2023 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்துக்கான புதிய தகுதிகாண் சுற்று முறை அறிமுகம்

1161
Image Courtesy - ICC

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி) 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கான தகுதிகாண் சுற்றின் வரைவை முற்று முழுதாக மாற்றி புதிய வரைவொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகக் கிண்ணத்துக்கு எப்போதும் போன்று 10 அணிகள் மாத்திரமே தகுதிபெற முடியும் என்றாலும், தகுதிகாண் சுற்றுப் போட்டிகளில் தொடரை நடாத்தும் அணி உட்பட 32 அணிகள் மூன்று லீக் போட்டிகளின்படி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. சுமார் 2-3 வருடங்கள் நடைபெறவுள்ள தகுதிகாண் போட்டித் தொடரில் 372 அணிகள் மோதவுள்ளன.

திசரவுடன் இறுதிவரை துடுப்பெடுத்தாடியிருந்தால் போட்டியின் முடிவை மாற்றியிருக்கலாம் – தசுன் சானக

ஐ.சி.சி இன் உறுப்பு நாடுகளுக்கு உலகக்கிண்ண வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள புதிய தகுதிகாண் சுற்றில் உலகக் கிண்ண சுப்பர் லீக், உலகக் கிண்ண லீக் 2 மற்றும் உலகக் கிண்ண சவால் லீக் என மூன்று லீக் தொடர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த லீக் முறைமைகளின்படி உலகக் கிண்ணத்துக்கான பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

உலகக் கிண்ண சுப்பர் லீக்

உலகக் கிண்ண சுப்பர் லீக் சுற்றில் ஐ.சி.சி ஒருநாள் தரவரிசையில் முதல் 13 இடங்களில் இருக்கும் அணிகள் மோதும்.  2020-2022 ஆம் ஆண்டுகளில் நடைபெறும் இந்த லீக்கில் அணிக்கு தலா 24 போட்டிகள் என 156 போட்டிகள் நடைபெறும். இதில் முதல் 7 இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் போட்டியை நடாத்தும் அணி என 8 அணிகள் நேரடியாக உலகக்கிண்ணத்துக்கு தகுதிபெறும்.

இதில் கடைசி 5 இடங்களை பிடிக்கும் அணிகள் 2022 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கிண்ண தகுதிகாண் சுற்றில் உள்வாங்கப்படும்.

உலகக் கிண்ண லீக் 2

உலகக் கிண்ண லீக் 2 சுற்றில் தரவரிசையில் 14 தொடக்கம் 20 இடங்களை பிடித்திருக்கும் 7 அணிகள் பலப்பரீட்சை நடத்தும்.  2019 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஆரம்பிக்கும் இந்த லீக் போட்டிகள் 2022 ஆம் ஆண்டு நிறைவுக்கு வரும்.

ஏழு அணிகளுக்கும் தலா 36 போட்டிகள் என மொத்தமாக 126 போட்டிகள் நடைபெறுவதுடன், இதில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள் 2022 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுக்குள் உள்வாங்கப்படும். இறுதி நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் 2022 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கிண்ண தகுதிகாண் தொடருக்கான  பிளே-ஓஃப் (Play off) சுற்றில் இடம்பிடிக்கும்.

உலகக் கிண்ண சவால் லீக்

உலகக் கிண்ண சவால் லீக் சுற்றில், ஐ.சி.சி தரவரிசையின் 21 தொடக்கம் 32 இடங்களை பிடித்துள்ள 12 அணிகள் தலா 6 அணிகளாக பிரிந்து A மற்றும் B என இரண்டு பிரிவுகளில் போட்டியிடும்.

A மற்றும் B பிரிவுகளுக்கான போட்டிகள் 2019-2021 ஆம் ஆண்டுகளில் நடைபெறும். இதில் A, B குழுக்களில் வெற்றிபெறும் அணிகள் 2022 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கிண்ண தகுதிகாண் தொடருக்கான  பிளே-ஓஃப் சுற்றுக்கு தகுதிபெறும்.

இதனடிப்படையில்,  உலகக் கிண்ண லீக் 2 சுற்றில் கடைசி 4 இடங்களை பிடித்துள்ள அணிகள் மற்றும் உலகக் கிண்ண சவால் லீக்கில் வெற்றிபெற்ற இரண்டு அணிகள் என மொத்தமாக ஆறு அணிகள் 2022 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கிண்ண தகுதிகாண் தொடருக்கான  பிளே-ஓஃப் சுற்றில் மோதும். இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், உலகக்கிண்ண தகுதிகாண் சுற்றுக்கு முன்னேறும்.

இம்ருல் கைசின் சதத்தால் ஜிம்பாப்வேயை வீழ்த்திய பங்களாதேஷ்

இதன்படி, உலகக் கிண்ண சுப்பர் லீக் சுற்றில் கடைசி 5 இடங்களை பிடித்த அணிகள், உலகக் கிண்ண லீக் 2 சுற்றில் முதல் 3 இடங்களைப் பிடித்த அணிகள் மற்றும் தகுதிகாண் தொடருக்கான  பிளே-ஓஃப் சுற்றில் வெற்றிபெற்ற இரண்டு அணிகள் என மொத்தமாக 10 அணிகள் உலக் கிண்ண தகுதிகாண் சுற்றில் போட்டியிடும். இதில் வெற்றிபெறும் அணி மற்றும் இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணி ஆகியன 2023 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதிபெறும்.

ஐ.சி.சி இன் 13 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி 9 ஆம் திகதி முதல் மார்ச் 26 ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. வரலாற்றில் முதல் தடவையாக இந்தியா தனியாக நடத்தவுள்ள உலகக் கிண்ணத் தொடர் இதுவென்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<