இரண்டாவது போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா

87

சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று (8) நடைபெற்ற இரண்டாவது சர்வதேச டி20 போட்டியில் 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற இந்திய அணி ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில் 1-1 என தொடரை சமப்படுத்தியுள்ளது.  

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி கடந்த போட்டியை போலவே அதிக ஓட்டங்களை குவிக்கும் நோக்கத்தில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது. எனினும், அவர்களது எதிர்பார்ப்புக்களை முறியடிக்கும் வகையில் இந்திய வீரர்களின் பந்து வீச்சு சிறப்பாக அமைந்திருந்ததன் காரணமாக நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களையே பெற்றுக் கொண்டது.

நியூசிலாந்துடனான முதல் டி-20 போட்டியில் இந்தியாவுக்கு படுதோல்வி

இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் …

50 ஓட்டங்களுக்கு முதல் நான்கு விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணிக்கு ரொஸ் டைய்லர் மற்றும் கிரண்ட்ஹோம் ஆகிய இருவரும் இணைந்து 77 ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். துடுப்பாட்டத்தில் கிரண்ட்ஹோம் 50 ஓட்டங்களையும் டைய்லர் 42 ஓட்டங்களையும் பெற்று தமது பங்களிப்புக்களை வழங்கியிருந்தனர். இந்திய பந்து வீச்சில் குருனால் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் கலீல் அஹமட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்து தொடரை 1-1 என சம்ப்படுத்தியது. சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் சிறந்த அடித்தளத்தை இட்டிருந்ததோடு இருவரும் இணைந்து முதலாவது விக்கெட்டுக்காக 79 ஓட்டங்களை பகிர்ந்தனர்.

துடுப்பாட்டத்தில் ரோஹித் ஷர்மா 50 ஓட்டங்களையும் தவான் 30 ஓட்டங்களையும் இறுதியில் ரிஷாஃப் பாண்ட் ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தனர். பந்து வீச்சில் மூன்று வீரர்கள் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

இரு அணிகளுக்கும் இடையிலான தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டி நாளை மறுதினம் (10) நடைபெறவுள்ளது.

ஆட்ட நாயகன் – குருனால் பாண்டியா

போட்டியின் சுருக்கம்

நியூசிலாந்து அணி – 158/8 (20) – கிரண்ட்ஹோம் 50, டைய்லர் 42, குருனால் பாண்டியா 28/3, கலீல் அஹமட் 27/2

இந்திய அணி – 162/3 (18.5) – ரோகித் ஷர்மா 50, ரிஷாஃப் பாண்ட் 40*, மிட்செல் 15/1

முடிவு: இந்திய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க