வென்னப்புவ நிவ் யங்ஸ் அணியுடனான டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் சுப்பர் 8 சுற்றின் போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம் இத்தொடரில் சம்பியனாகும் வாய்ப்பை அதிகரித்துக்கொண்டது களுத்துறை புளு ஸ்டார் அணி.

சுப்பர் 8 சுற்றில் ஏற்கனவே இடம்பெற்ற மூன்று வாரப் போட்டிகளின் முடிவில், புளு ஸ்டார் அணி ஒரு வெற்றி மற்றும் இரண்டு சமநிலையான முடிவுகளைப் பெற்றிருந்தது. அதேபோன்று, நிவ் யங்ஸ் அணி இரண்டு சமநிலையான முடிவுகள் மற்றும் ஒரு தோல்வியுடன் தரப்பட்டியலில் புளு ஸ்டாரை விட பின்தங்கி இருந்தது.

சொலிட் அணியை வீழ்த்தி வெற்றியை சுவைத்தது ரினௌன் : தொடரும் சொலிடின் சோகம்

இந்நிலையில் இன்று களனிய கால்பந்து மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் இரு அணிகளும் தரப்பட்டியலில் மேலே செல்லுவதற்காக, வெற்றி பெறும் நோக்கோடு களமிறங்கின.

போட்டி ஆரம்பமாகி இரண்டாவது நிமிடத்தில் நிவ் யங்ஸ் அணி முதல் கோலுக்கான முயற்சியை மேற்கொண்டது. அவ்வணியின் பொஸ்டர் அமாதி கோலை நோக்கி பந்தை உதைய, அதனை புளு ஸ்டார் அணியின் கோல் காப்பாளர் மஞ்சுல பெர்னாண்டோ எந்த பதட்டமும் இன்றி இலகுவாகத் தடுத்தார்.

பத்து நிமிடங்களின் பின்னர் நியூ யங்ஸ் அணியின் மொஹமட் பவ்சான் உதைத்த ப்ரீ கிக்கினை கோல் காப்பாளர் பெர்னாண்டோ முழுமையாக தடுக்க தவறியதால், அவ்வணிக்கு கோல் ஒன்றினை பெற்றுக் கொள்ளக் கூடிய வைய்ப்பு கிடைத்தது. எனினும், தடுப்பு வீரர்கள் சிறப்பாக செயற்பட்டு பந்தினை கோல் பகுதியில் இருந்து வெளியேற்றினர்.

இதேவேளை, புளு ஸ்டார் அணி தாக்குதல் ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தியது. கோல் பகுதிக்குள் வைத்து முன்னணி வீரர் E.B. ஷன்ன பந்தை மொஹமட் இர்ஷானிற்கு கடத்திய போதிலும், அவரால் கோல் ஒன்றினை பெற்றுக் கொள்ள முடியவில்லை.

நியூ யங்ஸ் அணியின் முன்கள வீரர்  மொஹமட் பவ்சான் எதிரணிக்கு தொடர்ந்து பலத்த அழுத்தத்தை வழங்கி வந்தார். எவ்வாறாயினும் போட்டியின் முதல் கோலினை 25ஆவது நிமிடத்தில் புளு ஸ்டார் அணி, அபொன்ஜா ஜிபோலா மூலம் பெற்றுக் கொண்டது.

சில நிமிடங்கள் கடந்த நிலையில் அவ்வணிக்கு மற்றுமொரு கோலினைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்த போதிலும், இம்முறை புளு ஸ்டார் வீரரின் உதை குறி தவறியது.

முதல் பாதியின் இறுதியில் நியூ யங்ஸ் வீரர் ஹசித பிரியங்கரவின் முயற்சியும் இலக்கை நோக்கி அமையாத காரணத்தினால், இடைவேளையின் போது 1-0 என்ற கோல் அடிப்படையில் புளு ஸ்டார் அணி முன்னிலை வகித்தது.

முதல் பாதி: நியூ யங்ஸ் கால்பந்துக் கழகம் 00 – 01 புளு ஸ்டார் விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் புளு ஸ்டார் அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. இதன் காரணமாக நியூ யங்ஸ் அணியினால் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடக்க கூடிய வாய்ப்புக்கள் கிட்டவில்லை.

மொஹமட் பர்சீன் இற்கு அடுத்தடுத்து இரண்டு வாய்ப்புக்கள் கிடைத்த போதிலும், முதல் உதை இலக்கை தவறி வெளியே சென்றதுடன், இரண்டாவது உதையினை கோல் காப்பாளர் கவீஷ் சிறப்பாக தடுத்தார்.

மொஹமட் பவ்சான் பல தடவைகள் ஆடுகளத்தில் இடப்புறம் மூலமாக கோல் பகுதியினை நோக்கி முன்னேறிய போதிலும், அவரிடமிருந்து சக வீரர்களுக்கு வெற்றிகரமாக பந்தை பெற்றுக்கொள்ள இயலவில்லை.

ஆட்டத்தின் 70ஆவது நிமிடத்தில் நியூ யங்ஸ் அணிக்கு மிகவும் சுலபமான வாய்ப்பு ஒன்று கிடைத்த போதிலும், அவ்வாய்ப்பினை ஹசித பிரியங்கர தவறவிட்டார்.

மறுமுனையில் ஜிபோலா அற்புதமான நகர்வுகள் மூலம் கோலினை நோக்கி முன்னேறிய போதும், அவரது உதையை காப்பாளர் கவீஷ் லாவகமாக தடுத்தார்.

போட்டியின் 90 ஆவது நிமிடத்தில் நியூ யங்ஸ் அணிக்கு இறுதியாக ஒரு வாய்ப்பு கிடைத்தது. கோல் காப்பாளர் மஞ்சுல பெர்னாண்டோவை மட்டுமே தாண்ட வேண்டி இருந்த போதிலும், பவ்சானின் உதை காப்பாளரை நோக்கி இருந்ததனால் அவ்வாய்ப்பும் கைநழுவிப் போனது.

இறுதியாக கோல் வித்தியாசத்தை இரண்டாக மாற்ற E.B. ஷன்னவிற்கு வாய்ப்பொன்று கிடைத்த போதிலும், அவரது உதை கோலிற்கு சற்று வெளியாக சென்றதனால் போட்டி 1-0 என நிறைவு பெற்றது.

முழு நேரம்: நியூ யங்ஸ் கால்பந்துக் கழகம் 00 – 01 புளு ஸ்டார் விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் ஆட்ட நாயகன்அபொன்ஜா ஜிபோலா (புளு ஸ்டார்)

போட்டியின் பின்னர் நியூ யங்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் ரோஹித பெர்னாண்டோ ThePapare.com இற்கு கருத்து தெரிவிக்கையில், நாம் இப்போட்டியில் சிறப்பாகவே விளையாடியிருந்தோம். அது தொடர்பாக குறை கூற முடியாது. ஆனால் எமது அணியின் சில வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் திரும்பியவுடன் எமது அணி பலமிக்க அணியாக களமிறங்கும் என்றார்.

புளு ஸ்டார் அணியின் பயிற்றுவிப்பாளரா சந்திரதாஸ கருணாரத்ன எமக்கு பல கோல் வாய்ப்புக்கள் கிடைத்த போதிலும் அவற்றை தவறவிட்டோம். ஆனாலும் நாம் சிறப்பாகவே விளையாடியிருந்தோம். சம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதே எனதும், எனது அணியினதும் எதிர்பார்ப்பாகும் என கருத்து தெரிவித்தார்.

கோல் பெற்றவர்கள்

புளு ஸ்டார் விளையாட்டுக் கழகம் – அபொன்ஜா ஜிபோலா 25′

மஞ்சள் அட்டை

புளு ஸ்டார் விளையாட்டுக் கழகம் – அபொன்ஸா ஜிபோலா 75′