தொடரை இழந்த தென்னாபிரிக்க அணிக்கு தரவரிசையில் பின்னடைவு

1569

புதிய டெஸ்ட் அணிகளின் தரவரிசையின்படி சொந்த மண்ணில் தொடரை இழந்த தென்னாபிரிக்க அணி இரண்டாமிடத்திலிருந்து மூன்றாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டிருக்கின்ற அதேவேளை இலங்கை அணி தொடர் வெற்றியின் மூலம் 4 புள்ளிகளை மேலதிகமாக பெற்று ஆறாமிடத்தில் தொடர்ந்தும் நீடிக்கின்றது.

உலகக்கிண்ண போட்டித்தொடர் ஆரம்பமாகுவதற்கு முன்னர் இரு தரப்பு தொடர் ஒன்றில் ஆடுவதற்காக தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அங்கு தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 3 டி20 சர்வதேச போட்டிகள் என மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடிவருகின்றது.

தென்னாபிரிக்க மண்ணில் வரலாற்று வெற்றியினை பதிவு செய்துள்ள இலங்கை

சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் (23) நிறைவுக்கு வந்திருக்கின்ற நிலையில் குறித்த டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என்ற அடிப்படையில் கைப்பற்றி, தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதல் ஆசிய அணியாக வரலாற்று வெற்றி படைத்திருக்கின்றது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையானது ஒவ்வொரு தொடர்கள் முடிவிலும் குறித்த தொடரில் ஒவ்வொரு அணிகளினதும் வெற்றி, ஏனைய ஓட்ட வீதங்களை வைத்து அணிகளின் தரவரிசையை மாற்றம் செய்து வருகின்றது. அந்த அடிப்படையில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நிறைவடைந்ததன் பின்னர் மாற்றம் செய்யப்பட்ட புதிய டெஸ்ட் அணிகளின் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் பேரவையானது போட்டி முடிவடைந்த உடனேயே வெளியிட்டுள்ளது.

அந்த அடிப்படையில் குறித்த தொடர் ஆரம்பமாகுவதற்கு முன்னர் தென்னாபிரிக்க அணி 110 புள்ளிகளுடன் டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் இரண்டாமிடத்தில் காணப்பட்டது. இலங்கை அணி 89 புள்ளிகளுடன் ஆறாமிடத்தில் காணப்பட்டது.

ஒரு அணியினுடைய வெற்றியும், தோல்வியும் இன்னொரு அணியினுடைய தரவரிசை பட்டியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்வு ஒன்று தற்போது வெளியாகியுள்ள புதிய தரவரிசையிலும் நிகழ்ந்துள்ளது.

தென்னாபிரிக்க அணியை அவர்களது சொந்த மண்ணிலேயே வைத்து இலங்கை அணி அவர்களை வைட்வொஷ் செய்ததன் மூலம் அவ்வணி புதிய டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் 5 புள்ளிகளை இழந்து இரண்டாமிடத்திலிருந்து மூன்றாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 107 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலிருந்த நியூசிலாந்து அணி தற்போது இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளது.  

இலங்கை அணி அடைந்த வரலாற்று தொடர் வெற்றியின் மூலம் புதிய தரவரிசையில் இலங்கை அணிக்கு மேலதிகமாக 4 புள்ளிகள் அதிகரித்திருக்கின்றது. தற்போது இலங்கை அணி 93 புள்ளிகளுடன் தொடர்ந்தும் ஆறாமிடத்திலேயே நீடிக்கின்றது. இலங்கை அணிக்கு முன்னால் ஐந்தாமிடத்தில் காணப்படுகின்ற இங்கிலாந்து அணி 104 புள்ளிகளுடன் காணப்படுவதனாலேயே இலங்கை அணிக்கு தரவரிசையில் மாற்றம் ஏற்படவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய அடுத்த டெஸ்ட் தொடரானது  தரவரிசையில் இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ள நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட தொடராக வரும் வியாழக்கிழமை (28) ஆரம்பமாவுள்ளது.

100 பந்துகள் கிரிக்கெட் தொடருக்கான விதிமுறைகள் வெளியீடு

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இருதரப்பு தொடரின் அடுத்த தொடரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரின் முதல் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (03) ஜொஹனர்ஸ்பேர்க்கில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை – தென்னாபிரிக்க அணிகளின் டெஸ்ட் தொடரின் பின்னரான புதிய டெஸ்ட் தரவரிசை

  1. இந்தியா – 116 புள்ளிகள்
  2. நியூசிலாந்து – 107 புள்ளிகள்
  3. தென்னாபிரிக்கா – 105 புள்ளிகள்
  4. அவுஸ்திரேலியா – 104 புள்ளிகள்
  5. இங்கிலாந்து – 104 புள்ளிகள்
  6. இலங்கை – 93 புள்ளிகள்
  7. பாகிஸ்தான் – 88 புள்ளிகள்
  8. மேற்கிந்திய தீவுகள் – 77 புள்ளிகள்
  9. பங்களாதேஷ் – 69 புள்ளிகள்
  10. ஜிம்பாம்வே – 13 புள்ளிகள்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<