இலங்கை கனிஷ்ட ரக்பி அணியின் தலைவராக நவீன் ஹேனகன்கனம்கே

95

19 வயதிற்கு உட்பட்ட ஆசிய ரக்பி போட்டிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 கட்டங்களாக இலங்கை மற்றும் ஹொங்கொங்கில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை கனிஷ்ட ரக்பி அணியின் தலைவராக தேசிய எழுவர் ரக்பி அணியின் வீரரும், புனித தோமியர் கல்லூரியின் தலைவருமான நவீன் ஹேனகன்கனம்கே நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கனிஷ்ட ரக்பி அணியின் அனுபவமிக்க வீரர்களில் ஒருவரான நவீன், கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய எழுவர் ரக்பி அணியின் தலைவராக கடமையாற்றியதுடன், அத்தொடரில் இலங்கை அணி சம்பியனாகவும் முடிசூடிக்  கொண்டது. எனினும், இவ்வருடம் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்ட ஆசிய எழுவர் ரக்பி போட்டிகளில் கிண்ணப் பிரிவில் நவீன் தலைமையிலான இலங்கை அணி இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இவ்வருடம் நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான எழுவர் ரக்பி போட்டியில் புனித தோமியர் கல்லூரிக்கு சம்பயின் பட்டத்தை வென்று கொடுக்க முக்கிய காரணமாக இருந்த நவீன், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஸ்ரீலங்கா சுப்பர் செவன்ஸ் ரக்பி கிண்ணப் போட்டிகளில் எடிசலாட் பன்தர்ஸ் அணியில் விளையாடியதுடன், தனது தொழில்சார் ரக்பி போட்டிகளை ஆரம்பிக்கும் முகமாக வர்த்தக நிறுவன அணிகளுக்கு இடையிலான எழுவர் ரக்பி போட்டிகளில் எக்செஸ் நிறுவன ரக்பி அணியையும் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த போட்டித் தொடரை முன்னிட்டு 60 வீரர்களைக் கொண்ட முன்னோடிக் குழாம் இலங்கை ரக்பி சம்மேளனத்தினால் தெரிவு செய்யப்பட்டு பயிற்சிப் போட்டிகள் மூலமாக தற்போது அக்குழு 37 வீரர்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 12 வீரர்களைக் கொண்ட இறுதி குழாம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆவது வாரமளவில் அறிவிக்கப்படவுள்ளதாக இலங்கை ரக்பி சம்மேளனம் அறிவித்துள்ளது.

இலங்கை கனிஷ்ட ரக்பி அணியின் பயிற்றுவிப்பாளர்களாக பெரேரா மற்றும் கொஸ்தா

இலங்கை ரக்பி சம்மேளனமானது, 19 வயதிற்கு..

ஆசிய ரக்பி கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் 2 கட்டங்களாக நடத்தப்படும் இப்போட்டித் தொடர், ஹொங்கொங், சைனீஸ் தாய்பே மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெறவிருந்ததுடன், இம்மூன்று அணிகளும் உலகக்கிண்ண கனிஷ்ட ரக்பி போட்டிகளின் 2ஆவது பிரிவின் தகுதிச் சுற்றிலும் விளையாடவிருந்தன. எனினும், இறுதி நேரத்தில் சைனீஸ் தாய்பே போட்டிகளிலிருந்து வாபஸ் பெற்றதையடுத்து இலங்கை, ஹொங்கொங் அணிகள் மாத்திரமே இத்தொடரில் விளையாடுவதற்கு தகுதியைப் பெற்றுக்கொண்டன. இதனையடுத்து இலங்கை மற்றும் ஹொங்கொங் அணிகளுக்கு இடையிலான இரண்டு கட்டப் போட்டிகளையும் ஆரம்பத்தில் ஹொங்கொங்கில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. எனினும், ஆசிய ரக்பி கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அறிவித்தலுக்கு அமைய இத்தொடரின் முதல் கட்டத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி இலங்கையிலும், தொடர்ந்து இரண்டாவது போட்டிகளை டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி ஹொங்கொங்கிலும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த போட்டித் தொடரில் சம்பியன் பட்டத்தை வெல்லும் அணி எதிர்வரும் உலக கனிஷ்ட ரக்பி போட்டிகளின் 2ஆவது பிரிவின் தகுதிச் சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றுக்கொள்ளும்.

எனவே, தற்போது உபாதையிலிருந்து மீண்டு அணிக்குள் திரும்பியுள்ள நவீனின் தலைமைத்துவத்தில் இவ்வருடத்தில் நடைபெறவுள்ள இறுதி சர்வதேச ரக்பி போட்டித் தொடரிலாவது இலங்கை அணி, சம்பியன் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.