மீண்டும் முரளி, சச்சின் ஆகியோர் களத்தில்

76

பிரையன் லாரா, சச்சின் டெண்டுல்கர், முத்தையா முரளிதரன் மற்றும் ஜேக்ஸ் கல்லிஸ் என கிரிக்கெட் உலகின் முன்னாள் கதநாயகர்கள் விளையாடவுள்ள புதிய வகை T20 கிரிக்கெட் தொடரொன்று ஏற்பாடு செய்யப்படவுள்ளது. 

இந்தியாவில் ஆண்டுதோறும் அதிக உயிர்கள் வீதி விபத்துக்கள் மூலம் பறிபோகின்றன. இதனை கருத்திற்கொண்டு வீதி பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் நடாத்தப்படவுள்ள இந்த புதிய வகை T20 தொடர், வீதி பாதுகாப்பு உலக தொடர் (Road Safety World Series) என பெயரிடப்பட்டிருக்கின்றது. இன்னும், இந்த கிரிக்கெட் தொடரில் பிரட் லீ, சிவ்னரைன் சந்தர்போல் போன்ற முன்னாள் முன்னணி நட்சத்திர கிரிக்கெட் வீரர்களும் பங்கெடுக்கவிருக்கின்றனர். 

மீண்டும் ஐ.சி.சி. இன் உறுப்பினராக மாறும் ஜிம்பாப்வே, நேபாள் அணிகள்

மூன்று மாத தடைக்கு பின்னர் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியினை, சர்வதேச…

இந்த T20 தொடரின் முதல் அத்தியாயப் (First Edition) போட்டிகள் யாவும் 2020 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரையில், இந்தியாவின் மும்பை நகரில் இடம்பெறவிருப்பதாக அறியக்கிடைத்திருக்கின்றது. இந்த தொடரில் ஐந்து அணிகள் பங்குபெறவிருக்கின்றன. அதன்படி, இந்தியா லெஜென்ட்ஸ், தென்னாபிரிக்கா லெஜென்ட்ஸ், அவுஸ்திரேலியா லெஜென்ட்ஸ், இலங்கை லெஜென்ட்ஸ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் லெஜென்ட்ஸ் ஆகிய ஐந்து அணிகளே முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்கள் விளையாடும் இந்த கிரிக்கெட் தொடரில் பங்கெடுக்கவிருக்கின்றன. 

இந்நிலையில், இந்த தொடரில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்த சுமார் 110 வீரர்கள் பங்கெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த போட்டிகள் ஐ.பி.எல். போன்று பொதுவாக நடைபெறும் உள்ளூர் T20 போட்டிகளை ஒத்தவிதத்தில் நடைபெறும் என கருதப்படுகின்றது. இதேவேளை, தொடரின் முதல் அத்தியாயப் போட்டிகள் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளின் அணிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்த கிரிக்கெட் தொடரினை Professional Management Group அமைப்பும், இந்திய மாநில அரசான மஹராஷ்ட்ராவின் Road Safety Cell அமைப்பும் இணைந்து நடாத்தவிருக்கின்றன. இந்த கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அடுத்த 10 வருடங்களுக்கு தொடர்ந்து இடம்பெறும் எனவும் கூறப்பட்டிருக்கின்றது. 

முன்னதாக, இந்த கிரிக்கெட் தொடருக்கான வரைவு 2018 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடம் (BCCI) சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த கிரிக்கெட் தொடரினை அப்போது நடாத்த இந்திய கிரிக்கெட் சபை இணக்கம் தெரிவிக்காது போயிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்த கிரிக்கெட் தொடரில் பங்கெடுக்கும் வீரர்களின் ஊதியங்கள், தொடரில் பங்கெடுக்கும் ஒவ்வொரு அணிகளினதும் நிர்வாகசபைகள் மூலம் வழங்கப்படவிருக்கின்றன. 

கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த புதிய கிரிக்கெட் தொடர் மூலம் முன்னாள் நாயகர்களாக இருந்த கிரிக்கெட் வீரர்களை மீண்டும் மைதானத்தில் காண்பதற்கான மிகவும் அரிய வாய்ப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<