எனது தந்தையின் கனவு நனவாகியிருக்கின்றது – மொஹமட் முஸ்தாக்

2407

ஒரு விளையாட்டில் வீரர் ஒருவர் தனது தாய்நாட்டை பிரதிநிதித்துவம் செய்வது அவ்வளவு சாதாரண விடயம் அல்ல. அதற்கு அவர் கடுமையான பயிற்சிகளுடன் தொடர்ந்தும் முயற்சி செய்ய வேண்டும். அப்படியாக விளையாட்டுக்கான வசதிகள் குறைவாக இருக்கும் பிரதேசம் ஒன்றிலிருந்து தனது விடா முயற்சிகள் மூலம் தாய் நாட்டுக்காக கால்பந்து போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினை மட்டக்களப்பு ஏறாவூர் யங் ஸ்டார் விளையாட்டுக் கழக வீரரான மொஹமட் முஸ்தாக் பெற்றிருக்கின்றார்.

புதுமுக வீரர்களுடன் இலங்கை தேசிய கால்பந்து அணி

இலங்கை தேசிய கால்பந்து…

இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு (FFSL) புதிய நிருவாகம் தெரிவு செய்யப்பட்டதனை அடுத்து,  தேசிய கால்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர் பதவி அனுபவமிக்க நிசாம் பக்கீர் அலி அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. பிபா தரவரிசையில் மோசமான பதிவாக 200ஆம் இடத்திற்கு சென்றிருக்கும் இலங்கை கால்பந்து அணியினை மறுசீரமைக்கும் பொருட்டு பக்கீர் அலிக்கும், இலங்கை கால்பந்து அணியின் தேர்வாளர்களுக்கும் திறமை கொண்ட இளம் வீரர்கள் தேவைப்பட, நாட்டின் பல பாகங்களிலும் தேசிய கால்பந்து அணிக்கான வீரர்கள் தெரிவு முகாம் பல கட்டங்களாக நடைபெற்றிருந்தன.  

இதில் கிழக்கு மாகாண வீரர்களை தேசிய அணிக்கு இணைப்பதற்கான வீரர்கள் தெரிவு முகாம் கடந்த மார்ச் மாதத்தின் மூன்றாம் வாரத்தில், மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றிருந்தது. இந்த தேர்வு முகாமில் கலந்து கொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்தி தற்போது தேசிய கால்பந்து அணியில் இடம்பிடித்த ஒரேயொரு மட்டக்களப்பு வீரராக முஸ்தாக் மாறியுள்ளார். இரண்டு, மூன்று தசாப்தங்களின் பின்னர் கிழக்கு மாகாண வீரர் ஒருவர் தேசிய கால்பந்து அணியில் விளையாடும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.  

முஸ்தாக்கோடு சேர்த்து இலங்கை கால்பந்து அணிக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் புதிய வீரர்கள் அனைவரும் வரும் செப்டம்பர் மாதம் பங்களாதேஷில் நடைபெறவுள்ள தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் சுசுகி கிண்ண போட்டித் தொடரில் பங்கேற்கின்றனர். எனவே, இவர்களுக்கான பயிற்சிகள் தற்பொழுது கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றன.

கல்வியின் மூலம் மாத்திரமே சாதிக்க முடியும் என பெரும்பாலாக எண்ணிக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாணத்தில், பாடசாலை அதிபர் ஒருவரின் மகனாக முஸ்தாக் தனக்கு கால்பந்து விளையாட்டில் மீது இருந்த ஈடுபாடு காரணமாக இன்று தேசிய அணிக்கு தெரிவாகி ஒவ்வொருவருக்கும் ஒரு முன்னுதாரணமாக மாறியிருக்கின்றார்.  

லைட் ஹவுஸ், கொலொன்ஸ் அணிகளின் வெற்றியுடன் ஆரம்பித்த FA கிண்ணம்

இலங்கை கால்பந்து…

தனது மகன் தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டது பற்றி கருத்து தெரிவித்த மொஹிதீன் அதிபர் அவர்கள் ஒரு குழந்தைக்கு எது இயலுமோ? அதில் அந்த குழந்தையை உயர்ந்த நிலைக்கு அடைய வைக்க வேண்டியதே ஒவ்வொரு பெற்றோரினதும் கடமை. அந்த வகையில் எனது மகனுக்கு கால்பந்தில் ஆர்வம் இருந்தது. அதில், அவரை சிறந்த ஒருவராக கொண்டுவர என்னால் முடிந்த முயற்சிகளை செய்திருந்தேன். அதற்கு இன்று வெற்றி கிடைத்திருக்கின்றது. ஏனைய பெற்றோருக்கும் இது எடுத்துக்காட்டாக அமைய வேண்டும். எல்லாப் பெற்றோரும் பிள்ளைகளின் விளையாட்டுத் திறனை அதிகரிக்க பங்களிப்புச் செய்ய வேண்டும். ஏனெனில், விளையாட்டில் ஆர்வம் காட்டி திடகாத்திரமாக இருக்கும் ஒருவரினாலேயே எல்லாவற்றிலும் சிறப்பாக செயற்பட முடியும்எனக் கூறியிருந்தார்.

இப்படியாக, தேசிய அணியில் இணைந்ததன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், தனது சொந்த ஊருக்கும் பெருமை சேர்த்திருத்திருக்கும் முஸ்தாக்குடன், ThePapare.com அவரது கால்பந்து பயணம் பற்றி அறியும் நோக்குடன் நேர்காணல் ஒன்றினை நடாத்தியிருந்தது. முஸ்தாக் இந்த நேர்காணலில் பட விடயங்களை பகிர்ந்திருந்தார். அவற்றில் சிலதை இங்கே பிரசுரம் செய்கின்றோம்.  

  • கே: உங்களை பற்றிய சிறு அறிமுகத்தினை தரலாமே?

நான் முஸ்தாக், எனது தந்தை மொஹமட் முகைதீன். எனது தந்தை ஏறாவூர் மக்கான் மாக்கர் வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றுகின்றார். ஏழு பேர் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை நான். எனக்கு 3 சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர்.

  • கே: எப்படி கால்பந்து விளையாட்டில் ஆர்வம் வந்தது?  

எனது குடும்பத்தினர் அனைவருக்கும் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் அதிகம். எனது தந்தை, சிறிய தந்தை ஆகியோர் தொழில்சாராத (Amateur) கால்பந்து வீரராக இருந்தவர்கள். எனது சகோதர்களும் கால்பந்து பிரியர்கள். இப்படியாக எனது முழுக் குடும்பமும் கால்பந்து விளையாட்டு மீது காட்டிய ஈர்ப்பே எனக்கும் கால்பந்து மீது ஆர்வம் ஏற்படக் காரணமாக அமைந்தது.

வடக்கு, கிழக்கு கால்பந்து விளையாட்டு குறித்து பக்கீர் அலி

இலங்கை தேசிய கால்பந்து…

  • கே: எவ்வளவு காலமாக கால்பந்து விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றீர்கள்?

எனது ஆறு வயதில் இருந்தே கால்பந்தினை மிகவும் ஆர்வத்துடன் விளையாடி வருகின்றேன். எனக்கு, அப்போதிருந்தே ஒரு நாள் இலங்கை கால்பந்து அணிக்காக விளையாட வேண்டும் என்பது ஆசையாக இருந்தது.  

  • கே: தொடர்ந்து இந்த விளையாட்டில் உங்களது திறமைகளை எப்படி வளர்த்துக் கொண்டீர்?

ஆரம்பத்தில் எனது நண்பர்களுடனேயே கால்பந்து விளையாட்டில் ஆர்வம் செலுத்தி வந்தேன். எனினும், நான் எனது பத்தாவது வயதினை நெருங்கும் போது எனது தந்தையார் என்னை மைதானத்திற்கு அழைத்துச் சென்று ஒரு கால்பந்து வீரராக மாறுவதற்குரிய ஊக்கத்தினை தந்திருந்தார். அதோடு, கால்பந்துக்கான பயிற்சிகளையும் அவர் எனக்கு வழங்கியிருந்தார். அவரது ஆதரவே நான் இந்த விளையாட்டில் தொடர்ந்தும் முன்னேற காரணமாக இருந்தது.

 

  • கே: பின்னர் தொழில்முறை கால்பந்து வீரராக உருவெடுத்தது எப்படி?

நான் கல்வி கற்ற ஏறாவூர் அலிகார் பாடசாலையின் 15 வயதின் கீழான மற்றும் 17 வயதின் கீழான கால்பந்து அணிகளில் ஆடியிருந்தேன். அலிகார் அணிக்காக மாகாண மட்ட, தேசிய மட்ட தொடர்களில் விளையாடியிருக்கின்றேன்.

பின்னர், நண்பர்களோடு சேர்ந்து  ஒரு கால்பந்து கழகத்தில் (ஜிந்தாபாத்) இணைந்து விளையாடி வந்தேன். எனது விளையாட்டினைப் பார்த்த ஏறாவூரின் டிவிஷன் – II கால்பந்து அணியான யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் அவர்களுக்காக விளையாட அழைத்திருந்தனர். அதன் பின்னர், தொழில்முறை கால்பந்து வீரராக அவ்வணியுடன் இணைந்து விளையாடத் தொடங்கினேன்.

செப்டம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள டயலொக் சம்பியன்ஸ் லீக் 2018

  • கே: யங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினுடனான உங்களது கால்பந்து பயணம் பற்றி?

எங்களது யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம், வளர்ந்துவரும் வீரர்களினைக் கொண்ட ஒரு அணி, இரண்டு வருடங்களுக்கு முன்னரே நான் அதில் இணைந்த போதிலும் எனக்கு முக்கிய தொடர்களில் விளையாடும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது.

1972ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு ஏறாவூரின் முன்னணி கால்பந்து கழகமாக திகழும் அவர்கள் பல வழிகளிலும் எனக்கு ஆதரவு தந்தனர். அவர்களுக்காக 2016ஆம் ஆண்டில் இடம்பெற்ற மட்டக்களப்பு கால்பந்து சம்மேளனத்தின் A பிரிவுக்கான தொடரில் நல்ல ஆட்டத்தினை வெளிக்காட்டியமைக்காக, எனக்கு சிறந்த வீரருக்கான விருது கிடைத்தது.

அதன் பின்னர் நடைபெற்ற சிலதொடர்களிலும் யங்ஸ்டார் அணிக்காக விளையாடி சிறந்த வீரருக்கானவிருதினைப் பெற்றிருக்கின்றேன். யங் ஸ்டார் அணியின் ஆதரவு இல்லாமல் இந்தளவுக்கு வந்திருக்க முடியாது. இன்றுவரை, இவர்களுக்காகவே விளையாடி வருகின்றேன்.

  • கே: தேசிய அணியில் விளையாடும் கனவு, பொதுவாக கால்பந்து விளையாடும் அனைவருக்கும் இருக்கும். உங்களுக்கும் அது இருந்தது. அது நனவாகும் என நினைத்தீரா?  

நிச்சயமாக இல்லை. நான் தேசிய அணிக்கான தெரிவுகளுக்கு பல முறை சென்றிருக்கின்றேன். 19 வயதின் கீழ்ப்பட்ட தேசிய அணிக்கான முதற்கட்ட தெரிவு ஒன்றில் என்னை தெரிவு செய்தனர். ஆனால், இரண்டாம் கட்ட தெரிவில் நான் தெரிவாகவில்லை. கடந்த ஆண்டும் மட்டக்களப்பில் 23 வயதின் கீழ்ப்பட்ட (கால்பந்து) அணிக்காக தெரிவு நடாத்தியிருந்தனர். அதிலும் நான் தெரிவாகியிருக்கவில்லை.

இதனால், மட்டக்களப்பில் இம்முறை இடம்பெற்ற வீரர்கள் தெரிவுக்கும் செல்லும் எண்ணம் இருக்கவில்லை. எனது தந்தையே நம்பிக்கை தந்து என்னை அனுப்பி வைத்தார். அவரது கனவு நான் தேசிய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே, அது இன்று நனவாகியிருக்கின்றது. அது எனது கனவும் கூட.

  • கே: இனி, மட்டக்களப்பில் இடம்பெற்ற தேர்வு முகாம் பற்றி கொஞ்சம் கதைப்போம். இந்த தேர்வு முகாமில் உங்களுக்கு கிடைத்த அனுபவத்தினைக் கூறுங்கள்?

இந்த தேர்வு முகாமுக்கு, கிழக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வீரர்கள் வந்திருந்தனர். முற்றிலும் வேறு விதமான பயிற்சிகள் எங்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. நாங்கள் புதிய விடயங்களை ஆர்வத்துடன் கற்றுக் கொண்டோம்.

  • கே: தேசிய அணியில் நீங்கள் மத்திய கள வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளீர். இந்த நிலையில் (Position) மாத்திரம் தானா நீங்கள் விளையாடுவது?

நான் ஆரம்பத்தில் முன்கள வீரராகவே விளையாடிள்ளேன். யங் ஸ்டார் கழகத்திற்காக பல போட்டிகளில் முன்கள வீரராகவே ஆடினேன். ஆனால், தேசிய அணியில் இடம் கிடைத்த பின்னர் தொடர்ந்து மத்தியகள வீரருக்குரிய பயிற்சிகளிலேயே ஈடுபட்டு வருகின்றேன்.

  • கே: இலங்கையில் முதல்தர கால்பந்து கழகங்கள் எதிலும் இணைந்து விளையாட எதிர்காலத் திட்டம் வைத்திருக்கின்றீர்களா?

அப்படியான ஒரு எண்ணம் இருக்கின்றது ஆனால், அது தொடர்பாக இன்னும் ஒரு திட்டமான முடிவினை எடுக்கவில்லை.

  • கே: பொதுவாக கிழக்கு மாகாணத்தில், பெற்றோர் விளையாட்டுக்கு முக்கியத்துவம் தருவது மிகக் குறைவு. உங்கள் பெற்றோரின் ஆதரவு எவ்வாறு இருந்தது?

என்னால் இப்படி ஒரு அடைவினை பெற்றிருக்க முடியும் என்றால் அதற்கு காரணம் என் பெற்றோர் தான். அவர்கள் எனக்கு பூரண சுதந்திரம் அளித்திருந்தனர். என் தந்தை பாடசாலை ஒன்றின் அதிபராக இருந்த போதிலும், என்னை காலை 6 மணிக்கே மைதானத்திற்கு அழைத்துச் சென்று கால்பந்து பயிற்சிகளில் ஈடுபட வைப்பார். அவரது உந்துதலால் கடுமையாக உழைத்திருக்கின்றேன். அவரிடம் சிலர் மகனை விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டாம் எனக் கூறியிருக்கின்றனர். அதையெல்லாம் அவர் கருத்திற்கொள்ளவில்லை. எனது தந்தையாரின் ஆசை நான் தேசிய கால்பந்து அணிக்காக விளையாட வேண்டும் என்பதே. இன்று அவரது அவாவை நிறைவேற்ற எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்ற

கட்டார் உலகக் கிண்ண திட்டத்திற்கு ஐரோப்பிய கால்பந்து லீக் எதிர்ப்பு

ரஷ்யாவில் அடுத்த

  • கே: கால்பந்து விளையாட்டு தவிர்ந்த வேறு விளையாட்டுக்கள் எதிலும் ஆர்வம் இருக்கின்றதா?

அப்படி கூறும் அளவுக்கு எந்த விளையாட்டுக்களிலும் ஆர்வம் கிடையாது. கால்பந்தில் மட்டுமே முழுமையான ஈடுபாடு இருக்கின்றது.  

  • கே: உங்களுக்கு பிடித்த கால்பந்து வீரர் யாரும் இருக்கின்றனரா?

அப்படியாக எந்த வீரரும் இல்லை.

  • கே: இறுதியாக கூற விரும்புவது?  

எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றிகள். எனக்கு ஊக்கம் தந்த என் தந்தைக்கு நன்றிகள். அதோடு யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் அதன் உறுப்பினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.  

முஸ்தாக் எம்மோடு தனது கருத்துக்களை இவ்வாறு பகிர்ந்துகொண்டார்.

தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பு யாருக்கும் இலகுவாக கிடைத்துவிடப் போவதில்லை. ஒரு நாடு, அதன் தேசிய அணியில், யார் அதீத திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பாக செயற்படுகின்றார்களோ அவர்களுக்கே வாய்ப்பு வழங்கும். அப்படியாக தனது 19 வயதிலேயே இன்று தேசிய அணிக்கு தெரிவாகி, விளையாட்டிலும் சாதிக்க முடியும் என கிழக்கு மக்களுக்கு முஸ்தாக்  நிரூபித்திருக்கின்றார்.  

இவரை முன்னுதாரணமாக கொண்டு கிழக்கு மாகாணத்தில் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள், தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொள்வர் எனில், சர்வதேச மட்டத்தில் அவர்கள் இலங்கையினை பிரதிநிதித்துவம் செய்யும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்றே குறிப்பிட முடியும்.  

மொஹமட் முஸ்தாக், இலங்கை கால்பந்து அணியில் சாதிக்க வாழ்த்துக்களை தெரிவித்து, எமக்கு நேரம் ஒதுக்கி தந்தமைக்காக அவருக்கு நன்றிகளையும் ThePapare.com தெரிவித்துக் கொள்கின்றது.