தேசிய கரப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர் சேவையிலிருந்து நீக்கம்

129

கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் கடந்த மாதம் நிறைவுக்கு வந்த அங்குரார்ப்பண ஆசிய சவால் கிண்ண கரப்பந்தாட்டத் தொடரில் சவூதி அரேபியாவுடனான லீக் போட்டியில் இலங்கை அணியை தோல்வியடையச் செய்யும் நோக்கில் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை கரப்பந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரான செர்பியா நாட்டைச் சேர்ந்த டெஜான் டுலிசிவிக்காவின் பதவிக் காலத்தை இந்த வருடத்துடன் நிறைவு செய்வதற்கு இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அரையிறுதியில் ஈராக்கிடம் போராடி தோற்றது இலங்கை

ஆசிய சவால் கிண்ணக் கரப்பந்தாட்டத் தொடரில்..

டெஜான் டுலிசிவிக், இரண்டு வருட காலப்பகுதிக்கு தேசிய கரப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக செயற்படுவதற்கான புரிந்துணர்வுடன், ஒரு வருடத்தின் பிறகு சேவையை நீடிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன்படி, அவரது ஓராண்டு பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது.

எனவே, இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் இந்த அறிவிப்பின்படி, அவர் இந்த வருட இறுதியுடன் இலங்கை தேசிய கரப்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்படுகின்றார். எனினும், இடைப்பட்ட காலத்தில் இலங்கை அணி எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் பங்கு பற்றாது.

சவூதி அரேபியாவுடனான குறித்த போட்டியில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட ஆட்ட நிர்ணயம் தொடர்பில் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் இறுதி முடிவு குறித்து ஊடகங்களை தெளிவுபடுத்தும் விசேட செய்தியாளர் சந்திப்பு நேற்று (16) கொழும்பில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சரும், இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவருமான ரஞ்சித் சியபலாபிடிய இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ஆசிய சவால் கிண்ண கரப்பந்தாட்டத் தொடரில் இலங்கைக்கு மூன்றாம் இடம்

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில்..

“ஆசிய சவால் கிண்ண கரப்பந்தாட்ட தொடரில் சவூதி அரேபியாவுடனான போட்டியில் முன்னணி வீரர்களை களமிறக்காமல் அனுபவமில்லாத வீரர்களை விளையாட வைத்தமை, உதவி பயிற்றுவிப்பாளர் மற்றும் முகாமையாளரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளாமல் தன்னிச்சையாக செயற்பட்டமை உள்ளிட்ட காரணங்களால் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் வரய்ப்பை இலங்கை அணிக்கு இழக்க நேரிட்டதாக குறித்த அறிக்கை மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் கருத்திற்கொண்டு அவருடைய சேவையை இந்த வருடத்துடன் முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளோம்என தெரிவித்தார்.

இதன்படி, அடுத்த வருடம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவை இலக்காகக் கொண்டு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வெளிநாட்டு பயிற்சியாளர் ஒருவரின் சேவையைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இதுவொரு ஆட்டநிர்ணயமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், ”பல்வேறு தகவல்கள் எமக்கு கிடைக்கப் பெற்றன. குறித்த போட்டிக்கு முன்தினம் இரவு சவூதி அரேபிய பயிற்றுவிப்பாளரை எமது பயிற்சியாளர் சந்தித்துள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளன. எனினும், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளாக குறித்த குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகளுக்குத் தான் நாம் அதிகம் முன்னுரிமை கொடுப்போம். எனவே, எதிர்வரும் காலங்களில் பயிற்சியாளர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை நாம் தீர்மானித்துவிட்டோம்என அவர் தெரிவித்தார்.

அங்குரார்ப்பண ஆசிய சவால் கிண்ண கரப்பந்தாட்ட தொடரின் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் பங்களாதேஷ் அணியை 3-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்திய இலங்கை அணி மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.

எனினும் அதற்கு முன்னர், சவூதி அரேபியாவுடன் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 1-3 என்ற நேர் கணக்கில் தோல்வியைத் தழுவியது. குறித்த போட்டியில் இலங்கை அணியின் தோல்விக்கு பயிற்சியாளரின் தனிப்பட்ட முடிவுகள் முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த தோல்வி தொடர்பில் ஆராயும் நோக்கில் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தினால் தேசிய கடற்கரை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான பிரியன்த ஜயகொடி தலைமையில் ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இதன்படி, சவூதி அரேபியாவுடனான லீக் ஆட்டத்தில் வீரர்களை உரிய முறையில் கையாண்டு, பொருத்தமான இடங்களில் அவர்களை விளையாட அனுமதிக்காமை, முன்னணி வீரர்களுக்கு உபாதை ஏற்படும் என தெரிவித்து போட்டியில் களமிறக்காமல் அனுபவமில்லாத பின்வரிசை வீரர்களை விளையாட வைத்தமை உள்ளிட்ட காரணங்களால் இலங்கை அணிக்கு தோல்வியை சந்திக்க நேரிட்டதாகவும், இதனால் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் வாய்ப்பு இலங்கை அணிக்கு கிடைக்காமல் போனதாகவும் குறித்த அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் இலங்கை கரப்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் குறித்த தோல்விக்கான எந்தவொரு சாதாரண பதிலையும் அவர் முன்வைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளர் மற்றும் முகாமையாளரின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளாமல் அவர் தன்னிச்சையான முறையில் இவ்வாறான அதிரடி முடிவுகளை எடுத்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இவையனைத்தையும் கருத்திற்கொண்டு, இலங்கை கரப்பந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகச் செயற்பட்ட செர்பிய நாட்டைச் சேர்ந்த டெஜான் டுலிசிவிக்கை பதவியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் இலங்கை தேசிய கரப்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளராகச் செயற்பட்டு வந்த டெஜான் டுலிசிவிக்கின் பயிற்றுவிப்பின் கீழ் இலங்கை அணி கடந்த ஆகஸ்ட் மாதம், மியன்மாரில் நடைபெற்ற ஆசிய கழக கரப்பந்தாட்டத் தொடரில் பங்கேற்றது. 16 நாடுகள் பங்கேற்ற இப்போட்டித் தொடரில் இலங்கை அணி 7ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

அதனைத்தொடர்ந்து இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை அணி, 13ஆவது இடத்தைப் பெற்று ஆறுதல் அடைந்தது.

எனவே, இலங்கை கரப்பந்தாட்ட அணியின் இந்த குறுகிய கால முன்னேற்றத்துக்கு டெஜான் டுலிசிவிக்கின் பயிற்றுவிப்பு முக்கிய காரணம் என்றே சொல்லாம். போட்டியின் போது எப்போதும் ஆக்ரோஷமாக இருந்து வீரர்களை சரியான முறையில் வழிநடத்தி, வெற்றிக்காக பல உக்திகளை கையாண்டு அதில் பல பயன்களை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்த அவரை, சவூதி அரேபியாவுடனான போட்டியில் சந்திக்க நேரிட்ட தோல்வியை மாத்திரம் கருத்திற்கொண்டு பதவியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தமை எந்தளவு தூரத்துக்கு சாதாரணமானது என்பது கேள்விக்குரியாகவே உள்ளது.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<