ஆசிய ஆணழகனாக முடிசூடிய லூசன் புஷ்பராஜ்

812
Mr.Asia 2017 winner Lucian Pusparaj

சுமார் 50 வருட வரலாற்றைக் கொண்ட ஆசிய ஆணகழகன் போட்டித் தொடரில் இலங்கைக்கு முதலாவது சம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து 2017ஆம் ஆண்டின் ஆசியாவின் சிறந்த ஆணழகனாக இலங்கையைச் சேர்ந்த லூசன் புஷ்பராஜ் இன்று மகுடம் சூடினார்.

ஆசிய ஆணழகன் மற்றும் உடற்தகுதி விளையாட்டு சம்மேளனத்தினால் நடாத்தப்படுகின்ற 51ஆவது ஆசிய ஆணழகன் போட்டிகள் (Asian Bodybuilding & physique Sports Championship-2017) கடந்த 20ஆம் திகதி தென்கொரியாவின் தலைநகர் சோலில் ஆரம்பமானது. இதில் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 100 கிலோ கிராமிற்கு அதிகமான எடைப்பிரிவில் கலந்துகொண்ட லூசன், முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

தெற்காசிய கராத்தே சம்பியன்ஷிப்பில் ஹெட்ரிக் தங்கம் வென்ற பாலுராஜ்

தெற்காசிய கராத்தே தோ சம்மேளனம் நடாத்திய நான்காவது தெற்காசிய கராதே சம்பியஷிப் போட்டித் தொடரில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம்…

சுமார் 26 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்ட இம்முறை போட்டித் தொடரில், 2ஆவது இடத்தை உஸ்பெகிஸ்தான் வீரரும், 3ஆவது இடத்தை தென்கொரிய வீரரும் பெற்றுக்கொண்டனர்.

குவைட் நாட்டில் (Iron Man Gym) நிறுவனத்தின் பயிற்சியாளராகக் கடமையாற்றுகின்ற லூசன், 2013ஆம் ஆண்டு கோல்டன் ஸ்ரீலங்கா ஆணழகனாகவும், அதே ஆண்டு 100 கிலோ கிராமிற்கு அதிகமான எடைப்பிரிவில் இலங்கையின் ஆணழகனாகவும் தெரிவானார்.

அதன்பிறகு 2006ஆம் ஆண்டு குவைட்டில் நடைபெற்ற Wawon Classik போட்டித் தொடரில் வெண்கலப் பதக்கத்தை வென்ற அவர், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய ஆணழகன் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது பெற்றுள்ள வெற்றியின் பிறகு லூசன் புஷ்பராஜ் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், ”இம்முறை போட்டித் தொடரில் இலங்கை சார்பாக போட்டியிட்டு கௌரவத்தைப் பெற்றுக்கொடுக்க முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது. பல்வேறு இன்னல்களுக்கும் தியாகங்களுக்கும் மத்தியில் எந்தவொரு அனுசரணையுமின்றி எனது தனிப்பட்ட செலவில் நான் இந்த வெற்றியைப் பெற்றுக்கொண்டேன். அதிலும் குறிப்பாக நான் பணியாற்றுகின்ற குவைட்டில் உள்ள நிறுவனத்துக்கும் அதன் தலைவர் மொஹமட் அல் கலாப்புக்கும், எனது மனைவிக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இலங்கையைப் பொறுத்தமட்டில் 100 கிலோ கிராமிற்கு அதிகமான எடைப்பிரிவில் நான் மட்டும்தான் விளையாடி வருகின்றேன். எதிர்வரும் காலங்களில் உலக ஆணழகன் சம்பியன்ஷிப் போட்டியிலும் பங்குபற்றி மற்றுமொறு பதக்கத்தை வெல்வேன்” என அவர் தெரிவித்தார்.