டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரின் கிண்ணத்தை வெல்வதற்கான வாய்ப்பை நிலைத்து வைத்துக்கொள்வதற்காக இன்று இடம்பெற்ற கடற்படை அணியுடனனான போட்டியில் இரண்டாவது பாதியில் பெறப்பட்ட கோல்களின் உதவியுடன் ரினௌன் அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

சுப்பர் 8 சுற்றின் 5 வாரப் போட்டிகளின் நிறைவில் பெற்ற புள்ளிகளின்படி, ரினௌன் அணி 4 வெற்றிகளுடன் மொத்தமாக 12 புள்ளிகளைப் பெற்று தரப்படுத்தலில் இரண்டாவது இடத்திலும், கடற்படை அணி 5 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு சமநிலையான முடிவு என்பவற்றுடன் 4 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் இருந்தது.

எனினும், ரினௌன் அணிக்கு இன்றைய போட்டி முக்கிய போட்டியாக இருந்தது. அவர்கள் லீக் சம்பியனாக வருவதற்கு இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருந்தது.

போட்டி முழுவதும் கோல்களைப் போட்டு நிறைத்த ராணுவப்படை அணி

போட்டி ஆரம்பமாகியவுடனேயே ரினௌன் வீரர் ஜொப் மைக்கல் கோலுக்கான முதலாவது முயற்சியை மேற்கொண்டார்.  

ஆட்டத்தின் 13ஆவது நிமிடத்தில் ரினௌன் அணிக்கு கிடைத்த கோலுக்கான வாய்ப்பின்போது, ரிப்னாஸ் மேற்கொண்ட முயற்சி பிரசங்க சஞ்சீவ மூலம் முறியடிக்கப்பட்டது.

ஆட்டத்தின் 18ஆவது நிமிடத்தில் ரினௌன் வீரர்கள் பல தடைகளைத் தாண்டி சிறந்த பந்துப் பரிமாற்றங்களின் பின்னர் ஒரு கோலைப் பெற்றாலும், நடுவரால் அது ஓப் சைட் கோல் என்று தெரிவிக்கப்பட்டு, கோல் நிராகரிக்கப்பட்டது.

அதன் பின்னர் தொடர்ந்து இரு தரப்பினராலும் சம அளவிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், கோலுக்கான அதிக வாய்ப்புகளை ரினௌன் அணி பெற்றது.

அதேநேரம், முதல் 25 நிமிடங்களில் மாத்திரம் ரினௌன் அணிக்கு மூன்று முறை ஓப் சைட் சைகை காண்பிக்கப்பட்டது.  

30 நிமிடங்கள் கடந்த நிலையில் தம்மிக்க ரத்னாயக்க உள்ளனுப்பிய பந்தை கிறிஷான்த பெரேரா பாய்ந்து தலையால் முட்டி கோலாக்க முயற்சித்தாலும், அது சிறந்த நிறைவைக் கொடுக்கவில்லை.

எனினும் 34ஆவது நிமிடம் தம்மிக்க ரத்னாயக்க மீண்டும் உள்ளனுப்பிய பந்தை, ஜெரன் பெர்னாண்டோ சிறந்த முறையில் தட்டி கடற்படை அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

அதன் பின்னர் ரினௌன் அணி வீரர்கள், தமது முதல் கோல் முயற்சிக்காக பலமாக செயற்பட ஆரம்பித்தனர். மறு முனையில் கடற்படைத் தரப்பும் அதற்கு ஈடு கொடுத்து விளையாடினர்.  

ஆட்டத்தின் 43ஆவது நிமிடத்தில் கிறிஷான்த பெரேராவை முறையற்ற விதத்தில் வீழ்த்தியமைக்காக ரினௌன் வீரர் ரிஸ்கானுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

முதல் பாதி நிறைவில் ஜெரான் பெர்னாண்டோவின் கோல் மாத்திரமே பெறப்பட்டிருந்தது.

முதல் பாதி : ரினௌன் விளையாட்டுக் கழகம் 0–1 கடற்படை விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதியில் 51ஆவது நிமிடத்தில் ஜொப் மைக்கல் தனது காலுக்கு வந்த பந்தை தனது பின் பக்கத்தினால் ரிப்னாசிற்கு சிறந்த முறையில் வழங்க, அதனை பெற்ற ரிப்னாஸ், கோல் காப்பாளருக்கு எந்த விதத்திலும் மறைக்க முடியாத விதத்தில் பந்தை கோலுக்குள் செலுத்தினார்.

ஆட்டம் சமநிலையடைந்ததும், ரினௌன் வீரர்கள் தமது வேகத்தை மேலும் அதிகரித்தனர். அதன் பலனாக ஜொப் மைக்கல் மற்றொரு வாய்ப்பைப் பெற்றார். எனினும் அது கோல் காப்பாளரால் தடுக்கப்பட்டது.

மீண்டும் 57ஆவது நிமிடத்தில் ரினௌன் வீரர்கள் தமக்கிடையிலான பந்துப் பரிமாற்றங்களின் பின்னர் எதிரணியின் கோலுக்கு அண்மையில் பந்தை கொண்டுசெல்ல முயற்சிக்கையில், அவ்வணி வீரர் மீது ஓப் சைட் காண்பிக்கப்பட்டது.

பின்னர் ரினௌன் வீரர் முஜீப் தனக்கு வந்த பந்தை நீண்ட தூரம் கொண்டு சென்று கோணர் திசையில் இருந்து கோல் திசைக்கு உள்ளனுப்ப, அதன்போது தனக்கு கிடைத்த பந்தை பசால் மிக மோசமாக கையாண்டமையினால் அவ்வணிக்கான சிறந்த வாய்ப்பு கைநழுவியது.

மறு முனையில் ரினௌன் தரப்பின் மோசமான பின்கள விளையாட்டை சாதகமாகப் பயன்படுத்திய ஜெரான் பெர்னாண்டோ, அணியின் இரண்டாவது கோலுக்கான முயற்சியைப் பெற்றார். எனினும் அதன்மூலம் கோல் பெறப்படவில்லை.  

ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கையில் 76ஆவது நிமிடத்தில் முஜீப் நீண்ட தூரத்திற்கு வழங்கிய பந்துப் பரிமாற்றத்தைப் பெற்ற ஜொப் மைக்கல் முதல் முறை கோலுக்குள் உதைய, அதனை உதயங்க ரெஜினோல்ட் தடுத்தார். எனினும், மீண்டும் பந்தைப் பெற்ற ஜொப் மைக்கல் ரினௌன் அணிக்கான இரண்டாவது கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்தும், ரினௌன் அணி தமக்கான கோல் வாய்ப்புகளைப் பெற்றாலும், அவற்றின்மூலம் சிறந்த நிறைவைப் பெற்றுக்கொள்ளவில்லை.

84ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லைக்கு மிக அண்மையில் வைத்து சாமில் அஹமடின் கையில் பந்து பட்டமையினால் கடற்படை அணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பொன்று கிடைத்தது. எனினும், அதன்போது அவர்கள் உதைந்த பந்து கம்பங்களுக்கு மேலால் சென்றது.

ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் இரு அணியினரும் மிகவும் அஅபாரமாக விளையாடினர். இதன் காரணமாக இரு அணிகளும் மேற்கொண்ட கோல் முயற்சிகள் எதிர்த்தரப்பினரால் தடுக்கப்பட்டன.

முழு நேரம் : ரினௌன் விளையாட்டுக் கழகம் 2–1 கடற்படை விளையாட்டுக் கழகம்

Thepapare.com இன் ஆட்ட நாயகன்: மொஹமட் ரிப்னாஸ் (ரினௌன் விளையாட்டுக் கழகம்)

கோல் பெற்றவர்கள்

ரினௌன் விளையாட்டுக் கழகம் – மொஹமட் ரிப்னாஸ் 51’, ஜொப் மைக்கல் 76’

கடற்படை விளையாட்டுக் கழகம் – ஜெரான் பெர்னாண்டோ 34’,

மஞ்சள் அட்டை

ரினௌன் விளையாட்டுக் கழகம் – மொஹமட் ரிஸ்கான் 43’, மொஹமட் முஜீப் 71’

கடற்படை விளையாட்டுக் கழகம் – தம்மிக்க ரத்னாயக 51’, சலக சமீர 79’

WATCH MATCH REPLAY