இலங்கையுடனான டெஸ்ட்டில் சச்சினின் சாதனையை சமன் செய்த டிம் சௌத்தி

2776

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது தொடரானது இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் தற்சமயம் காலியில் நடைபெற்று வருகிறது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன்படி முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

இளம் லசித்தின் சுழலை தாண்டியும் வலுவடைந்த நியூசிலாந்து

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு….

நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் ரொஸ் டெய்லர் அரைச்சதம் கடந்து 86 ஓட்டங்களை அதிகபட்ச ஓட்டங்களாக பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து ஹென்றி நிக்கோல்ஸ் 42 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இதில் வேகப்பந்துவீச்சாளரான டிம் சௌத்தி 19 பந்துகளை எதிர்கொண்டு 1 சிக்ஸருடன் 14 ஓட்டங்களை பெற்று ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்து சென்றார். 

இதில் டிம் சௌத்தி விளாசிய அந்த சிக்ஸரில், கிரிக்கெட் உலகில் ‘லிட்டில் மாஸ்டர்’ என அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார். 

1989 ஆம் தனது இளம் வயதில் டெஸ்ட் கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமான சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கைக்கு இறுதியாக விடைகொடுத்தார். இந்த 24 வருட டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 

இதில் 329 இன்னிங்சுகளில் துடுப்பெடுத்தாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் 15,921 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் இவர் 69 சிக்ஸர்களை விளாசியுள்ளார். குறித்த 69 சிக்ஸர்களையே இவ்வாறு டிம் சௌத்தி மிகக்குறைந்த இன்னிங்சுகளில் சமன் செய்துள்ளார். 

30 வயதுடைய டிம் சௌத்தி 2008 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமானர். அறிமுகமான காலத்திலிருந்து இன்று வரை டிம் சௌத்தி ஒரு பந்துவீச்சாளராகவே காணப்படுகின்றார். ஆனால் இறுதி நேரத்தில் துடுப்பெடுத்தாட வரும் டிம் சௌத்தி அதிரடியாக ஓட்டங்களை குவிக்க முற்படுவார். 

இவ்வாறு 66 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 97 இன்னிங்சுகளில் துடுப்பெடுத்தாடியுள்ள டிம் சௌத்தி 5 அரைச்சதங்களுடன் மொத்தமாக 1,587 ஓட்டங்களை குவித்துள்ளார். அத்துடன் அதிகபட்சமாக ஆட்டமிழக்காது 77 ஓட்டங்களையும் குவித்துள்ளார். இதில் இலங்கை அணியுடனான போட்டியில் முதல் இன்னிங்ஸில் சிக்ஸர் அடித்து இவ்வாறு சச்சின் டெண்டுல்கரின் சிக்ஸர் சாதனையை சமன் செய்துள்ளார். 

கொல்கத்தா அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ப்ரெண்டன் மெக்கலம் நியமனம்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள்…..

தற்போது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 69 சிக்ஸர்களை குவித்துள்ள டிம் சௌத்தி அதிக சிக்ஸர்களை விளாசியவர்கள் வரிசையில் குறைந்த இன்னிங்ஸ் என்ற அடிப்படையில் சச்சின் டெண்டுல்கரை முந்தி 17 ஆவது இடத்தில் காணப்படுகின்றார். ஒரு பந்துவீச்சாளர் இவ்வாறு துடுப்பாட்ட வீரரின் சாதனையை முறியடிப்பது வித்தியாசமான சாதனையாக அமைந்திருக்கின்றது.

அண்மையில் முழு கிரிக்கெட் வாழ்க்கைக்கும் விடைகொடுத்து, நேற்று (15) இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமனம் பெற்ற நியூசிலாந்து வீரர் ப்ரெண்டன் மெக்கலம் 176 இன்னிங்சுகளில் 107 சிக்ஸர்களை விளாசி குறித்த பட்டியலில் முதலிடத்தில் காணப்படுகின்றார். 

குறித்த பட்டியலில் இலங்கை அணி வீரர்கள் என்ற வரிசையில் 252 இன்னிங்சுகளில் 61 சிக்ஸர்களை விளாசியுள்ள முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன 23 ஆவது இடத்தில் காணப்படுகின்றார். அத்துடன்  மஹேல ஜயவர்தனவை தொடர்ந்து 25 ஆவது இடத்தில் 59 சிக்ஸர்களை விளாசியுள்ள சனத் ஜயசூரிய காணப்படுகின்றார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<