டிக்வெல்லவின் துடுப்பாட்ட பாணியை நாம் பின்பற்ற வேண்டும் – திமுத்

783

நிரோஷன் டிக்வெல்லவின் சாதகமான துடுப்பாட்டத்தில் இருந்து தமது அணி அதிகம் கற்க வேண்டும் என்பதை இலங்கை அணியின் உப தலைவர் திமுத் கருணாரத்ன ஒப்புக்கொண்டுள்ளார். இன்று (24) ஆரம்பமான அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியானது 144 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தபோதும் டிக்வெல்ல மாத்திரம் அரைச்சதம் ஒன்றை பெற்றார்.

விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான டிக்வெல்ல சிறப்பாக துடுப்பாடி 64 ஓட்டங்களை பெற்று 9 ஆவது வீரராக ஆட்டமிழந்தார். மிட்சல் ஸ்டார்க்கின் பந்துக்கு அபாரமாக ஸ்கூப் முறையில் மட்டையை சுழற்றிய அவர் அதிர்ச்சி தரும் வகையில் துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். மணிக்கு 143 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய பந்தை முழங்காலை தாழ்த்தி டிக்வெல்ல ஸ்கூப் முறையில் பந்தை செலுத்த அது விக்கெட்டுக்கு மேலால் சென்று சிக்ஸரானது.

ஆஸியின் வேகத்திற்கு முன் தனியாளாக போராடிய டிக்வெல்ல

“அவர் எப்போதும் இப்படி ஆடுவார். ஏழாவது வரிசையில் துடுப்பெடுத்தாடிய அவர் பொதுவாக பின்வரிசையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடுவார். அந்த துடுப்பாட்ட பாணியில் சிறப்பாக செயற்பட்டார். நிலைத்து ஆடும் துடுப்பாட்ட வீரர் ஒருவருடன் அவர் துடுப்பெடுத்தாடினால் நிலைமையை புரிந்து கவனமாக ஆடுவார். ஆனால் கடைசி வரிசை வீரர்களுடன் ஆடினால் அவர் தனது துடுப்பாட்டத்தை வெளிப்படுத்துவார். சாதகமாக ஆடுவதை அவரிடம் இருந்து எம்மால் கற்க முடியும். நாம் அனைவரும் அவ்வாறு விளையாடினால், ஓட்டங்களை பெற முயற்சித்து, 200 இற்கும் மேல் ஓட்டங்களை பெற முடிந்திருக்கும்” என்று முதல் நாள் ஆட்டத்திற்கு பின்னர் நடந்த ஊடக சந்திப்பில் கருணாரத்ன குறிப்பிட்டார்.  

“அவர் பந்தை அடித்த பாணிகள் சில, எம் ஒருவராலும் செய்ய முடியாதது. அவ்வாறு பந்தை அடித்தாடுவதில் மிகச் சிறப்பாக உள்ளார். அவர்களுடன் அவர் அதிக ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார். தனது ஆட்டம் பற்றி அவர் தெரிந்தே இருப்பதோடு, எந்த பந்துவீச்சாளரை இலக்கு வைக்க வேண்டும் மற்றும் எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிந்திருக்கிறார். ஆட்டம் பற்றிய அவரது அறிவு அபாரமானது. எமக்கு அவர் ஒரு சொத்தாகும்” என்று திமுத் மேலும் குறிப்பிட்டார்.

முதல் நாள் ஆட்டத்தின் புகைப்படங்களைப் பார்வையிட…

மிச்சல் ஸ்டார்க்கின் முதல் ஐந்து ஓவர்களில் இலங்கை அணி ஆரம்பத்தில் சிறப்பாக செயற்பட்டது. எனினும் பந்துவீச வந்த பெட் கம்மின்ஸ், லஹிரு திரிமான்னவை ஆட்டமிழக்கச் செய்ததோடு முதல் பகுதியில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் கண்ட இலங்கை இரண்டாவது பகுதியில் மேலும் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது.  

“பந்து மென்மையாகும் போது நாம் உச்சத்தை பெற தவறிவிட்டோம். நல்ல ஓட்டங்களை எடுப்பதற்கு நாம் திட்டங்களை வகுத்து ஆடியிருக்க வேண்டும். இளஞ்சிவப்பு பந்து மென்மை அடையும்போது உண்மையில், அதிக சாதகங்களை பெற முடியவில்லை. மத்திய வரிசை வீரர்கள் மேலும் சாதகமாக ஆட வேண்டும்” என்றும் திமுத் கருணாரத்ன குறிப்பிட்டார்.  

டிக்வெல்லவின் 64 ஓட்டங்களுக்கு அடுத்து கருணாரத்ன பெற்ற 24 ஓட்டங்களே இலங்கை அணியின் அதிகூடிய ஓட்டங்கள் என்பதோடு மேலும் இரண்டு வீரர்கள் மாத்திரமே இரட்டை இலக்க ஓட்டங்களை பெற்றனர்.

“முதல் மணித்தியாலத்தில் நன்றாக செயற்பட்டோம். எனினும் திரிமான்ன ஆட்டமிழந்த பின் ஓட்டங்கள் பெறுவதற்கு போராடினோம். அதுவே முக்கிய விடயமாகும். நாம் சாதகமாக ஆட வேண்டும் அப்படி இல்லை என்றால் 150 மற்றும் 170 போன்ற ஓட்டங்களையே பெற வேண்டி இருக்கும். அடுத்த முறை நாம் சாதகமாக துடுப்பெடுத்தாட வேண்டும்” என்றும் அவர் கூறினார்.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<