குடும்பத்திற்கே முன்னுரிமை அளிப்பேன்: நிக் போதாஸ்

563

பாகிஸ்தான் – இலங்கை இடையிலான இருதரப்பு கிரிக்கெட் தொடரில் இம்மாத பிற்பகுதியில் நடைபெறவிருக்கும் T-20 தொடரின் கடைசிப் போட்டிக்காக தான் பாகிஸ்தானின் லாஹூருக்கு பயணிக்காமல் இருக்க எடுத்த முடிவை இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் நிக் போதாஸ் நியாயப்படுத்தியுள்ளார்.

லாஹூர் T-20 அணிக்கான பரிந்துரை விளையாட்டு அமைச்சரால் நிராகரிப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவிருக்கும் T-20..

இலங்கை அணியின் ஏழு வீரர்கள், அணியின் உடற்பயிற்சி நிபுணர் நிர்மலன் தனபாலசிங்கம், முன்னாள் தென்னாபிரிக்க விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரரும் தற்போதைய இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளருமான நிக் போதாஸ் ஆகியோர் லாஹூரில் நடைபெறும் T-20 போட்டியில் பங்கேற்காமல் இருக்க தீர்மானித்துள்ளனர்.  

இத்தொடரின் முதல் இரு போட்டிகளும் அபூதாபியில் நடைபெறவுள்ள நிலையில், லாஹூருக்கு பயணிக்காமல் இருக்க வீரர்கள் எடுத்த முடிவு அவர்களை குறித்த T-20 தொடருக்கான தேர்வில் இருந்தும் நீக்கம் செய்தது. மூன்று போட்டிகள் கொண்ட T-20 தொடருக்கு குறித்த வீரர்கள் இல்லாத குழாம் ஒன்றையும் இலங்கை கிரிக்கெட் சபை அண்மையில் அறிவித்துள்ளது.

இது குடும்பத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு. நான் அங்கு செல்வதை எனது குடும்பத்தினர் அதிகம் விரும்பவில்லை. என்னை பொறுத்தவரை எனது குடும்பத்திற்கே முன்னுரிமை அளிப்பேன் என்று போதாஸ் தனது தீர்மானம் குறித்து Cricbuzz இணையத்தளத்திற்கு குறிப்பிட்டார்.

அனைவருக்கும் தமது சொந்த முடிவை எடுக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த விடயத்தில் திருப்தி இல்லாத நிலையில் எவரும் கட்டாயப்படுத்தப்படவில்லை. இந்த முடிவை எடுப்பது இலகுவானதாக இருக்கவில்லை. இது மதிக்கப்பட வேண்டும் என்று போதாஸ் மேலும் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் அணிக்கெதிரான இலங்கை T20 குழாம் அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை குழாமை இலங்கை..

உலக பதினொருவர் அணிக்காக விளையாட கடந்த மாதம் பல தென்னாபிரிக்க வீரர்களும் லாஹூருக்கு பயணித்ததை சில பாகிஸ்தான் ஊடகங்களும் எனக்கு ஞாபகமூட்டின. அது அவர்களின் முடிவு. அவர்களின் முடிவு எனது முடிவில் தாக்கம் செலுத்த வேண்டிய தேவையில்லை. அனைவரும் அங்கு செல்வதை கிரிக்கெட் சபை கருத்தளவில் விரும்பியது. ஆனால் அதனை செய்ய எவருக்கும் அழுத்தம் தரப்படவில்லை என்றும் போதாஸ் கூறினார்.

எவ்வாறாயினும் அபூதாபி போட்டிகளில் அணியுடன் இருக்க போதாஸ் எதிர்பார்த்துள்ளார். கடைசிப் போட்டிக்கு பயிற்சி குழுவில் இருக்கும் ஒருவர் பொறுப்பாளராக செயற்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணியின் வேகப்பந்து பயிற்சியாளர் ருமேஷ் ரட்னாயக்க 2011இல் சிறிது காலம் இலங்கையின் தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்டவராவார். அதேபோன்று, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஹஷான் திலகரத்ன, தற்போது அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக இருப்பதோடு, அவரும் பாகிஸ்தானில் இலங்கை அணியை வழிநடாத்த வாய்ப்பு உள்ளது.