துடுப்பாட்ட உத்வேகத்துடன் நியூசிலாந்துக்கு சவால் கொடுக்குமா இலங்கை?

89

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒரு போட்டிக் கொண்ட T20I தொடர் எதிர்வரும் 11ம் திகதி அக்லேண்ட் ஈடன் பார்க் மைதானத்தில்  நடைபெறவுள்ளது.

மீண்டும் திசர அதிரடி; இலங்கைக்கு மற்றுமொரு ஏமாற்றம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் திசர…

இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்திருக்கும் இலங்கை அணி, T20I  போட்டியின் மீதான கவனத்தை திருப்பியுள்ளது. இறுதியாக முடிவுக்கு வந்த ஒருநாள் தொடரில் இலங்கை அணியானது பந்துவீச்சின் தவறுகளை திருத்திக் கொண்டிருக்குமாயின் ஒரு வெற்றியினையாவது பெற்றிருக்க முடியும். துரதிஷ்டவசமாக பந்துவீச்சில் பிரகாசிக்க தவறிய இலங்கை அணி இறுதிப் போட்டியிலும் வெற்றியை தவறவிட்டு, 3-0 என தொடரை தோல்வியடைந்தது.

இவ்வாறான நிலையில் தங்களுடைய பந்துவீச்சை பலப்படுத்திக்கொண்டு, T20I தொடரில் இலங்கை அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஒருநாள் போட்டிகளை விடவும், T20I  போட்டியில் அணியின் வேகப்பந்து வீச்சு பலம் மிக்கதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், லசித் மாலிங்க ஒருநாள் போட்டிகளை விடவும், T20I போட்டிகளில் அதி சிறந்த பந்துவீச்சாளராக பிரகாசிப்பவர். அதனால், அணித் தலைவர் என்ற ரீதியில் அவர் பந்துவீச்சை பலப்படுத்துவதுடன், ஏனைய பந்துவீச்சாளர்களையும் சரியான இடங்களில் பயன்படுத்துவார் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

எவ்வாறாயினும், நியூசிலாந்து அணியானது T20I  தரவரிசையில் இலங்கை அணியை விட முன்னிலையில் உள்ளது. அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான கொலின் மன்ரோ மற்றும் மார்ட்டின் கப்டில் ஆகியோர் ஐசிசி தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் உள்ளனர். அவர்களுடன் பந்துவீச்சில் இஸ் சோதி 6வது இடத்தில் உள்ளார். இப்படி முதற்தர வீரர்களை கொண்டுள்ள நியூசிலாந்து அணி, ஒருநாள் தொடரை வெற்றிக்கொண்ட உத்வேகத்துடன், இலங்கை அணியை எதிர்கொள்ள தயராகியுள்ளது.

இரண்டு அணிகளினதும் கடந்தகால மோதல்கள்

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இதுவரையில் 6 இருதரப்பு T20I தொடர்களில் மோதியுள்ளன. இதில் நியூசிலாந்து 2 தொடர்களையும், இலங்கை ஒரு தொடரையும் வெற்றிக் கொண்டுள்ளது. அத்துடன், மொத்தமாக 15 போட்டிகளில் இரண்டு அணிகளும் மோதியுள்ளன. இதில், நியூசிலாந்து அணி 7 போட்டிகளிலும், இலங்கை 6 போட்டிகளிலும் வெற்றிக் கண்டுள்ளன.

ஒருநாள் அரங்கில் வரலாறு படைத்த திசர பெரேராவின் சாதனைத் துளிகள்

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில்…

முக்கியமாக, இலங்கை அணி நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, 4 T20I  போட்டிகளில் பங்கேற்றுள்ளதுடன், அதில் ஒரு போட்டியில் வெற்றியும் மூன்று போட்டிகளில் தோல்வியினையும் சந்தித்திருக்கிறது. அத்துடன், போட்டி நடைபெறவுள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இலங்கை அணி ஏற்கனவே நியூசிலாந்துடன் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், குறித்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியிருக்கிறது.

இலங்கை அணி

இலங்கை அணியின் T20I  போட்டிக்கான இறுதி பதினொருவரில் எவ்வித முக்கிய மாற்றங்களும் ஏற்படுத்தப்பட வாய்ப்பில்லை. இறுதி ஒருநாள் போட்டியில் உபாதைக்கு உள்ளாகிய தனுஷ்க குணதிலக்கவுக்கு பதிலாக, சதீர சமரவிக்ரம களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், இறுதி ஒருநாள் போட்டியில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக இணைக்கப்பட்டிருந்த துஷ்மந்த சமீரவுக்கு பதிலாக சீக்குகே பிரசன்ன களமிறக்கப்படலாம்.

உத்தேச பதினொருவர்

நிரோஷன் டிக்வெல்ல, சதீர சமரவிக்ரம, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், தனன்ஜய டி சில்வா, திசர பெரேரா, தசுன் சானக, சீக்குகே பிரசன்ன, லசித் மாலிங்க (தலைவர்), லக்ஷான் சந்தகன், நுவான் பிரதீப்

நியூசிலாந்து அணி

நியூசிலாந்து குழாத்தை பொருத்தவரை முக்கிய மாற்றமாக அணித் தலைவர் கேன் வில்லியம்சனுக்கு T20I  தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அணித் தலைவராக டீம் சௌதி நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், உபாதை காரணமாக சுமார் 9 மாதங்களுக்கு பின்னர் தேசிய அணியில் இணைந்துள்ள மிச்சல் சென்ட்னர் அணியின் பதினொருவரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவருடன், நியூசிலாந்து அணிக்காக 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஸ்கொட் குகலெயின் இந்த போட்டியினூடாக T20I போட்டிகளில் அறிமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், உபாதைக்குள்ளாகிய ஜேம்ஸ் நீஷமிற்கு பதிலாக டக் பிரேஷ்வெல் விளையாடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Video – மெதிவ்ஸின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது – Cricket Kalam 05

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி…

உத்தேச பதினொருவர்

மார்டின் கப்டில், கொலின் மன்ரோ, ரொஸ் டெய்லர், ஹென்ரி நிக்கோல்ஸ், கிளேன் பிலிப்ஸ், மிச்சல் சென்ட்னர், டிம் செளதி (தலைவர்) டக் ப்ரெஸ்வெல், மேட் ஹென்ரி, இஷ் சோதி, ஸ்கொட் குகலெயின்

எதிர்பார்ப்பு வீரர்கள்

இலங்கை அணியை பொருத்தவரை, ஒருநாள் போட்டிகளில் ஓட்டங்களை குவிக்க தடுமாறி வரும் குசல் மெண்டிஸ், T20I போட்டியில் பிரகாசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக T20I  போட்டிகளில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர், கடந்த வருடம் இலங்கை அணிக்காக அதிக ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார். 8 போட்டிகளில் விளையாடிய இவர் 259 ஓட்டங்களை குவித்துள்ளார்.

நியூசிலாந்து அணியை பொருத்தவரை எதிர்பார்க்கக்கூடிய வீரராக கொலின் மன்ரோ உள்ளார். ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களில் 3வது இடத்தை பிடித்துள்ள இவர், கடந்த 12 மாதங்களில் 12 T20I  போட்டிகளில் விளையாடி 45.45 என்ற ஓட்ட சராசரியில் 500 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.

ஆடுகள நிலைமை

அக்லேண்ட் ஈடன் பார்க் மைதானமானது துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான மைதானமாக அமையும் என்பதுடன், வேகப்பந்து வீச்சும் எடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாக அவுஸ்திரேலிய அணி, நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது, நியூசிலாந்து அணி நிர்ணயித்திருந்த 244 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கினை அவுஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் கடந்து வெற்றி பெற்றிருந்தது.

அத்துடன், இந்த மைதானத்தின் பௌண்டரி எல்லையும், தூரம் குறைந்ததாக உள்ளதால், இந்த போட்டியில் துடுப்பாட்ட வீரர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.