத்தார்.

தனி ஒருவராக இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 29 ஓட்டங்களை பெற்று ஆட்ட நாயகன் விருதை வென்றார். தொடர் நாயகன் விருது வொஷிங்டன் சுந்தருக்கு கிடைத்தது.

அசிங்கமான நடத்தைக்காக சகிப், நூருலுக்கு ஐ.சி.சி அபராதம்

இறுதியில் இந்திய அணி சரியாக 20 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. குறிப்பாக பங்களாதேஷ் அணித் தலைவர் தீர்க்கமான கடைசி ஓவருக்கு பகுதிநேர பந்துவீச்சாளரான சௌம்யா சர்கரை பந்துவீச அழைத்தது அந்த அணிக்கு பாதகமாக அமைந்தது.

இலங்கை தனது 70ஆவது சுதந்திர தினத்தை ஒட்டியே இந்த சுதந்திரக் கிண்ண முத்தரப்பு T20 தொடரை நடத்தியது. இதற்கு முன்னர் கடைசியாக 1998ஆம் ஆண்டு சுதந்திரக் கிண்ண முத்தரப்பு ஒருநாள் தொடரை இலங்கை நடத்தியபோதும் இந்திய அணி இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி அந்த கிண்ணத்தை சுவீகரித்தது.

எனினும் அணித்தலைவர் விராட் கோஹ்லி உட்பட இந்திய அணி தனது முன்னணி வீரர்கள் இன்றியே இந்த தொடரில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. அதேபோன்று ஆர். பிரேமதாச அரங்கில் இருந்த பெரும்பாலான ரசிகர்கள் இந்திய அணிக்கே ஆதரவை வெளியிட்டு கோசமெழுப்பினர்.         

ஸ்கோர் விபரம்