”மனதளவில் சக்திமிக்கவர்களாக நாம் மாறவேண்டும்” – டிக்வெல்ல

81

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மனதளவில் சக்தி மிக்கவர்களாக மாறவேண்டும் என அணியின் உப தலைவரரும் துடுப்பாட்ட வீரருமான நிரோஷன் டிக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20I போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று தொடரை 2-0 என கைப்பற்றியிருந்தது. 

நியூசிலாந்திடம் டி20 தொடரை இழந்தது இலங்கை

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை …….

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், இறுதி ஓவரில் இலங்கை அணி வெற்றியை தவறவிட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த இரண்டு போட்டிகளில் அடைந்திருந்த தோல்வி குறித்து இலங்கை அணியின் உப தலைவர் நிரோஷன் டிக்வெல்ல கருத்து வெளியிட்டுள்ளார்.

“நாம் கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளமை வருத்தமளிக்கிறது. குறிப்பாக, இந்தப் போட்டிகள் இரண்டிலும், நாம் மோசமான தோல்வியை அடையவில்லை. போராடி இறுதி ஓவர்களில் தோல்வியை தழுவியிருந்தோம்.  அதன் காரணமாகவே நாம் அதிகமாக ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளோம். 

இப்படி பார்க்கும் போது, போட்டிகளில் நாம் சிறப்பாக விளையாடியுள்ளோம். ஆனால், இடையில் எம்மால் விடப்பட்ட சில சில சிறிய தவறுகளின் காரணமாக தோல்வியடைய நேரிட்டுள்ளது. அதனால், அடுத்த போட்டியில் தவறுகளை திருத்திக்கொண்டு விளையாட எத்தணிப்போம்”

அதேநேரம்,  நேற்றைய போட்டியில் கொலின் டி கிரெண்டோமின் பிடியெடுப்பினை மேலதிக வீரராக களத்தடுப்பில் ஈடுபட்ட லஹிரு மதுசங்க தவறவிட்டார். அத்துடன், இலங்கை அணியின் தோல்விக்கு களத்தடுப்பில் விடப்பட்ட இவ்வாறான தவறுகளும் காரணமாக இருந்தன. இதுகுறித்து குறிப்பிட்ட டிக்வெல்ல,

“அணியென்ற ரீதியில் வீரர்கள் அனைவரும் கடினமான களத்தடுப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வருவதை நாம் பார்த்திருக்கிறோம். இரவு நேரங்களில் களத்தடுப்பில் ஈடுபடுவதென்பது இலகுவான விடயமல்ல. அதிலும், அழுத்தமான நேரங்களில் பிடியெடுப்பது மிகவும் கடினம். ஆனால், வீரர்கள் என்ற ரீதியில் நாம் அதற்கு தயாராக இருக்க வேண்டும்.

Photos: Sri Lanka vs New Zealand | 2nd T20I

தசுன் ஷானக மற்றும் லஹிரு மதுசங்க ஆகியோர் எமது அணியில் உள்ள மிகச்சிறந்த களத்தடுப்பாளர்கள். அவர்கள் பிடியெடுப்புகளை தவறவிடுகின்றார்கள் என்பது அவர்களது துரதிஷ்டவசமான விடயம் தான். எனினும், நாம் குறித்த தவறுகளை அடுத்தடுத்த போட்டிகளில் திருத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது T20I போட்டி எதிர்வரும், 6ம் திகதி நடைபெறவுள்ளது.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<