இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவராக க்ரேம் லப்ரோய்

690

இலங்கை கிரிக்கெட் சபையானது க்ரேம் லப்ரோய் தலைமையில் 5 பேர் கொண்ட தெரிவுக் குழுவை நியமிப்பதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுள்ளது. இதன் போது வெற்றிடமாகியுள்ள சனத் ஜயசூரியவின் தெரிவுக்குழுத் தலைவர் பதவிக்கு லப்ரோய் நியமிக்கப்படவுள்ளதுடன் இம்மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தான் அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை டெஸ்ட் குழாமின் இறுதித் தெரிவை அவரே மேற்கொள்ள உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நடந்து முடிந்த இந்திய அணிக்கு எதிரான அனைத்து விதமான போட்டிகளிலும் 9-0 என்ற கணக்கில் சொந்த மண்ணில் மோசமாக தோல்வியடைந்ததை அடுத்து சனத் ஜயசூரிய தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவானது தமது கடமைகளை இராஜினாமா செய்தது.

இலங்கை அணியானது ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளதுடன் இறுதி டி20 போட்டி லாஹூர் கடாபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான லப்ரோய், 1986 – 1992 காலப்பகுதியில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி 9 டெஸ்ட் மற்றும் 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பதுடன் தற்பொழுது சர்வதேச கிரிக்கெட் சபையின் ஆசிய பிராந்தியத்திற்கான போட்டி மத்தியஸ்தகராக செயற்பட்டு வருகிறார். இலங்கை தேர்வுக்குழுத் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ள அவர் தனது போட்டி மத்தியஸ்தகர்  பதவியை இராஜினாமாச் செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சீரற்ற காலநிலையால் மற்றொரு நெருக்கடியில் மேற்கிந்திய தீவுகள் அணி

தேர்வுக் குழுவிற்கு அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் பயிற்றுவிப்பாளரும் நிர்வாகியுமான ஜயந்த செனவிரத்ன மற்றும் முன்னாள் டெஸ்ட் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான மலிந்த வர்ணபுர ஆகியோர் புதிதாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன், முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர்களான எரிக் உபஷாந்த மற்றும் ரஞ்சித் மதுருசிங்ஹ ஆகியோரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.