இந்தியாவின் வெற்றியோடு அரையிறுதியாக மாறியிருக்கும் இலங்கை – பங்களாதேஷ் மோதல்

524

ரோஹித் ஷர்மாவின் அபார துடுப்பாட்டத்தின் உதவியோடு பங்களாதேஷ் அணியை 17 ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய அணி சுதந்திரக் கிண்ண முத்தரப்பு T20 தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 

[rev_slider LOLC]

இதன்படி இந்த தொடரில் தலா இரண்டு தோல்விகள் ஒரு வெற்றியை பெற்றிருக்கும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இறுதிப் போட்டிக்காக பலப்பரீட்சை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்த தொடரின் கடைசி லீக் போட்டியாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16) நடைபெறவுள்ள இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி அரையிறுதி ஆட்டமாக மாறியுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (14) நடைபெற்ற இந்திய – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணித்தலைவர் மஹ்முதுல்லாஹ் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.

இரு அணிகளும் வேகப்பந்து வீச்சில் மாற்றங்கள் கொண்டுவந்திருந்தன. இந்திய அணியில் ஜெய்தேவ் உனத்கட்டுக்கு பதில் மொஹமது சிராஜ் அழைக்கப்பட்டிருந்தார். 24 வயதான சிராஜ் கடந்த ஆண்டு இறுதியில் இந்திய அணிக்காக இரண்டு T20 போட்டிகளில் விளையாடியிருந்தார்.

இலங்கை வீரர்களுக்கு பார்சிலோனா கழகம் பயன்படுத்திய மென்பொருள்

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் திறமையை மேலும் அதிகரிக்கும் நோக்கிலும்…

மறுபுறம் பங்களாதேஷ் அணியிலிருந்து இந்த தொடரில் ஆறு ஓவர்கள் பந்துவீசி 68 ஓட்டங்கள் கொடுத்திருந்த தஸ்கின் அஹமத் நீக்கப்பட்டிருந்தார். அவருக்கு பதில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அபூ ஹைதர் அழைக்கப்பட்டார். இது ஹைதரின் ஆறாவது T20 சர்வதேச போட்டியாகும்.

இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான அணித்தலைவர் ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் அதிரடியாக ஆடினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 59 பந்துகளில் 70 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

தவான் 27 பந்துகளில் 5 பௌண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 35 ஓட்டங்களை பெற்றிருந்த போது ருபெல் ஹொஸைனின் பந்துக்கு போல்டானார். எனினும் இந்திய அணி முதல் 10 ஓவர்களுக்கும் 71 ஓட்டங்களை பெற்று சற்று மந்தமாகவே ஆடியது.

இந்நிலையில் இரண்டாவது விக்கெட்டுக்கு இணைந்த ரோஹித் ஷர்மா மற்றும் சுரேஷ் ரெய்னா அதிரடி காட்டினர். குறிப்பாக அபூ ஹைதர் வீசிய 18ஆவது ஓவரில் இந்திய அணி 3 சிக்ஸர்களுடன் 21 ஓட்டங்களை குவித்தது.

எனினும், 20 ஆவது ஓவரை வீசவந்த ருபெல் ஹொஸைன் இந்திய அணியின் ஓட்ட வேகத்தை மட்டுப்படுத்தினார். 30 பந்துகளில் 47 ஓட்டங்களுடன் இருந்த சுரேஷ் ரெய்னா சிக்ஸர் விளாசும் நோக்கில் உயர்த்தி அடித்த பந்தை சௌம்யா சர்கர் பிடியெடுத்தார்.

மறுபுறம் T20 சர்வதேச போட்டிகளில் தனது 13ஆவது அரைச்சதத்தை பெற்ற ரோஹித் 88 ஓட்டங்களுடன் தனது மூன்றாவது சதத்தை பெறும் நோக்கில் கடைசி ஓவரின் இரண்டாவது பந்துக்கு முகம்கொடுத்தாலும் அது காலில் பட்டு ஒரு ஓட்டமாக மாறியது. கடைசி ஓவரை அபாரமாக வீசிய ஹொஸைன் கடைசி பந்தில் ரோஹித் ஷர்மாவை ரன் அவுட் செய்தார்.

61 பந்துகளுக்கு முகம்கொடுத்த ஷர்மா 5 பௌண்டரிகள் 5 சிக்ஸர்களுடன் 89 ஓட்டங்களை குவித்தார். T20 போட்டிகளில் இது அவரது மூன்றாவது அதிகூடிய ஓட்டங்களாகும்.

ருபெல் ஹொஸைன் கடைசி ஓவருக்கு 4 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்த போதும் இந்திய அணி கடைசி 10 ஓவர்களுக்கும் 105 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது. இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களுக்கும் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 176 ஓட்டங்களை குவித்தது.

பங்களாதேஷ் சார்பில் ருபெல் ஹொஸைன் 4 ஓவர்களுக்கு 27 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

முத்தரப்பு T-20 தொடரில் குசல் மெண்டிஸ் விளையாடுவதில் சந்தேகம்

இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் சுதந்திர கிண்ண முத்தரப்பு T-20…

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பாட களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் ஆரம்ப மூன்று விக்கெட்டுகளையும் வொஷிங்டன் சுந்தர் அடுத்தடுத்து வீழ்த்தினார். ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லிடொன் தாஸ் (07) மற்றும் அடுத்து வந்த சௌம்யா சர்கர் (01) ஒற்றை இலக்கங்களுடன் ஆட்டமிழக்க மறுமுனையில் ஆடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பால் 27 ஓட்டங்களை பெற்ற நிலையில் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

அடுத்து வந்த அணித்தலைவர் மஹ்முதுல்லாஹ்வும் நிலைக்கவில்லை. அவர் 11 ஓட்டங்கள் பெற்ற நிலையில் லோகெஷ் ராகுலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

எனினும், இலங்கையுடனான போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்த முஷ்பிகுர் ரஹிம் மீண்டும் ஒரு முறை பங்களாதேஷ் அணியின் வெற்றிக்காக போராடினார். ஐந்தாவது விக்கெட்டுக்கு சப்பிர் ரஹ்மானுடன் இணைந்த அவர் ஓட்டங்களை அதிகரித்தார். இருவரும் 65 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டபோது சப்பிர் ரஹ்மான் 23 பந்துகளில் 27 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

இறுதியில் பங்களாதேஷ் அணி 20 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களையே பெற்றது. அடுத்தடுத்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷ்பிகுர் தனது நான்காவது அரைச்சதத்தை பெற்றார். 55 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 8 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் ஆட்டமிழக்காது 72 ஓட்டங்களை பெற்றார். இலங்கையுடனான போட்டியிலும் அவர் இதே ஓட்ட எண்ணிக்கையையே ஆட்டமிழக்காது பெற்றிருந்தார்.

இதன்போது அவர் T20 சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக முதல் அரைச்சதம் பெற்ற பங்களாதேஷ் வீரராகவும் பதிவானார். முன்னதாக இனாமுல் ஹக் 2014ஆம் ஆண்டிலும் சப்பிர் ரஹ்மான் 2016ஆம் ஆண்டிலும் பெற்ற 44 ஓட்டங்களே அதிக ஓட்டங்களாக இருந்தது.

போட்டியின் ஆட்ட நாயகன் விருதை ரோஹித் ஷர்மா பெற்றார்.

ஸ்கோர் விபரம்