தனித்துப் பேராடிய குசல் பெரேரா டெஸ்ட் தரவரிசையில் அதிரடி முன்னேற்றம்

1320

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்காக தனி மனிதனாக நிலைத்துநின்று போராடிய குசல் ஜனித் பெரேரா டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளதுடன், வாழ்நாள் அதிக புள்ளிகளையும் பெற்றுள்ளார். அத்துடன் இலங்கை அணியில் டெஸ்ட் அறிமுகம் பெற்ற இரு வீரர்களும் முதல் போட்டியிலேயே டெஸ்ட் தரவரிசையில் தடம்பதித்துள்ளனர்.

டர்பனில் இலங்கை அணியும் குசல் பெரேராவும் பதிவு செய்த சாதனைகள்

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக…

சர்வதேச கிரிக்கெட் பேரவையானது ஒவ்வொரு தொடர் நிறைவடைந்த பின்னரும் ஒவ்வொரு அணிகள், அணி வீரர்கள் பெற்றுக்கொண்ட அடைவு மட்டங்களை அதன் தரவரிசை மூலம் கணிப்பிட்டு வருகின்றது. இருந்தாலும் தொடர் நிறைவடைவதற்கு முன்னர் குறித்த போட்டியில் வீரர்களினால் ஏதாவது பாரிய சாதனைகள் நிகழ்த்தப்படும் பட்சத்தில் தொடர் நிறைவடைவதற்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் பேரவையானது வீரர்களின் தரப்படுத்தலை வெளியிடுகின்றது.

அந்த அடிப்படையில் நேற்றைய தினம் (16) இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் நிறைவுற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் பின்னர் டெஸ்ட் வீரர்களுக்கான புதிய தரவரிசை சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இன்று (17) வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று (16) நடைபெற்றிருந்த போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு தனி மனிதனாக இறுதிவரை களத்தில் இருந்து போராடிய குசல் பெரேராவுக்கு புதிய டெஸ்ட் வீரர்களின் தரவரிசையில் அசுர முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

முதல் இன்னிங்ஸில் அரைச்சதம் (51) மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காது சதம் (153) பெற்று குறித்த போட்டியில் மொத்தமாக 204 ஓட்டங்களை குவித்த குசல் பெரேரா புதிய டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் அதிரடியாக 58 இடங்கள் முன்னேறி 40ஆவது இடத்தை அடைந்துள்ளார். மேலும், நேற்றைய போட்டியின் மூலமாக குசல் பெரேரா டெஸ்ட் கிரிக்கெட் வாழ்நாளில் அதி உச்ச புள்ளிகளாக 556 புள்ளிகளை பெற்றுள்ளார்.

மேஜர் T20 லீக்கில் பிரகாசித்த சந்திமால், அகில மற்றும் சீகுகே

இலங்கையில் உள்ள 24 முன்னணி கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான…

இது தவிர துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில், இரண்டாவது இன்னிங்ஸில் 90 ஓட்டங்களை பெற்று தென்னாபிரிக்க அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை அதிகரிப்பிற்கு காரணமான அவ்வணியின் தலைவர் பாப் டு ப்ளெஸிஸ் 7 இடங்கள் முன்னேறி தற்போது இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்னவுடன் 10ஆவது இடத்தில் உள்ளார்.

போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் அரைச்சதமடித்து மொத்தமாக 135 ஓட்டங்களை அணிக்காக பகிர்ந்து கொண்ட விக்கெட் காப்பாளர் குயின்டன் டி குக் 4 இடங்கள் முன்னேறி அவ்வணியின் மற்றுமொரு துடுப்பாட்ட வீரரான எய்டன் மர்க்ரமுடன் சேர்ந்து 8ஆவது இடத்தில் காணப்படுகின்றார். இலங்கை அணியின் வெற்றிக்கு இறுதி இன்னிங்ஸில் குசல் பெரேராவுடன் இணைந்து பக்கபலமாக காணப்பட்ட தனன்ஜய டி சில்வா 6 இடங்கள் முன்னேறி 57ஆவது இடத்தை அடைந்துள்ளார்.

மேலும், கடந்த போட்டியில் துடுப்பாட்டத்தில் சொதப்பிய தென்னாபிரிக்க வீரர் ஹசிம் அம்லா தற்போது 13ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். அத்துடன் இலங்கை அணி வீரரான குசல் மெண்டிஸ் 24ஆவது இடத்திலிருந்து தற்போது 29ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தில் காணப்பட்ட தென்னாபிரிக்க அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ககிஸோ றபாடா இலங்கை அணியுடனான போட்டியில் பிரகாசிக்காததன் காரணமாக முதலிடத்திலிருந்து மூன்றாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். இதன் காரணமாக இரண்டாமித்திலிருந்த ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் பெட் கம்மின்ஸ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

பெட் கம்மின்ஸின் முதலிட வருகையானது ஆஸி. அணியின் டெஸ்ட் கிரிக்கெட் வராலாற்றில் சாதனையாக மாறியிருக்கின்றது. கடந்த 2006ஆம் ஆண்டு ஆஸி. வீரர் கிளேன் மெக்ராத் டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தில் காணப்பட்டார். இந்நிலையில் தற்போது 12 வருடங்களுக்கு பின்னர் ஆஸி. அணி வீரர் தரவரிசையில் முதலிடத்தை பிடிக்கும் சந்தர்ப்பமாக இது மாறியுள்ளது.

இலங்கை அணி சார்பாக பந்துவீச்சாளர்களின் தரவரிசையில், இரு இன்னிங்ஸ்களிலும் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளரான விஷ்வ பெர்ணாந்து 26 இடங்கள் முன்னேறி தற்போது 49ஆவது இடத்திற்கு வந்துள்ளார். மேலும், 4 விக்கெட்டுகளை வீழ்த்திய மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளரான கசுன் ராஜித 17 இடங்கள் முன்னேறி 59ஆவது இடத்தை அடைந்துள்ளார்.

தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான டுவன்னி ஒலிவியர் 666 புள்ளிகளுடன் 3 இடங்கள் முன்னேறி தற்போது 22ஆவது இடத்தை பிடித்துள்ளார். அத்துடன் இது ஒலிவியர் வாழ்நாளில் பெற்றுக்கொண்ட அதிகூடிய டெஸ்ட் புள்ளிகளாகும்.

மேலும், இலங்கை அணி சார்பாக டெஸ்ட் அறிமுகம் பெற்றுக்கொண்ட லசித் எம்புல்தெனிய இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி டெஸ்ட் தரவரிசையில் 68ஆவது இடத்தில் பெயர் பதித்துள்ளார். அவருடன் சேர்ந்து அறிமுக வீரராக களமிறங்கிய ஓசத பெர்ணாந்து டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் 100ஆவது இடத்தில் தனது பெயரை பதித்துள்ளார்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க