பிரசன்ன ஜயவர்தனவின் ஆலோசனை எனக்கு மிகவும் உதவியது – டிக்வெல்ல

1309

இலங்கை அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரும், தற்போதைய விக்கெட் காப்பு பயிற்சியாளருமான பிரசன்ன ஜயவர்தனவுடன் இணைந்து ஆறு மாதங்களாக பயிற்சி பெற்றது மிகவும் பயனளித்திருந்ததாகத் தெரிவித்த நிரோஷன் டிக்வெல்ல, அவரது பயிற்சி நுணுக்கங்கள் தனக்கு நிறைய உதவியிருந்ததாக அவர் தெரிவித்தார். 

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி நாளை (22) கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. 

முதல் போட்டியின் உத்வேகத்துடன் மீண்டும் நியூசிலாந்தை வீழ்த்துமா இலங்கை?

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு…

இந்த நிலையில், போட்டி ஆரம்பமாவதற்கு முன் இரு அணி வீரர்களும் பங்குகொண்ட வலைப் பயிற்சிகள் இன்று (21) பி.சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், பயிற்சிகளின் பிறகு விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் இடம்பெற்றது. 

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை அணியின் இளம் வீரரும், விக்கெட் காப்பாளருமான நிரோஷன் டிக்வெல்ல கலந்துகொண்டார். இதன்போது நியூசிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி வெற்றிபெற்று தொடரை 2 – 0 என கைப்பற்றுமா? என எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், 

“அனைவரினதும் எதிர்பார்ப்பு இந்தப் போட்டியிலும் வெற்றி பெறுவதாகும். இரண்டு அணிகளும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் பலத்த போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கிறேன். முதல் டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றியுடன் எங்களுக்கு மிகப் பெரிய தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக சுரங்க லக்மால் ஒரு பந்துவீச்சாளராக அணியில் இடம்பிடித்தாலும், ஒரு துடுப்பாட்ட வீரராகவும் மாறி ஓட்டங்களைக் குவித்தார். எனவே அணியில் உள்ள ஏனைய துடுப்பாட்ட வீரர்களுக்கும் சுரங்க லக்மாலைப் போல துடுப்பெடுத்தாட முடியும் என்ற தன்னம்பிக்கை ஏற்பட்டது. 

அதேபோன்றுதான் இரண்டாவது இன்னிங்ஸிலும் திமுத் மற்றும் திரிமான்ன ஆகிய இருவரும் முதல் விக்கெட்டுக்கான ஒரு சாதனை இணைப்பாட்டமொன்றை மேற்கொண்டு அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். எனவே முதல் போட்டியில் எம்மிடம் இருந்த தன்னம்பிகையை இரண்டாவது போட்டியிலும் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். 

அதுமாத்திரமின்றி, முதலாவது போட்டியில் அணியில் இடம்பெற்ற அனைத்து வீரர்களும் வெற்றிக்காக தம்மால் முடியுமான பங்களிப்பினை வழங்கியிருந்தனர். அதில் கேன் வில்லியம்சனின் பிடியெடுப்பை குசல் ஜனித் பெரேரா அபாரமாக எடுத்திருந்தார். இதுவும் போட்டியின் முக்கிய திருப்புமுனையாக இருந்தது. 

மேலும், விக்கெட்டினைக் கைப்பற்ற வேண்டும் என்ற எமது பந்துவீச்சாளர்களின் இலக்கும் சரியான முடிவினைக் கொடுத்தது. இவையனைத்துக்கும் மத்தியில் தான் நாங்கள் முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியீட்டினோம். எனவே அதே மனநிலையுடன் நாளை ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளோம்” என தெரிவித்தார். 

பி. சரா ஓவல் மைதானத்தின் ஆடுகளம் குறித்து எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், 

“காலி ஆடுகளத்தைக் காட்டிலும் இந்த மைதானத்தின் ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களுக்கும், வேகப் பந்துவீச்சாளர்களுக்கும் சாதகத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கிறேன். குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது ஆடுகளத்தின் தன்மை அவ்வாறு இருக்கும் என நம்புகிறேன். அத்துடன், காலியில் பெற்றுக்கொண்ட ஓட்ட எண்ணிக்கையை விட இந்தப் போட்டியில் இரு அணிகளும் மிகப் பெரிய ஓட்ட எண்ணிக்கையையும் பெற்றுக்கொள்ளும் என் நான் எதிர்பார்க்கிறேன். 

இலங்கையைப் பொருத்தமட்டில் டெஸ்ட் போட்டிகளில் இந்த மைதானத்தின் ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்கு உகந்ததாக அமைந்துள்ளது. ஆனால் துடுப்பாட்ட வீரர்களுக்கும் இதில் அதிகளவு ஓட்டங்களைக் குவிக்க முடியும் என நான் கருதுகிறேன்’ என தெரிவித்தார். 

இந்த நிலையில், இலங்கை அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரும், இலங்கை அணியின் தற்போதைய விக்கெட் காப்பு பயிற்சியாளருமான பிரசன்ன ஜயவர்தனவுடன் இணைந்து செயற்பட்ட அனுபவம் குறித்து எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்த போது,

“நான் அவருடன் 2014 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தேன். அப்போது அவர் விக்கெட் காப்பாளராக இருந்தார். நான் களத்தடுப்பில் ஈடுபட்டேன். நான் அவருடன் விளையாடியது போல அவருக்கு எதிராகவும் விளையாடியுள்ளேன். எனவே அவரது நுணக்கங்கள், அவர் எவ்வாறு டெஸ்ட் போட்டிகளுக்கு தயாராகுவார், அவர் விக்கெட் காப்பு செய்கின்ற முறை உள்ளிட்ட விடயங்களைப் பற்றி நான் நன்கு அறிந்து வைத்துள்ளேன். 

தற்போது அவர் இலங்கை கிரிக்கெட் உயர் செயற்திறன் ஆய்வு மையத்தின் முக்கிய ஒரு பயிற்சியாளராகவும், இலங்கை அணியின் விசேட விக்கெட் காப்பு பயிற்சியாளராகவும் செயற்பட்டு வருகின்றார். எனவே சுமார் ஆறு மாதங்களுக்கு முன் நான் அவருடன் இணைந்து பயிற்சிகளை முன்னெடுத்து வருகிறேன். பயிற்சியின் போது அவர் எப்போதும் பந்தை எப்படியாவது பிடியெடுக்க வேண்டும் என அடிக்கடி சொல்லிக் கொடுப்பார். இதற்காக கவனம் செலுத்தும்படி கூறுவார். 

மாற்றுத் திட்டங்களுடன் இலங்கையை எதிர்கொள்ளவுள்ள நியூசிலாந்து

இலங்கைக்கு எதிராக நாளை (22) நடைபெறவிருக்கும் இரண்டாவது….

எனவே அவருடன் இணைந்து போட்டி நடைபெறும் போதும், ஓய்வு நாட்களிலும் மிகவும் கடினமான பயிற்சிகளை எடுத்தேன். அது எனக்கு நிறைய உதவியிருந்தது” என குறிப்பிட்டார். 

இதேநேரம், திமுத் கருணாரத்னவின் தலைமைத்துவம் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நிரோஷன் டிக்வெல்ல கருத்து தெரிவிக்கையில், 

‘திமுத் மிகவும் வித்தியாசமான ஒரு தலைவர். அணியில் உள்ள சக வீரர்களை அவர் அணுகும் முறையும் வித்தியாசமானது. பொதுவாக அணித் தலைவராக இருக்கும் போது ஒவ்வொரு வீரர்களையும் வித்தியாசமான முறையில் கையாள்வார். ஆனால் திமுத் கருணாரத்னவின் தலைமைத்துவத்திலும் ஒரு வித்தியாசத்தை நான் பார்க்கிறேன். 

நான் திமுத்துடன் நிறைய விளையாடியுள்ளேன். தற்போது ஒரு தலைவராக அவர் அனைத்து வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களிடம் இருந்து 100 சதவீதம் பங்களிப்பினைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பார். இதில் நான் மற்றைய தலைவர்கள் அவ்வாறு அல்ல என நான் கூறவில்லை.

எனினும், தன்னால் முடிந்தவற்றை மைதானத்துக்குச் சென்று விளையாடும்படி திமுத் வீரர்களுக்கு சுதந்திரம் வழங்குவார். மறுபுறத்தில் வீரர்கள் தவறிழைத்தால் அவர்களை அமைதியான முறையில் அவர்களது தவறை சுட்டிக்காட்டுவதோடு மாத்திரமின்றி, அடுத்த தடவை அவ்வாறான தவறை இழைக்க வேண்டாம் என அறிவுரை வழங்குவார். 

தொலைபேசியில் ஹேரத்தின் ஆலோசனையைப் பெறும் லசித்

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளர் லசித்….

அதேபோல தன்னிடம் உள்ள தன்னம்பிக்கையை கைவிடாமல் தன்னால் முடிந்தவற்றை செய்யும்படி அவர் சொல்வார். அதைத்தான் திமுத் அனைவருக்கும் சுதந்திரம் வழங்குகிறார் என்றதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்’ என கூறினார்.

முதல் வெற்றியை பாதுகாத்துக் கொள்வது எந்தளவு தூரத்துக்கு முக்கியத்துவம் என கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், 

“உண்மையில் அது மிகப் பெரிய சவாலாகும். நாங்கள் காலி டெஸ்ட்டில் தோல்வியைத் தழுவியிருந்தால் இந்தப் போட்டியை எப்படியாவது வெற்றிகொள்ள வேண்டும் என்ற மனநிலையுடன் தான் களமிறங்குவோம். ஆனால் தற்போது நாங்கள் ஒரு போட்டியில் வெற்றியீட்டி இருப்பதால் அந்த வெற்றியை பாதுகாப்பது அனைவரதும் பொறுப்பாகும். அந்த தன்னம்பிக்கை எம்மிடம் உண்டு” என தெரிவித்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<