போராட்டத்திற்கு மத்தியில் தேசிய சாதனை நிகழ்த்திய அனித்தா

1610

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்துள்ள 56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் இன்று(23) காலை நவீன மயப்படுத்தப்பட்ட கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.

கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் நாளை முதல் சுகததாஸ விளையாட்டரங்கில்

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 56 ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்….

போட்டிகளின் முதல் நாளான இன்று காலை நடைபெற்ற 23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரதிநிதித்துப்படுத்தி கலந்துகொண்ட அனித்தா ஜெகதீஸ்வரன் 3.55 மீற்றர் உயரத்தைத் தாவி மீண்டும் தேசிய சாதனை படைத்தார். இதன்மூலம், கடந்த ஒரு வருட காலப்பகுதியில் தொடர்ச்சியாக 5ஆவது தடவையாகவும் தேசிய சாதனையை முறியடித்த வீராங்கனையாக வரலாற்றில் அவர் இடம்பிடித்தார்.

போட்டியின் ஆரம்ப சுற்றில் 3.30 மீற்றர் உயரத்தைப் பாய்ந்த அனித்தா, 2ஆவது சுற்றில் 3.50 மீற்றர் உயரத்தைக் கடந்து, 2017இல் மாத்தறையில் நடைபெற்ற 43ஆவது தேசிய விளையாட்டு விழாவில் அவரால் நிலைநாட்டப்பட்ட(3.48 மீற்றர்) தேசிய சாதனையை முறியடித்தார்.

இதனையடுத்து 3.55 மீற்றர் உயரத்தைத் தெரிவு செய்த அனித்தா, முதலிரண்டு முயற்சிகளிலும் தோல்வியைத் தழுவினார். எனினும், இறுதி முயற்சியில் வெற்றி கொண்ட அவர், 2ஆவது தடவையாகவும் தேசிய சாதனையொன்றை நிகழ்த்தினார்.

எனினும், ஆசிய அடைவுமட்டமான 3.80 மீற்றர் உயரத்தை மனதில் கொண்டு 3.60 மீற்றர் உயரத்தை அடுத்த இலக்காக அனித்தா தெரிவுசெய்தார். ஆனால் அவர் மேற்கொண்ட 3 முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

இதன்படி, கடந்த வருடம் மாத்தறையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவின் முதல்நாளில் தேசிய சாதனை படைத்த அனித்தா, இவ்வருடம் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளின் முதல் நாளில் மற்றுமொரு தேசிய சாதனை படைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சி.சுபாஸ்கரனின் பயிற்றுவிப்பின் கீழ் தனது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற அனித்தா, கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற தாய்லாந்து திறந்த மெய்வல்லுனர் போட்டித் தொடரில் முதற்தடவையாக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தேசிய சாதனை படைத்த பிறகு ThePapapre.com இணையளத்தளத்துக்கு அனித்தா வழங்கிய பிரத்தியேக செவ்வியில், ”தேசிய சாதனையை மீண்டும் புதுப்பிக்க முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது. எனது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து வருகின்ற எனது பயிற்சியாளர் சுபாஸ்கரன் ஆசிரியருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.

இந்நிலையில், 3.60 மீற்றருக்கு மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தமை தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு அனித்தா பதிலளிக்கையில்,

”உண்மையில் 3.55 மீற்றரை உயரத்தை தாவுவதற்கு கிடைத்தமையே மிகப் பெரிய வெற்றி என்று சொல்லலாம். ஆனாலும் கடந்த இரண்டு வருடங்களாக ஆசிய அடைவுமட்டமான 3.80 மீற்றர் உயரத்தைத் தாவுவதற்கு கடுமையான முயற்சி செய்து வருகிறேன். எனவே, அதற்கு கிடைத்த வெற்றியாக நான் இதை கருதுகிறேன்” என்றார்.

பொதுநலவாய விளையாட்டில் இலங்கை அஞ்சலோட்ட அணி புதிய சாதனை

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் 21 ஆவது பொதுநலவாய விளையாட்டு…

இதேவேளை, இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட கே. பெரேரா, 3.10 மீற்றர் உயரம் தாவி 2ஆவது இடத்தையும், கிளிநொச்சி, பளை மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஜே. சுகிர்தா 3.00 மீற்றர் உயரம் தாவி 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இன்று காலை 10 மணியளவில் கோலூன்றிப் பாய்தல் போட்டிகள் ஆரம்பமாகின. இதில் 20 மற்றும் 23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டிகளை ஒரே நேரத்தில் ஆரம்பிக்க போட்டி ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர். இதனையடுத்து வீராங்கனைகளுக்கு பரீட்சார்த்த போட்டிகளில் ஈடுபட 15 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டன.

அதன்பிறகு போட்டிகள் ஆரம்பமாகியதுடன், மதியம் 12.30 மணியளவில் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான போட்டி நிறைவடைந்தது. தொடர்ந்து 2.00 மணியளவில் 23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டிகளும் நிறைவுக்கு வந்தன. எனவே பசிக்கும், தாகத்துக்கும் மத்தியில் கடுமையான வெயிலையும் தாங்கிக்கொண்டு இந்த வீராங்கனைகள் வெற்றிகளைப் பதிவுசெய்தனர்.

இவ்வாறான கஷ்டங்களுக்கு மத்தியில் கோலூன்றிப் பாய்தலின் நட்சத்திர வீராங்கனையான அனித்தா ஜெகதீஸ்வரன் ஒரே நாளில் 2 தடவைகள் தேசிய சாதனையை முறியடித்திருந்தமை பாராட்டத்தக்க விடயமாகும்.

எனவே, தேசிய மட்டத்தில் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்ற அனித்தாவுக்கு எமது இணையத்தளத்தின் வாயிலாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

காணொளிகளைப் பார்வையிட