”இங்கிலாந்தை வீழ்த்த காரணம் மோர்கனின் கருத்து”: தனன்ஜய

7209

இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன் வெளியிட்டிருந்த கருத்துகள் அணியை ஊக்கப்படுத்தியிருந்ததாக இலங்கை அணியின் சகலதுறை வீரர் தனன்ஜய டி சில்வா தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணி கடந்த வெள்ளிக்கிழமை (21) பலம் மிக்க இங்கிலாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அதுமாத்திரமின்றி, அடுத்து வரும் 3 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பெற முடியும் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திரமாக ஜொலிக்கவுள்ள அவிஷ்க பெர்னாண்டோ

இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணி அதிர்ச்சி ………

இவ்வாறு இலங்கை அணி முன்னேறுவதற்கு இங்கிலாந்து அணியுடனான வெற்றி முக்கிய காரணமாக உள்ளது. இந்தநிலையில், இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கினை சகலதுறை வீரர் தனன்ஜய டி சில்வா வழங்கியிருந்தார். துடுப்பாட்ட சகலதுறை வீரராக இருந்தாலும், அவரது பந்துவீச்சு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கவனிக்கத்தக்கதாக இருந்தது.

ஆரம்பத்தில் பந்துவீசிய இவர் ஓட்டங்களை கட்டுப்படுத்தி இங்கிலாந்து அணிக்கு சவால் கொடுத்ததுடன், இறுதி தருணத்தில் மொயீன் அலி, க்ரிஸ் வோர்க்ஸ் மற்றும் ஆதில் ரஷீட் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முக்கிய காரணமாக இருந்தார். போட்டியின் வெற்றிக்கான தனது பங்களிப்பு குறித்து தனன்ஜய டி சில்வா குறிப்பிடுகையில்,

“இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் வெற்றி எம்மிடமிருந்து கைநழுவிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், அணிக்காக 2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியமைக்கு பெருமைப்படுகிறேன்”

Photo Album  : Sri Lanka vs England | ICC Cricket World Cup 2019 – Match 27

அதேநேரம், இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன் உலகக் கிண்ணத்துக்கு முன்னர், இலங்கை அணி தொடர்பில் வெளியிட்டிருந்த கருத்து ஒன்று சமுகவலைத்தளங்களில் வைரலாகியிருந்தது. ஊடகவியலாளர் ஒருவர், “உலகக் கிண்ணத்தில் ஆச்சரியமான இணைப்பு ஜொப்ரா ஆர்ச்சரா?” என வினவினார். இதற்கு பதிலளித்திருந்த மோர்கன், “உலகக் கிண்ணத்தின் ஆச்சரியமான இணைப்புகளை இலங்கை அணி கொண்டுள்ளது. இலங்கை அணியில் 10 புதிய வீரர்கள் உள்ளனர். அவர்களை இதற்கு முன்னர் நான் எதிர்கொண்டதில்லை. எனவே, இலங்கை அணிதான் ஆச்சரியமான அணி” என குறிப்பிட்டிருந்தார்.

மேற்குறிப்பிட்டவாறு இயன் மோர்கன் ஊடகங்களிடம் வெளியிட்டிருந்த கருத்து இலங்கை அணியை ஊக்கப்படுத்தியிருந்ததாகவும், குறித்த உத்வேகம் அந்த அணியை வீழ்த்துவதற்கான முக்கிய காரணமாக இருந்ததாகவும் தனன்ஜய சுட்டிக்காட்டினார்.

மாலிங்கவுக்கு ஆதரவாகப் பேசிய மஹேல

இலங்கை அணியின் நட்சத்திர வேகப் ……….

“எமது அணி தொடர்பில் சில விடயங்களை இயன் மோர்கன் கூறியிருந்தார். அவர் கூறியிருந்த கருத்துகள் எமது அணியை ஊக்கப்படுத்தியது. நாம் இந்த உலகக் கிண்ணத்தில் வெறுமனே பங்குப்பற்றி செல்ல வரவில்லை. எதிரணிகளுடன் சிறப்பாக விளையாடி, போட்டித்தன்மையான ஆட்டங்களை வெளிப்படுத்தவே வந்துள்ளோம்” என்றார்.

இலங்கை அணியின் துடுப்பாட்ட சகலதுறை வீரராக தனன்ஜய டி சில்வா இருந்தாலும், இந்த உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணிக்கு சுழல் பந்தின் ஊடாக சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றார். 4 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இவர், இந்த உலகக் கிண்ணத்தில் அதிகூடிய விக்கெட்டுகளை கைப்பற்றிய ஐந்தாவது சுழல் பந்துவீச்சாளராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<