மகளிர் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியை வீழ்த்திய நியூசிலாந்து

142
ESPN Cricinfo

நேற்றைய தினம் (24), பிரிஸ்டல் கவுன்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான மகளிர் உலக கிண்ணத்துக்கான குழு நிலைப் போட்டியில், ஹொலி ஹட்லெஸ்டனின் சிறப்பான பந்து வீச்சின் மூலம் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி  நியூசிலாந்து மகளிர் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியைப் பதிவு செய்தது.

இவ்விரு அணிகளுக்கு இடையில் இதுவரை நடைபெற்றுள்ள 9 போட்டிகளிலும்  இலங்கை மகளிர் அணி தோல்வியுற்ற நிலையில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணித் தலைவி சுசி பேட்ஸ் முதலில் இலங்கை அணியை துடுப்பாடுமாறு பணித்தார்.

அந்த வகையில் துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை மகளிர் அணி முதல் விக்கெட்டுக்காக நிபுணி ஹன்சிகா மற்றும் சமரி பொல்கம்பொல ஆகியோர் 49 ஓட்டங்களை பெற்று சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தனர். எனினும், துரதிஷ்டவசமாக நிபுணி ஹன்சிகா 31 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், அமீலியா கேர்ரின் பந்து வீச்சில் பீட்டர்சனிடம் பிடி கொடுத்து முதலாவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

அதனையடுத்து களமிறங்கிய சமரி அதபத்து, சமரி பொல்கம்பொலவுடன் இணைந்து நிதான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக செயற்பட்ட இவ்விருவரும் நியூசிலாந்து அணியின் சிறந்த பந்து வீச்சை எதிர்கொண்டு இரண்டாவது விக்கெட்டுக்காக 92 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

நியூசிலாந்து அணிக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்த இந்த இணைப்பாட்டதை சோபி டிவைன் தனது அபார பந்து வீச்சின் மூலம் சிறப்பாக துடுப்பாடிக் கொண்டிருந்த சமரி அத்தபத்துவை 53 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார். அத்துடன், அவருடன் துடுப்பாடிய சமரி பொல்கம்பொலவும் குறுகிய நேர இடைவெளியில் ஆட்டமிழந்து ஓய்வறை திரும்பினார்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சஷிகலா சிறிவர்தன தவிர்ந்த ஏனைய துடுப்பாட்ட வீராங்கனைகள் அனைவரும் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் வெளியேறினர். சற்று நேரம் தாக்குப்பிடித்த சஷிகலா சிறிவர்தன 16 ஓட்டங்களைப் பெற்றார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த அணித் தலைவி இனோகா ரணவீர மற்றும் சந்திமா குணரத்ன முறையே 6, 1 ஓட்டங்களைப் பதிவு செய்தனர்.

இறுதியில் இலங்கை மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அதேநேரம், நியூசிலாந்து மகளிர் அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய ஹொலி ஹட்லெஸ்டன் 35 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதனையடுத்து 189 ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு துடுப்பாடக் களமிறங்கிய நியூசிலாந்து மகளிர் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை ரேச்சல் ப்ரீஸ்ட், சந்திமா குணரத்னவின் பந்து வீச்சில் வெறும் இரண்டு ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார். எனினும், அதனைத் தொடர்ந்து சிறப்பாட்டதை வெளிப்படுத்திய அணித் தலைவி சுசி பேட்ஸ் மற்றும் எமி சாட்டர்வெய்ட் இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு வழி நடத்தினர்.

நியூசிலாந்து மகளிர் அணி சார்பாக சிறப்பாக துடுப்பாடிய சுசி பேட்ஸ் 11 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உள்ளடங்கலாக 106 ஓட்டங்களை பதிவு செய்த அதேவேளை எமி சாட்டர்வெய்ட் 78 ஓட்டங்களை அணி சார்பாக பெற்றுக்கொடுத்தார்.

உலக கிண்ணத்துக்கான குழு நிலைப் போட்டிகளில் இலங்கை மகளிர் அணி கலந்துகொள்ளும் இரண்டாவது போட்டி அவுஸ்திரேலிய அணியுடன் ஜூன் மாதம் 29ஆம் திகதி இதே மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.   

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 188/9 (50) – நிபுணி ஹன்சிகா 31, சமரி பொல்கம்பொல 49, சமரி அத்தபத்து 53, சஷிகலா சிறிவர்தன 16, ஹொலி ஹட்லெஸ்டன் 35/5, அமீலியா கேர் 13/1

நியூசிலாந்து – 189/1 (37.4) – சுசி பேட்ஸ் 106, எமி சாட்டர்வெய்ட் 78, சந்திமா குணரத்ன 20/1

முடிவு – நியூசிலாந்து மகளிர் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி