தமிழர்கள் மூலம் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட விளையாட்டுக்களில் ஒன்றாக காணப்படும் கபடி இன்று உலகின் பல்வேறு நாடுகளில் விரும்பி விளையாடப்படும் ஒரு விளையாட்டாக மாறியிருக்கின்றது.

இவ் விளையாட்டில், சிறப்பாகச் செயற்பட்டு இலங்கை நாட்டிற்கும், மட்டக்களப்பிற்கும் பெருமைகள் பல சேர்த்திருக்கும் மீன்பாடும் தேனாட்டின் சாதனை நாயகன்  கணேசராஜா சினோதரனுடன் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையதளமான ThePapare.com ஒரு நேர்காணலை மேற்கொண்டிருந்தது.

கட்டார் தேசிய கிரிக்கெட் அணியில் 12 வருடங்கள் விளையாடிய இலங்கையர்

அந்த நேர்காணலில் இருந்து ஒரு தொகுப்பு எமது இணையதள வாசகர்களுக்காக….

கே: உங்களைப் பற்றிய ஒரு அறிமுகத்தை எமக்குத் தாருங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர்ப்புர பிரதேசமான புளியந்தீவில் 1989ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி பிறந்த நான், ஐந்து அங்கத்தவர்களை கொண்ட ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் கடைசிப் பிள்ளை. எனக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.

சிறு வயது முதலே எனக்கு விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகம். தனால், நான் எனது கற்றல் நடவடிக்கையினை தொடர்ந்திருந்த மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் ஆரம்பம் முதலே கூடைப்பந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுக்களில் ஈடுபட்டு எனது திறமையினை வளர்த்துக்கொண்டேன்.  

கே: வேறு விளையாட்டுக்களில் ஆர்வம் காட்டியிருந்த நீங்கள் எப்படி கபடியில் ஈடுபட ஆரம்பித்தீர்?

கடந்த 2000ஆம் ஆண்டளவில் எமது பிரதேசத்தில் பாடசாலை மட்ட ரீதியாக கபடிப் போட்டிகள் விளையாட ஆரம்பிக்கப்பட்டிருந்த. க்காலப் பகுதியில் அமரத்துவம் அடைந்த கிஷோக்குமார் அவர்களினால் மாணவர்களுக்கு கபடிப் பயிற்சிகள் வழங்கப்பட்டமையினால் பலர் போட்டிகளில் பங்குபற்றினர். மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்வ்வகையான கபடிப் போட்டிகளை பார்ப்பதற்கு அடிக்கடி நான் செல்வேன்.  

இப்படியானதொரு நிலையிலேயே எனது நண்பர்கள் என்னையும் கபடி விளையாட அழைத்திருந்தனர். அப்போது, என்னை அவதானித்த அமரர். கிஷோக்குமார் அவர்கள் என்னைப்பற்றி விசாரித்து, எனது திறமைகளையும் அறிந்து என்னை கபடி பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுமாறு அறிவுருத்தியிருந்தார். அவரின் ஊக்கத்தோடு தொடர்ந்தும் பயிற்சிகளில் பங்கேற்ற நான் பின்னர் கபடியில் முழுமையாக கால் பதிக்க தொடங்கியிருந்தேன்.

கபடி பயிற்சிகளில் ஈடுபடும் சினோதரன்
கபடி பயிற்சிகளில் ஈடுபடும் சினோதரன்

கே: கபடியில் உங்களுக்கு திருப்பு முனையாக அமைந்த சந்தர்ப்பம் எது?  

கபடி விளையாட்டில் ஏற்பட்ட விருப்பம் காரணமாக தொடர்ந்து கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு பாடசாலை மட்டத்தில் இடம்பெற்ற போட்டிகளில் அதீத திறமைகளை வெளிக்காட்டியிருந்தேன்.

இப்படியானதொரு சந்தர்ப்பத்தில், மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்ற கபடிப் போட்டியில் பங்குபெற இலங்கையின் முப்படைகளும் வந்திருந்தன. அன்றைய தினத்தில் நடைபெற்றிருந்த கபடிப் போட்டியே எனது வாழ்க்கையை மாற்றியமைத்தது. என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்களில் அதுவும் ஒன்று. கடற்படை வீரர்களுக்கு எதிராக விளையாட எமக்கு ஒரு சந்தர்ப்பம் கிட்டியது. அப்போட்டியில் எனது முழுப்பலத்தினையும் பிரயோகித்து சவால் மிக்க கடற்படை அணியினரை நானும் எனது நண்பர்களும் கொண்ட அணி மூலம் அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தினோம்.  

இப்போட்டியின் மூலம் எனது தனிப்பட்ட திறமையினை கண்டு கொண்ட இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் என்னை கடற்படை அணியில் இணையுமாறு கோரியது. எனக்கு ஒரு புறம் மிக மகிழ்ச்சியும் மறுபுறம் சிறு பயமும் இருந்தது. எனவே, என்ன முடிவு எடுப்பது என்பதில் ஒரு தீர்மானத்திற்கு வர முடியாதவனாக காணப்பட்டிருந்தேன்.

கே: கடற்படையின் அழைப்புக்கு உங்கள் பதில் எவ்வாறு இருந்தது?

அது 2010 ஆம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதி. இலங்கை கடற்படையின் அழைப்பு குறித்து எனது குடும்பத்தாரிடம் தெரிவித்திருந்தேன். நாட்டில் அப்போது தான் யுத்தம் முடிவுற்றிருந்தது. அதனால், ஒரு வித பயத்துடன் இருந்த எனது தாயார் நான் அதில் இணைய மறுப்புத் தெரிவித்திருந்தார்.

ஆனால், எனது தந்தை ”உனக்கு எல்லாம் வல்ல இறைவன் ஏற்படுத்தித் தந்த வாய்ப்பு இது. இந்த வாய்ப்பு மூலம் உனது வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும்” என ஆசிர்வாதம் செய்து கடற்படையில் இணைய அனுமதியை தந்தார். அதையடுத்து, 2010ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கடற்படை விளையாட்டுப் பிரிவில் இணைந்து கொண்டேன்.

தேசிய கூடைப்பந்து அணியில் யாழ் மாணவி பாபு பாணு

 

கே: கடற்படை விளையாட்டுக் கழகத்தில் இணைந்த அனுபவம் எவ்வாறு அமைந்திருந்தது?

கடற்படை அணியில் இணைந்த காலப்பகுதியில் இருந்து பல பயிற்சிகளை பெற்றதுடன் பலவிதமான நுணுக்கங்களினையும் கற்றுக்கொண்டேன். இவ்வாறாக அங்கு இணைந்து சில நாட்களில், அதாவது 2010ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் எனது தந்தை மாரடைப்பினால் மரணமடைந்தார். அச் சம்பவம் என்னையும் எனது குடும்பத்தினையும் மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. அதோடு, நானும் மிகுந்த மன உளைச்சல்களுக்கு ஆளாகியிருந்தேன். அதன் விளைவாக, கடற்படையிலிருந்து விலகவும் முடிவு செய்திருந்தேன்.

இவ்வாறு நான் ஒரு முடிவினை மேற்கொண்டிருந்த தருணத்தில், எனது தாயார், சகோதரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் எனக்கு அளித்திருந்த ஊக்கம் காரணமாகவும், தந்தையாரின் விருப்பப்படி கபடியில் ஒரு உயர்ந்த இடத்தினை அடைய வேண்டும் என்பதாலும் மீண்டும் கடற்படை அணியில் எனது ஆட்டத்தினை தொடர்ந்தேன்.  

கே: நீங்கள் முகம்கொடுத்த இழப்பிற்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள். தொடர்ந்து தேசிய அணிக்கான பிரவேசம் எவ்வாறு இருந்தது?

தொடர்ந்தும் திறமைகளை வெளிப்படுத்தி பயிற்சிகள் மேற்கொண்டிருந்த எனக்கு, கடற்படை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் சிறந்த அறிவுரைகளை இன, மத, மொழி என எந்த பாகுபாடும் பாராது வழங்கியது மட்டுமன்றி எனக்கு பக்கபலமாகவும் இருந்தார்.  

இவ்வாறாக பயிற்சிகளைத் தொடர்ந்த நிலையிலேயே, 2011 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடம்பெற்ற தெற்காசிய கபடிப் போட்டித் தொடரில் முதல் முறையாக இலங்கை அணியினை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியிருந்தது.

அத்தொடரில் இலங்கை பங்குபற்றியிருந்த முதல் போட்டியிலேயே எனக்கு வாய்ப்பு கிடைத்த காரணத்தினால் பதட்டம் அடையாது முந்தைய போட்டி அனுபவங்களினையும், இறைவன் மீதிருந்த  நம்பிக்கையுடனும் களமிறங்கி எனது திறமையினை வெளிக்காட்டியிருந்தேன். அத் தொடரில் இலங்கை அணி மூன்றாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது.  

தனது பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களின் ஒரு பகுதியுடன் சினோதரன்
தனது பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களின் ஒரு பகுதியுடன் சினோதரன்

 

கே: நீங்களும் உங்கள் அணியும் தொடர்ச்சியாக சர்வதேச மட்டத்தில் பெற்றுக்கொண்ட அடைவு மட்டங்கள் என்ன?

அதனைத் தொடர்ந்து, 2012 ஆம் ஆண்டில் சீனாவில் மூன்றாவது தடவையாக இடம்பெற்றிருந்த ஆசிய நாடுகளிற்கு இடையிலான கடற்கரை கபடி சுற்றுத் தொடரில் மூன்றாம் இடத்தினைப் பெற்றோம். பின்னர், 2014 ஆம் ஆண்டு தாய்லாந்தில் நான்காவது தடவையாக நடைபெற்றிருந்த கடற்கரை கபடி சுற்றுத் தொடரிலும் மூன்றாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டோம்.

இன்னும் கடந்த வருடத்தில், இந்தியாவில் 12 ஆவது தடவையாக நடைபெற்றிருந்த தெற்காசிய நாடுகளிற்கு இடையிலான கடற்கரை கபடி சுற்றுத் தொடரிலும் மூன்றாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டோம்.  

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் சீருடையை அணிவதே சாருஜனின் இலக்கு

கே: இலங்கை கடற்கரை கபடி அணியின் உப தலைவராகும் சந்தர்ப்பம் கிட்டியது பற்றி சில வார்த்தைகள் கூறாலாமா?

தொடர்ந்தும் சிறப்பான ஆட்டத்தினை கபடி போட்டிகளில் காட்டி வந்திருந்த எனக்கு, இவ்வருடம் மொரிசியஸ் தீவுகளில் இடம்பெற்ற சர்வதேச கடற்கரை கபடி சுற்றுத் தொடரில் இலங்கை அணியின் உப தலைவராக செயற்படும் வாய்ப்பு கிட்டியிருந்தது. இத்தொடரில் அதி சிறப்பாக செயற்பட்டிருந்த நாம் சம்பியன்களாக மாறியிருந்தோம்.

கே: நீங்கள் இந்தியாவில் நடைபெறும் கபடித் தொடர் ஒன்றில் பங்குபற்றுவதாகவும் கேள்விப்பட்டிருந்தோம். அது  பற்றி கூற முடியுமா?

ஆம், இந்தியாவில் முதற்தடவையாக 2014ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்த கபடி பிரிமியர் லீக் தொடரில், இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு தமிழ் வீரராக நான் காணப்படுகின்றேன். அத்தொடரில், தற்போது பெங்களூர் புல்ஸ் அணிக்காக ஆடி வருகின்றேன்.

பெங்களூர் புல்ஸ் அணியின் சீருடையுடன் சினோதரன்
பெங்களூர் புல்ஸ் அணியின் சீருடையுடன் சினோதரன்

கே: பல சாதனைகளை செய்திருக்கும் உங்களுக்கு எமது வாழ்த்துக்கள், இறுதியாக நீங்கள் எம்முடன் பகிர விரும்பும் கருத்து என்ன?  

இவ்வாறாக சர்வதேச ரீதியில் பல கபடி போட்டித் தொடர்களில் கலந்து கொண்டு சிறந்த விளையாட்டு வீரரிற்கான விருது (2014 ஆம் ஆண்டு), பல பதக்கங்கள், சான்றிதழ்கள் என்பவற்றைப் பெற்று நாட்டிற்கும், எனது மட்டக்களப்பு மண்ணிற்கும், எனது குடும்பத்திற்கும் பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளேன் என்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

எனது அடைவு மட்டங்களை காண எனது தந்தையார் உயிருடன் இல்லாமல் இருப்பதே ஒரு வருத்தம். எனவே, நான் பெற்ற அனைத்து பெருமைகளையும் புகழினையும் எனது தந்தைக்கே சமர்ப்பணம் செய்கின்றேன். அதேபோன்று, எனக்கு எப்போதும் ஊக்கம் அளித்து உறுதுணையாக காணப்பட்ட எனது நண்பர்கள், குடும்பத்தினர், பயிற்சியாளர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு, எல்லாவற்றிக்கும் மேலாக இறைவனுக்கும் நன்றிகளையும், வணக்கத்தினையும் சமர்ப்பிக்கின்றேன். இன்னும், என்னை விட சிறந்த வீரர்கள் இம்மண்ணில் உருவாகவும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறே, கிழக்கு மண்ணிற்கு தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பெருமையை செர்த்துக் கொடுத்த தேசிய கபடி அணி வீரரும், தேசிய கடற்கரை கபடி அணியின் உப தலைவருமான கணேசராஜா சினோதரன் எம்மோடு தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

நாமும், நமக்கென நேரம் ஒன்றினை ஒதுக்கித் தந்து எம்முடன் கலந்துரையாடிய சினோதரனுக்கு நன்றிகளையும், அவர் வருங்காலத்தில் இன்னும் பல சாதனைகளை புரிய வேண்டும் என மனமார்ந்த வாழ்த்துக்களையும் ThePapare.com சார்பாக தெரிவித்துக்கொள்கின்றோம்.  

மேலும் பல செய்திகளைப் படிக்க