டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்

71
ICC Twitter

அவுஸ்திரேலிய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் ஸ்டீவ் ஸ்மித், டெஸ்ட் போட்டிகளில் அணியொன்றுக்கு எதிராக 50 இற்கும் அதிகமான ஓட்டங்களை தொடர்ச்சியாக கடந்தவர்கள்  பட்டியலில், 10 அரைச் சதங்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஆஷஷ் தொடரின் இறுதி டெஸ்ட் போட்டி லண்டன் – ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய ஸ்டீவ் ஸ்மித் 80 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.

அபார வெற்றியுடன் ஆஷஷ் கிண்ணத்தை நெருங்கும் அவுஸ்திரேலியா

மென்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஷ் தொடரின்…

இந்த ஆஷஷ் தொடர் முழுவதும் மிகச்சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஸ்டீவ் ஸ்மித் ஒரு அணிக்கு எதிராக தொடர்ச்சியாக அதிகூடிய அரைச் சதங்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக கடந்த வருடம் கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்துக்காக ஒருவருட தடையில் இருந்த ஸ்டீவ் ஸ்மித், இந்த ஆஷஷ் தொடரில் முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் மீள்வருகை பெற்றிருந்தார்.

தனது டெஸ்ட் மீள்வருகையை சதத்தின் மூலமாக (144) அறிவித்த இவர், தொடர்ச்சியாக இங்கிலாந்து அணிக்கு சவாலான துடுப்பாட்ட வீரராக மாறியிருந்தார். முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் 142 ஓட்டங்களை குவித்த இவர், இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 92 ஓட்டங்களை பெற்றிருந்தார். எனினும், குறித்த இன்னிங்ஸில் ஜொப்ரா ஆர்ச்சரின் பௌண்சர் பந்து தாக்கியதில், ஸ்டீவ் ஸ்மித் இரண்டாவது இன்னிங்ஸ் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் உபாதை காரணமாக விளையாடவில்லை.

உபாதைக்கு பின்னர், மீண்டும் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இவர், முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதம் (211) கடந்ததுடன், இரண்டாவது இன்னிங்ஸில் 82 ஓட்டங்களை பெற்றிருந்தார். இப்போது நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 80 ஓட்டங்களை பெற்றிருக்கிறார்.

இவ்வாறான ஓட்டக்குவிப்பின் அடிப்படையிலும், இதற்கு முன்னதாக நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் முறையே 239, 76, 102 மற்றும் 83 ஓட்டங்களை பெற்றதன் மூலம் ஒரு அணிக்கு எதிராக தொடர்ச்சியாக அதிக அரைச் சதங்களை கடந்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவர், 2017 தொடக்கம் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் இவ்வாறு தொடர்ச்சியாக அரைச் சதங்களை கடந்துள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித்திற்கு முன்னதாக பாகிஸ்தான் அணியின் இன்சமாம் உல் ஹக் இங்கிலாந்து அணிக்கு எதிராக 2001 – 2006 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் தொடர்ச்சியாக 9 அரைச் சதங்களை கடந்து சாதனை படைத்திருக்கிறார். இந்த பட்டியலில் இலங்கை அணியின் குமார் சங்கக்கார 2009 தொடக்கம் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் பங்களாதேஷ் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 8 அரைச் சதங்களை கடந்து ஐந்தாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது ஆஷஸ் டெஸ்டில் பென் ஸ்டோக்ஸை இழக்குமா இங்கிலாந்து?

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ்…

ஒரு அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிகூடிய அரைச் சதங்களை பெற்ற வீரர்கள்

  • ஸ்டீவ் ஸ்மித் எதிர் இங்கிலாந்து – 10 அரைச் சதங்கள் (2017 – 2019)
  • இன்சமாம் உல் ஹக் எதிர் இங்கிலாந்து – 9 அரைச் சதங்கள் (2001 – 2006)
  • க்ளைவ் லொய்ட் எதிர் இங்கிலாந்து – 9 அரைச்ச சதங்கள் (1980 – 1984)
  • ஜெக் கலீஸ் எதிர் பாகிஸ்தான் – 8 அரைச் சதங்கள் (2007 – 2010)
  • குமார் சங்கக்கார எதிர் பங்களாதேஷ் – 8 அரைச் சதங்கள் (2009 – 2014)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<