வெற்றியை நோக்கி இந்தியா

565
IND v NZ

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 1ஆவது  டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் ஆடிய  இந்திய அணி முதல் இனிங்ஸில் 318 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் முதல் இனிங்ஸிற்காக ஆடிய  நியூசிலாந்து அணி 262 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பின் 2ஆவது இனிங்ஸைத் தொடங்கிய இந்தியா 3ஆவது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்களை எடுத்திருந்தது. அப்போது ஆடுகளத்தில் முரளி விஜய் 64 ஓட்டங்களோடும், புஜாரா 50 ஓட்டங்களோடும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

பின் இன்று 4ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய முரளி விஜய் 76 ஓட்டங்களோடும், புஜாரா 78 ஓட்டங்களோடும் ஆட்டம் இழந்து வெளியேறினர்.

அதன்பின் வந்த விராத் கோஹ்லி 18 ஓட்டங்களோடும், அஜின்கியா ரஹானே 40 ஓட்டங்களோடும் ஆட்டம் இழந்தனர்.

6ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா, ஜடேஜா ஆகியோர் அதிரடியாக விளையாடினார்கள். இந்தியாவின் மொத்த ஓட்டங்கள் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 377 ஓட்டங்களாக இருக்கும் போது  இந்திய அணி தமது 2ஆவது இனிங்ஸை நிறுத்திக்கொண்டது.

அப்போது ரோஹித் சர்மா ஆட்டம் இழக்காமல் 68 ஓட்டங்களையும், ஜடேஜா ஆட்டம் இழக்காமல் 50 ஓட்டங்களையும் பெற்று களத்தில் இருந்தனர்.

ஏற்கனவே இந்திய அணி முதல் இனிங்ஸில் 56 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்ததால், இந்திய அணி நியூசிலாந்தை விட மொத்தமாக 433 ஓட்டங்கள்  அதிகமாக பெற்று இருந்தது.  இதனால் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 434 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.  

இதன் பின் கடின இலக்குடன் நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்டில் மற்றும் டொம் லெதம் ஜோடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கினார்கள்.  அந்த அணியின் ஓட்டங்கள்  2ஆக  இருக்கும் போது மார்ட்டின் கப்டில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காத  நிலையில் அஷ்வின் வீசிய பந்தில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து தலைவர் கேன் வில்லியம்சன் களம் இறங்கினார். அவரோடு இணைந்து மற்ற ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டொம் லெதம் ஓட்டங்களைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அவர்  2 ஓட்டங்களைப் பெற்று பெவிலியன் திரும்பினார். அந்த விக்கெட்டையும் அஷ்வின் வீழ்த்தினார்.  

பின் 3ஆவது விக்கெட்டுக்கு வில்லியம்சன் உடன் ரோஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது, இருந்தாலும் நியூசிலாந்து அணி 43 ஓட்டங்களைப் பெற்று இருந்த போது அஷ்வின் வில்லியம்சனை வீழ்த்தினார். அவர் 25 ஓட்டங்களைப் பெற்று  ஆட்டம் இழந்தார். இந்த விக்கெட் மூலம் அஷ்வின் உலக டெஸ்ட் அரங்கில் 200 விக்கெட்டுகளை  வீழ்த்தி சாதனை படைத்தார்.

அதன் பின்பு ரோஸ் டெய்லர் 17 ஓட்டங்களை எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அப்போது நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 56 ஓட்டங்களைப் பெற்று இருந்தது.  5ஆவது விக்கெட்டுக்கு ரோஞ்சியுடன் சான்ட்னெர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அஷ்வின், ஜடேஜா பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு மேலும் விக்கெட்டுகள் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

இதனால் நியூசிலாந்து அணி 4ஆவது நாள் ஆட்ட முடிவில் 37 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 93 ஓட்டங்களைப் பெற்று இருந்தது. ரோஞ்சி 38 ஓட்டங்களோடும் சான்ட்னெர் 8 ஓட்டங்களோடும் களத்தில் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். போட்டியின் இறுதி நாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 318/10

முரளி விஜே 65, புஜாரா 62, ஜடேஜா 42*, ரவிஷந்திரன் அஷ்வின் 40

சான்ட்னெர் 94/3, போல்ட் 67/3

நியூசிலாந்து – 262/10

கேன் வில்லியம்சன் 75, டொம் லெதம் 58, லூக் ரொஞ்சி 38

ரவீந்திர ஜடேஜா 73/5, ரவி அஷ்வின் 93/4

இந்தியா – 377/5d

முரளி விஜே 76, புஜாரா 78, ரோஹித் ஷர்மா 68*, ஜடேஜா 50*

இஷ் சோதி 99/2, சான்ட்னெர் 79/2

நியூசிலாந்து – 93/4

லூக் ரொஞ்சி 38*, கேன் வில்லியம்சன் 25, ரோஸ் டெய்லர் 17

ரவி அஷ்வின் 68/3

நியூசிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 341 ஓட்டங்கள் தேவை

schoolscricketcrawler