அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய திஸர டி20 சகலதுறை தரவரிசையில் ஐந்தாமிடத்தில்

1916
Image Courtesy - ICC

ஐ.சி.சி இனால் வெளியிடப்பட்டுள்ள புதிய டி20 தரவரிசை பட்டியலின் பிரகாரம் இலங்கை அணி வீரர்களான லசித் மாலிங்க, கசுன் ராஜித, திஸர பெரேரா, குசல் பெரேரா ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

மூவகையான கிரிக்கெட் போட்டித் தொடர்களிலும் விளையாடுவதற்காக நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி மூன்று தொடர்களையும் இழந்து வெறும் கையுடன் அடுத்த தொடருக்காக அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்கவுள்ளது.

உபாதை காரணமாக மீண்டும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள ஸ்மித்

இறுதியாக நடைபெற்ற இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 போட்டியின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் பேரவையானது புதிய டி20 தரப்படுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி துடுப்பாட்டம், பந்துவீச்சு, சகலதுறை மற்றும் அணிகள் ரீதியிலான அனைத்து துறைகளுக்குமான புதிய தரப்படுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

புதிய தரப்படுத்தல்கள் அனைத்தும் இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியை வைத்தே கணிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் நேற்று (11) நடைபெற்ற போட்டியில் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றிய நியூஸிலாந்து அணியின் சுழல் பந்துவீச்சாளர் இஷ் சோதி இரண்டு இடங்கள் முன்னேறி 676 புள்ளிகளுடன் அவுஸ்திரேலிய சுழல் பந்துவீச்சாளர் அடம் ஸம்பா மற்றும் இங்கிலாந்து சுழல் பந்துவீச்சாளர் ஆதில் ரஷீட் ஆகியோரை பின்தள்ளி ஆறாமிடத்திலிருந்து நான்காமிடத்திற்கு தாவியுள்ளார்.

மேலும் அதே போட்டியில் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றியை பறித்த வேகப்பந்து வீச்சாளர் லுக்கி போர்கஸன் 37 நிலை முன்னேறி தற்போது 154 ஆவது இடத்தை அடைந்துள்ளார்.

இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் லசித் மாலிங்க மற்றும் கசுன் ராஜித ஆகியோர் பந்துவீச்சு பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளனர். லசித் மாலிங்க 10 நிலை முன்னேறி 53 ஆவது இடத்திற்கும், கசுன் ராஜித 21 நிலை முன்னேறி 167 ஆம் இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.

பந்துவீச்சாளர்களின் தரப்படுத்தலில் முதலிடத்தில் 793 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தான் சுழல் மன்னன் ரஷீட் கான் உள்ளார்.

துடுப்பாட்ட வீரர்களின் தரப்படுத்தலுக்கு அமைய எதிரணி வீரர்களை அதிரடி ஆட்டம் மூலம் சிறிது நேரம் அலரவிட்ட இலங்கை அணியின் திஸர பெரேரா 8 நிலை முன்னேறி தற்போது 526 புள்ளிகளுடன் 31 ஆவது இடத்தை தொட்டுள்ளார். அத்துடன் குசல் பெரேரா 1 நிலை முன்னேறி 586 புள்ளிகளுடன் 23 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

நியூஸிலாந்து அணி சார்ப்பில் கொலின் மன்ரோ தொடர்ந்தும் இரண்டாமிடத்தில் உள்ளார். மேலும் கடந்த போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டொக் பிரஸ்வெல் 31 நிலை முன்னேறி 175 ஆம் இடத்தை பிடித்துள்ளார். அவருடன் சேர்ந்து மறுமுனையில் அதிரடி காட்டிய கன்னி டி20 போட்டியில் விளையாடிய ஸ்கொட் குக்லின்ஞ் தரவரிசையில் தடம்பதித்துள்ளார். அவர் 197 ஆவது இடத்தில் உள்ளார்.

புதிய டி20 துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் தொடர்ந்தும் முதலிடத்தில் பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர் பாபர் அஸாம் 858 புள்ளிகளுடன் நீடிக்கின்றார்.

சகலதுறை வீரர்களின் தரப்படுத்தலில் நேற்றைய போட்டியில் ஒவ்வொரு விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்களான திஸர பெரேரா, டொக் பிரஸ்வெல் மற்றும் கன்னி போட்டியில் விளையாடிய ஸ்கொட் குக்லின்ஞ் ஆகியோர் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

திஸர பெரேரா 219 புள்ளிகளுடன் ஆறாமிடத்திலிருந்து ஐந்தாமிடத்தை அடைந்துள்ளார். மேலும் டொக் பிரஸ்வெல் 40 நிலை முன்னேறி 89 ஆவது இடத்திலும், ஸ்கொட் குக்லின்ஞ் தரவரிசையில் 227 ஆவது இடத்தில் கால் பதித்துள்ளார்.

நிபுன் – சமிந்துவின் சிறப்பாட்டத்தால் ஆஸி இளையோரை வீழ்த்திய இலங்கை இளையோர்

சகலதுறை வீரர்களின் தரவரிசையில் அவுஸ்திரேலிய வீரர் கிளேன் மெக்ஸ்வெல் 362 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்திலுள்ளார்.

புதிய அணிகள் ரீதியிலான தரப்படுத்தலில் பாகிஸ்தான் அணி 138 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. தொடரை கைப்பற்றிய நியூஸிலாந்து அணி ஒரு புள்ளியை மேலதிகமாக பெற்று தொடர்ந்தும் ஆறாமிடத்தில் உள்ளது. தோல்வியை தழுவிய இலங்கை அணி ஒரு புள்ளியை இழந்து 86 புள்ளிகளுடன் தொடர்ந்தும் ஒன்பதாமிடத்தில் உள்ளது.

நேற்றைய நாளின் (11) அடிப்படையில் அணிகளின் புதிய டி20 தரவரிசை

  1. பாகிஸ்தான் – 138 புள்ளிகள்
  2. இந்தியா – 126 புள்ளிகள்
  3. இங்கிலாந்து – 118 புள்ளிகள்
  4. அவுஸ்திரேலியா – 117 புள்ளிகள்
  5. தென்னாபிரிக்கா – 114 புள்ளிகள்
  6. நியூஸிலாந்து – 113 புள்ளிகள்
  7. மேற்கிந்திய தீவுகள் – 101 புள்ளிகள்
  8. ஆப்கானிஸ்தான் – 92 புள்ளிகள்
  9. இலங்கை – 86 புள்ளிகள்
  10. பங்களாதேஷ் – 77 புள்ளிகள்  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<