ஆசிய மெய்வல்லுனர் முதல் நாளில் இலங்கை வீரர்கள் அபாரம்

152

கட்டாரின் டோஹா நகரில் உள்ள கலீபா சர்வதேச விளையாட்டரங்கில் இன்று (21) காலை ஆரம்பமாகிய 23 ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை சார்பாக ஐந்து வீரர்கள் தத்ததமது முதல் சுற்று சுற்றுப் போட்டிகளில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுகளுக்கு தகுதி பெற்றுக்கொண்டனர்.

இதில் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட நதீஷா ராமநாயக்க மற்றும் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட அஜித் பிரேமகுமார ஆகியோர் இன்று இரவு நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.   

ஆசிய மெய்வல்லுனரில் இலங்கை அணியை வழிநடத்தும் நிமாலி லியனாரச்சி

கட்டாரின் டோஹா நகரில் உள்ள கலீபா விளையாட்டரங்கில்…..

முற்றிலும் குளிரூட்டப்பட்ட கலீபா விளையாட்டரங்கில் ஆரம்பமாகிய ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 43 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 700 வீர, வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர். தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இப்போட்டித் தொடரில் 43 போட்டி நிகழ்ச்சிகளுக்காக 186 பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்த நிலையில், போட்டித் தொடரின் முதல் நாளான இன்று காலை நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டிகளில் இலங்கை சார்பாக ஐந்து வீரர்கள் களமிறங்கியிருந்தனர்.

இதில் பெண்களுக்கான 400 மீற்றர் முதலாவது தகுதிச் சுற்று ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட நதீஷா ராமநாயக்க, போட்டியை 53.66 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதன்படி, 14 வீராங்கனைகள் பங்குபற்றிய தகுதிச் சுற்றுப் போட்டியில் ஒட்டுமொத்தமாக 3 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அவர், இன்று இரவு நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பையும் பெற்றார்.

எனினும், குறித்த போட்டியின் 2 ஆவது தகுதிச் சுற்றுப் போட்டியில் முதலிரண்டு இடங்களையும் பெற்றுக்கொண்ட பஹ்ரைனின் சல்வா நசீர் (52.29 செக்.) மற்றும் இந்தியாவின் பூவம்மா ராஜு (52.46 செக்.) ஆகிய இருவரும் இறுதிப் போட்டியில் நதீஷாவுக்கு பலத்த போட்டியைக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேநேரம், நான்கு சுற்றுக்களைக் கொண்டதாக நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் 3 ஆவது தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்குகொண்ட அஜித் பிரேமகுமார, போட்டியை 47.31 செக்கன்களில் நிறைவுசெய்து மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதன்படி, இன்று இரவு நடைபெறவுள்ள ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டி அரையிறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை அஜித் பிரேமகுமார பெற்றார்.

நிமாலி, கயன்திகாவுக்கு வெற்றி

இலங்கையின் மத்திய தூர ஓட்ட வீராங்கனைகளான நிமாலி லியனாரச்சி மற்றும் கயன்திகா அபேரத்ன ஆகியோர் பெண்களுக்கான 800 மீற்றர் தகுதிச்சுற்றுப் போட்டியில் இன்று காலை களமிறங்கினர்.

இதன் முதலாவது தகுதிச் சுற்றில் கலந்துகொண்ட ஆசிய மெய்வல்லுனர் தொடரின் நடப்பு சம்பியனும், இலங்கை அணியின் தலைவியுமான நிமாலி லியனாராச்சி, போட்டித் தூரத்தை 2 நிமிடங்களும் 05.10 செக்கன்களில் நிறைவுசெய்து நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதேநேரம், பெண்களுக்கான 800 மீற்றர் இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் பங்குகொண்ட கயன்திகா அபேரத்ன, போட்டியை 2 நிமிடங்களும் 05.20 செக்கன்களில் நிறைவு செய்து முதலாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதன்படி, நாளை நடைபெறவுள்ள பெண்களுக்கான 800 மீற்றர் இறுதிப் போட்டியில் இவ்விரண்டு வீராங்கனைகளும் தகுதிபெற்றனர்.

ஆசிய மெய்வல்லுனர் தொடரில் ஹிமாஷ மற்றும் கயந்திகாவுக்கு 2 போட்டிகள்

கட்டாரின் டோஹா நகரில் உள்ள கலீபா சர்வதேச……

இதேவேளை, ஆண்களுக்கான 800 மீற்றர் முதல் சுற்று ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட ருசிரு சதுரங்க, மூன்றாவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார். குறித்த போட்டியை நிறைவுசெய்ய ஒரு நிமிடமும் 50.55 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.

கிரேஷனுக்கு நான்காவது இடம்

ஆண்களுக்கான முப்பாய்ச்சல் முதலாவது தகுதிகாண் சுற்றுப் போட்டியில் பங்குகொண்ட கிரேஷன் தனன்ஞய, 16.71 மீற்றர் தூரம் பாய்ந்து நான்காவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

குறித்த போட்டியில் சீனாவின் ஜு யாங் (16.52 மீற்றர்) முதலிடத்தைப் பெற்றுக்கொள்ள, பிலிப்பைன்ஸின் டியோன்ஸ் மார்க்ஹெர்ரி (16.16 மீற்றர்) மற்றும் ஜப்பானின் யாமெட்டோ ரையோமா (16.91 மீற்றர்) ஆகியோர் முறையே 2ஆவது, 3ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டனர்.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<