இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுக்க முரளி சொல்கின்ற ஆலோசனைகள் பலனளிக்குமா?

1987
Muttiah Muralitharan

சுமார் 140 வருட கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை தன்னகத்தே கொண்டுள்ளவரும், இலங்கையின் நாமத்தை சர்வதேசத்துக்கு எடுத்துச் சென்றவருமாக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், சுழற்பந்து ஜாம்பவானுமான முத்தையா முரளிதரன் உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தற்பொழுது கிரிக்கெட் ஆலோசகர் மற்றும் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வரும் முரளிதரனை லங்காதீப சிங்கள வாரப் பத்திரிகை மேற்கொண்ட விசேட நேர்காணலின் தமிழ் ஆக்கத்தை இங்கு எமது நேயர்களுக்காக பகிர்ந்துகொள்கின்றோம்.

கேள்விதற்போதைய நாட்களில் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்?

பதில்கிரிக்கெட் விளையாடிய காலங்களைப் போன்று இல்லாமல் தற்போது அதிகளவான நேரத்தை குடும்பத்தாருடன் கழித்து வருகின்றேன். அத்துடன் எனது வியாபார வேலைகளிலும் கவனம் செலுத்தி வருவதுடன், பயிற்சியாளராகவும் பங்களிப்பினை வழங்கி வருகின்றேன்.

தோல்விகளால் தலைமைப் பதவியிலிருந்து விலகமாட்டேன் – தரங்க

2017 ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கை ஒருநாள் கிரிக்கெட்..

கேள்வி –  நீங்கள் எந்த அணிக்காக பயிற்சியாளராக கடமையாற்றிக் கொண்டிருக்கின்றீர்?

பதில்இந்தியாவின் பெங்காலி கிரிக்கெட் சங்கத்தின் சுழற்பந்துவீச்சு பயிற்சி குழாமின் பிரதான பயிற்சியாளராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றேன்.

கேள்விஇலங்கை கிரிக்கெட்டுக்கு என்ன நடந்துள்ளது?

பதில்நீங்கள் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்க வேண்டாம். ஏனென்றால் நான் தற்போது வெளிநாட்டில் உள்ளேன். எனவே இந்நாட்டின் கிரிக்கெட் நிர்வாகத்தைப் பொறுப்பேற்று நடாத்துகின்ற அதிகாரிகளிடம் தான் இந்தக் கேள்வியை கேட்க வேண்டும்.

கேள்விஇலங்கையின் நாமத்தை சர்வதேசத்துக்கு எடுத்துச் சென்ற வீரர்களில் முக்கிய ஒருவராக உள்ளமையினால், வெளியில் உள்ள முரளிக்கு கிரிக்கெட் நிர்வாகத்துக்கு வருவதற்கு அழைப்புகள் கிடைத்ததா?

பதில்நான் அதைப் பற்றி பெரிதும் சிந்திப்பதில்லை. தற்போது அதைச் செய்ய குழுவொன்றும் உள்ளது. நிர்வாகம் ஒன்று காணப்படுகின்றது. எனவே 2 அல்லது 3 வருடங்களுக்கு ஒரு தடவை தேர்தல் மூலம் அவர்கள் தெரிவு செய்யப்படுகின்றார்கள்.

கேள்விஅண்மைக்காலமாக பின்னடைவை சந்தித்து வருகின்ற இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுக்க முரளியும் இணைந்து கொள்ள வேண்டும் என மக்கள் தெரிவித்து வருகின்றார்கள். இதுபற்றி உங்களது நிலைப்பாடு என்ன?

பதில்அவ்வாறு சொல்வது மக்கள் தான். ஆனால் நான் அவ்வாறு சிந்திக்கவில்லை. எனது பங்களிப்பு தேவைப்பட்டால் ஆரம்பத்திலேயே எனக்கு அழைப்பு விடுத்திருக்க வேண்டும். எனினும், தற்போது குழுவொன்று நியமிக்கப்பட்டு குறித்த நிர்வாகச் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. எனவே கிரிக்கெட்டில் ஏதாவது குறைபாடுகள் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்வது அவர்களது பொறுப்பாகும்.

கேள்விஇலங்கை கிரிக்கெட்டின் சுழற்பந்துவீச்சு ஆலோசகராக கடமையாற்ற வேண்டும் என மக்கள் உங்களிடம் வேண்டுகோள் விடுத்தால்…?

பதில்மக்களின் தேவைகளுக்கு ஏற்ப அவை ஒருபோதும் இடம்பெறமாட்டாது. கிரிக்கெட் கழகங்களின் ஊடாகத்தான் இப்பதவிகளுக்கு அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். மறுபுறத்தில் நாங்கள் மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றுக்கொண்ட காரணத்தால் இப்பதவிகளிலும் கடமையாற்ற வேண்டும் என்பது நியதியும் கிடையாது. எனவே இலங்கை கிரிக்கெட்டில் தற்போது உள்ள தேர்தலின் மூலம் ஒருபோதும் எம்மைப் போன்றவர்கள் பதவிகளுக்கு தெரிவு செய்யப்படுவதென்பது பகல் கனவாகும்.

முரளிதரனுக்கு ஐ.சி.சி. இன் அதி உயரிய கௌரவ விருது

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில்….

கேள்விகடந்த காலங்களில் நடைபெற்ற போட்டித் தொடர்களில் இலங்கை அணி தொடர்ச்சியாக பல தோல்விகளை சந்தித்து வந்தன. உண்மையில் இவ்வாறான மோசமான நிலைக்கு இலங்கை அணி தள்ளப்பட்டமைக்கான காரணம் என்ன?

பதில் –  நீங்கள் இந்தக் கேள்வியை எம்மிடம் கேட்காமல் இந்நாட்டின் கிரிக்கெட் நிர்வாகத்தைப் பொறுப்பேற்று நடாத்துகின்ற இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடமும், அங்கு பணியாற்றுகின்ற அதிகாரிகளிடமும் தான் இந்தக் கேள்வியை கேட்க வேண்டும். எனவே வெளியில் இருந்து என்னால் எதுவும் கூறமுடியாது. அவ்வாறு கருத்துக்களை வெளியடுவது அநாகரீகமான செயலாகும்.

கேள்விஎமது கிரிக்கெட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டுமாயின், அதை கனவான்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும், அவ்வாறு கனவான்களுக்கு இடமளிப்பதற்கான சூழலும் இந்நாட்டில் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதுபற்றி உங்களுடைய கருத்து என்ன?

பதில்முதலில் கனவான்கள் என்றால் யார் என்பது பற்றி சொல்லுங்கள். சரி, அதை நாம் கனவான்கள் என பேசாமல், பிரச்சினையை மாத்திரம் பேசினாலும் எனக்கு அதுபற்றி பேசுவதற்கு அதிகாரம் கிடையாது. ஆனால் அது அவ்வாறு நடக்க வேண்டுமாயின் நீங்கள் முதலில் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் இந்தக் கேள்வியை கேட்டால் நன்றாக இருக்கும். வெளியில் உள்ள நபர்களை பயிற்சியாளர் பதவிகளுக்கு நியமிக்காமல், நாட்டுக்காக விளையாடிய அனுபவமிக்க வீரர்களிடம் இருந்து சேவையைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.

கேள்விகிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்ற ஒரு சில முன்னாள் வீரர்கள் இலங்கை கிரிக்கெட்டானது திட்டங்கள் வகுக்கப்படாமல் செயற்படுகின்ற நிறுவனம் என தெரிவிக்கின்றனர். இவ்வாறு தொடர்ந்து சென்றால் இந்நாட்டின் கிரிக்கெட் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?

பதில்அண்மையில் நிறைவடைந்த பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரை நாம் கைப்பற்றினோம். அதேபோல ஒரு நாள் தொடரை இழந்தோம். ஆனால் இலங்கை அணி டெஸ்ட் தொடரை வெல்லுமா என எவரும் நினைக்கவில்லை. ஆனால் நாம் வென்றோம். கிரிக்கெட் என்பது விளையாட்டு. அதில் எப்போதும் வெற்றி பெறவும் முடியாது என்பது போல தோல்வியையும் தழுவ முடியாது. அதுதான் விளையாட்டு.

அதை எப்போதும் குறித்த ஒரு நபரின் மேல் சுமத்தவும் கூடாது. அதேபோல ஒருவரால் மாத்திரம் அவ்வாறு செய்யவும் முடியாது. ஆனால் கடந்த 20 வருடங்களாக ஒரு விடயத்தை மாத்திரம் நான் அவதானித்து வருகின்றேன். இந்நாட்டின் கிரிக்கெட் ஒன்றோ இடைக்கால நிர்வாகக் குழுவினால் முன்னெடுக்கப்படும் அல்லது குறிப்பிட்ட 2 நபர்களின் தலைமையிலான குழுவினால் முன்னெடுத்துச் செல்லப்படும். எனவே இந்நாட்டின் கிரிக்கெட்டை வளர்ச்சியடையச் செய்வதற்கு இதை தவிர வேறு வழி இல்லையா? அல்லது வேறு நபர்கள் இல்லையா?

துயரத்தின் உச்சத்தை அனுபவிக்கும் இலங்கை கிரிக்கெட் அணி

பாகிஸ்தானுடனான ஒரு நாள் தொடரை முழுமையாக….

கேள்விஅப்படியானால் உங்களைப் போன்ற உலகை வென்ற வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கான சூழல் இந்நாட்டில் இல்லையா?

பதில்இந்நாட்டு மக்கள் வீரர்களை மிகவும் நேசிப்பது உண்மை. உதாரணத்துக்கு பாராளுமன்ற தேர்தலில் வீரர்கள் போட்டியிட்டால் நிச்சயம் அமோக வெற்றியைப் பெற்றுக்கொள்வார்கள். ஆனால் இந்நாட்டில் உள்ள 160 கிரிக்கெட் சங்கங்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக நாம் தேர்தலில் போட்டியிட்டால் 3 வாக்குகளையாவது பெற்றுக்கொள்வதும் சந்தேகம்தான்.

அதேபோல கிரிக்கெட் விளையாட்டுக்கு உதவி செய்ய கிரிக்கெட் சபைக்கு செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. அதேபோல மக்களுக்கு சேவை செய்ய அமைச்சர்களாக இருக்க வேண்டிய அவசியமும் கிடையாது. எனவே தம்மால் முடிந்த எந்தவொரு உதவியையும் செய்ய முடியும்.

தற்போது நாங்கள் FOUNDATION OF GOODNESS என்ற அமைப்பொன்றை நடாத்தி வருகின்றோம். கிரிக்கெட் விளையாட்டுக்கு மாத்திரம் உதவிகளை வரையறுக்காமல் அனைத்துவித சமூக சேவைகளிலும் இந்த அமைப்பு முன்நின்று செயற்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக எந்தவொரு வசதிகளற்ற, கஷ்டப் பிரதேசங்களில் உள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகின்றோம்.

எனவே, மக்களுக்கு செய்கின்ற உதவியைப் போல கிரிக்கெட்டுக்கும் எம்மால் உதவ முடியும். அதைவிடுத்து கிரிக்கெட்டுக்கு உதவி செய்யும் நோக்கில் நிர்வாகத்துக்கு வரவேண்டிய அவசியம் ஒருபோதும் கிடையாது. உதவி செய்யும் மனப்பாங்கு கொண்ட மனிதன் எங்கிருந்தாலும் உதவி செய்வான் என்பது எனது அபிப்பிராயமாகும்.

கேள்விமுரளி மிகவும் பெருமை மிக்கவர் என பெரும்பாலானோர் தெரிவிக்கின்றனர். உண்மையில் நீங்கள் பெருமைமிக்கவரா?

பதில்நான் அவ்வாறு நினைக்கவில்லை. கறுப்புவெள்ளை, நல்லதுகெட்டது என்பது போல உலகின் எந்தவொரு விடயத்துக்கும் இரு முகங்கள் உள்ளன. எனவே ஒரு சாரார் என்னை நல்லவன் என்றும், மற்றுமொரு சாரார் கெட்டவன் என்றும் சொல்வர். இது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட அபிப்பிராயமாகும். அனைவரும் என்னை விரும்ப வேண்டும் என எந்தவொரு நியதியும் கிடையாது.

இலங்கை அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் குழாம் அறிவிப்பு

இதனடிப்படையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட்…

கேள்விஏன் முரளிக்கு இதுவரை உங்களைப் போன்ற வீரரொருவரை உருவாக்க முடியாமல் போனது?

பதில்என்னைப் போன்ற வீரரொருவர் மறுபடியும் உருவாக முடியாது. ஆனால் என்னை விட நன்றாகப் பந்துவீசுகின்ற வீரரொருவர் உருவாகலாம். அன்றைய காலங்களில் என்னோடு அணியில் ஒன்றாகப் பந்துவீசிய ரங்கன ஹேரத், இன்று உலகின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்வார் என கனவிலும் கூட எவரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் இன்று அவர் முன்னிலை பந்துவீச்சாளராக உள்ளார். எனவே தற்போது அணியில் உள்ள இளம் வீரர்களும் அனுபவங்களைப் பெற்றுக்கொண்டு கிரிக்கெட் உலகில் சாதனை படைப்பார்கள்.

கேள்விஉங்களுடைய மகனும் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடுவாரா?

புதில்அவர் கிரிக்கெட்டை மிகவும் விரும்புகின்றார். தற்போது அவருக்கு 11 வயது. அப்பா நன்றாக கிரிக்கெட் விளையாடியுள்ளார் என்பதற்காக மகனும் அவ்வாறு விளையாட வேண்டும் என கூறமுடியாது. அது அவருடைய திறமை மற்றும் விருப்பத்திற்கு அமைய எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும்.

கேள்விஇலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்கிரிக்கெட் என்பது விளையாட்டு. விளையாட்டில் வெற்றி தோல்வி என்பது சகஜம். என்ன நடந்தாலும் இலங்கை அணிக்கு உங்களுடைய ஆதரவை தொடர்ந்து கொடுத்து வாருங்கள். தோல்வி அடையும் சந்தர்ப்பங்களில் உங்களால் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கும். ஆனால் பொறுமையை கடைபிடியுங்கள்.

கடந்த 2 வருடங்களாக நாங்கள் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வந்தமை உண்மைதான். ஆனால் எப்போதும் அவ்வாறு நடக்காது. எங்களிடம் திறமையான வீரர்கள் உள்ளனர். அவர்களை சிறந்த முறையில் வழிநடாத்த வேண்டும். 1991 முதல் 2014 வரை இலங்கை அணியில் சிறந்த வீரர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் சடுதியாக அணியை விட்டு வெளியேறினர். அதன்பிறகு புதிய வீரர்கள் அணிக்குள் வந்தார்கள். அவர்களை விட திறமையான வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம்.

இலங்கை அணி தோல்வியடையும் போது நானும் மிகவும் கவலைப்பட்டேன். எவ்வளவுதான் திறமையான வீரர்கள் இருந்தாலும் எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்காது. ஆனால் எமது நாட்டில் திறமையான வீரர்களைப் போன்று திறமையான பயிற்சியாளர்களும் உள்ளனர் என்பதை மறந்துவிட வேண்டாம். எனவே, இவற்றையெல்லாம் ஒப்பிட்டுப் பார்ப்பது சிறந்த தீர்மானமொன்றை மேற்கொள்வது கிரிக்கெட்டை நிர்வகிக்கின்ற அதிகாரிகளின் பொறுப்பாகும்.

நன்றிலங்காதீப வார இறுதி பத்திரிகை