அமெரிக்க அரைமரதன் தொடரில் சொந்த தேசிய சாதனையை முறியடித்துள்ள ஹிருனி

127
Hiruni Wijerathne

அமெரிக்காவில் வசித்து வரும் இலங்கை மரதன் ஓட்ட வீராங்கனையான ஹிருனி விஜேயரத்ன அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் நேற்று (24) இடம்பெற்றிருந்த மேசா-PHX அரை மரதன் (MESA-PHX MARATHON) ஓட்ட நிகழ்வில் வெற்றி பெற்றதன் மூலம் அரை மரதன் ஓட்டப் போட்டிகளுக்கான தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்திருக்கின்றார்.

ஹிருனி நேற்று நடைபெற்றிருந்த இந்த அரை மரதன் ஓட்டப் போட்டி  நிகழ்வை 1 மணித்தியாலம் 14 நிமிடங்கள் மற்றும் 07 செக்கன்களில் ஓடி முடித்தே தற்போது புதிய சாதனையை நிலைநாட்டியிருக்கின்றார்.  ஏற்கனவே, ஹிருனி அரை மரதன் போட்டியொன்றை 1 மணித்தியாலம் 17 நிமிடங்கள் 34 செக்கன்களில் ஓடியதே தேசிய சாதனையாக இருந்தது. இதன் மூலம் அவருடைய பழைய சாதனை மூன்று நிமிடங்களால் முறியடிக்கப்பட்டிருக்கின்றது.  ஹிருனி 2014 ஆம் ஆண்டில் இடம்பெற்றிருந்த ஈவான்ஸ்வில்லே (Evansville) அரை மரதன் ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்றே முதலாவது தேசிய சாதனையை பதிவிட்டிருந்தார்.

இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் தொடரில் கிழக்கு வீரர்கள் அபாரம்

இந்தோனேஷியாவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்..

அத்தோடு ஹிருனிக்கு இந்த அடைவு 2018 ஆம் ஆண்டில் பெற்றுக் கொண்ட இரண்டாவது தேசிய சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்த ஹூஸ்டன் (Houston) மரதன் தொடரின் மூலம் முழு மரதன் ஓட்டத் தொடர் ஒன்றை 2 மணித்தியாலங்கள் 36 நிமிடங்கள் 35 செக்கன்களின் முடித்து ஹிருனி புதிய தேசிய சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 17 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகின்ற ஹிருனி விஜேயரத்ன 2017 இல் முதல் தடவையாக இலங்கையை லண்டனில் இடம்பெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் (IAAF World Championship) பிரதிநிதித்துவம் செய்திருந்தார். ஹிருனி, ஈயூஜின் (Eugene) மரதன் ஓட்டத் தொடரில் கிடைத்த வெற்றி மூலமே இந்த சர்வதேச விளையாட்டு நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பினை பெற்றுக் கொண்டிருந்தார். எனினும் துரதிஷ்டவசமாக காலில் ஏற்பட்ட உபாதை ஒன்றின் காரணமாக 21 கிலோமீற்றர் தூரத்தினை பூர்த்தி செய்தவாறு ஹிருனி குறித்த தொடரில் இருந்து இடையே விலகியிருந்தார்.

கடந்த ஓக்டோபரில் நீண்ட கால இடைவெளி ஒன்றின் பின்னர் இலங்கை வந்திருந்த ஹிருனி, கொழும்பில் இடம்பெற்றிருந்த எல்.எஸ்.ஆர் (LSR) அரை மரதன் தொடரில் பங்கேற்றிருந்தார். இத்தொடரினை 1 மணித்தியாலம் 23 நிமிடம் 21 செக்கன்களில் ஓடி முடித்து அவர் வெற்றியாளரகாவும் மாறியிருந்தார். இதேவேளை, ஹிருனியின் கணவர் லூயிஸ் ஓர்டா குறித்த எல்.எஸ்.ஆர் (LSR) அரை மரதன் தொடரின் ஆண்கள் பிரிவில் பங்கேற்று அதனை 1 மணித்தியாலம் 10 நிமிடங்கள் 39 செக்கன்களில் ஓடி முடித்து  முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஹூஸ்டனில் இடம்பெற்றிருந்த மரதன் ஓட்ட தொடரில் புதிய சாதனையை நிலை நாட்டியிருந்த ஹிருனி அந்த வெற்றி மூலம், அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் இடம்பெறவிருக்கும் இந்த ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்பினையும் பெற்றுக் கொண்டுள்ளார். எதிர் வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்ற இந்த சர்வதேச  தொடரிலும் ஹிருணியினால் தேசிய சாதனை முறியடிக்கப்படவும், பல சிறப்பான அடைவுகள் பெறவும் எதிர்பார்க்கப்படுகின்றது.