டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரின் சம்பியன் மற்றும் இரண்டாம் இடத்தினைப் பெற்ற அணிகளான கொழும்பு கால்பந்து கழகம் மற்றும் ரினௌன் விளையாட்டுக் கழகம் என்பவற்றை, சிடி கால்பந்து லீக் ஜனாதிபதிக் கிண்ணத்தின் ஆரம்பப் போட்டிகளில் மொறகஸ்முல்ல யுனைடட் மற்றும் ஜாவா லேன் ஆகிய அணிகள் தோல்வியடையச் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளன.  

சிட்டி காற்பந்தாட்ட லீக் ஜனாதிபதி கிண்ணத்துக்காக 6 அணிகள்

சிட்டி காற்பந்தாட்ட லீக் ஜனாதிபதி கிண்ணத்துக்காக 6 அணிகள்

மார்ச் மாதம் 11ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள சிட்டி காற்பந்தாட்ட லீக் ஜனாதிபதி கிண்ணத்திற்கான போட்டி தொடரில் 6 காற்பந்தாட்ட அணிகள் பங்குகொள்ளவுள்ளன…

ரினௌன் விளையாட்டுக் கழகம் எதிர் ஜாவா லேன் விளையாட்டுக் கழகம்

நடைபெற்று முடிந்த சம்பியன்ஸ் லீக் தொடரில் மிக மோசமான விளையாட்டைக் காண்பித்தமையினால் டிவிஷன் l இற்கு தரமிறக்கப்பட்ட ஜாவா லேன் அணி, பிரபல ரினௌன் அணிக்கு அதிர்ச்சி கொடுத்து 3-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

ஜவா லேன் அணிக்காக இளம் வீரர் நவீன் ஜூட் போட்டியின் 23ஆவது நிமிடத்தில் முதல் கோலைப் பெற்றுக்கொடுத்து, தமது தரப்பை முன்னிலைப்படுத்தினார்.

முதல் பாதியில் முன்னிலை பெற்றிருந்த ஜாவா லேன் அணிக்காக, இரண்டாவது பாதியின் 65ஆவது நிமிடத்தில் இம்மானுவெல் உசென்ன அடுத்த கோலையும் பெற, 82ஆவது நிமிடத்தில் மொஹமட் அலீம் மூலம் அவ்வணி மூன்றாவது கோலையும் பெற்று எதிரணியை நிலை குழையச் செய்தது.

எனினும் ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் அபாரம் காண்பித்த ரினௌன் அணியின் பசால் 86ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் பெற, தேசிய அணி வீரர் ரிப்னாஸ் 90ஆவது நிமிடத்தில் அடுத்த கோலையும் பெற்றுக் கொடுத்தார்.

பின்னர் இறுதி சில நிமிடங்களில் போட்டியை சமநிலையடையச் செய்வதற்கான கோலைப் பெறுவதற்கான ரினெளன் அணியின் முயற்சி சிறந்த பயனைப் பெற்றுக்கொடுக்கவில்லை.

முழு நேரம்: ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் 03 – 02 ரினௌன் விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்                                    

ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் – நவீன் ஜூட் 23’, இம்மானுவெல் உசென்ன 65’, மொஹமட் அலீம் 82’

ரினௌன் விளையாட்டுக் கழகம் – மொஹமட் பசால் 86’, மொஹமட் ரிப்னாஸ் 90’

கொழும்பு கால்பந்து கழகம் எதிர் மொறகஸ்முல்ல யுனைடட் விளையாட்டுக் கழகம்

இவ்வருட சிடி கால்பந்து லீக் ஜனாதிபதிக் கிண்ணத்திற்கான இரண்டாவது போட்டியில், டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் கிண்ணத்தை இரண்டாவது முறையாகவும் தொடர்ந்து கைப்பற்றியிருந்த சூட்டுடன் விளையாடிய கொழும்பு கால்பந்து கழக அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது மொறகஸ்முல்ல யுனைடட் அணி.

கடந்த வருடம் டிவிஷன் l கால்பந்து தொடரின் சம்பியனாகி, இவ்வருடம் சம்பியன்ஸ் லீக்கில் தடம் பதிக்கவிருக்கும் மொறகஸ்முல்ல அணியினருக்கு, போட்டியின் முதல் கோல் 44ஆவது நிமிடத்தில் இசுரு பிரியன்கர மூலம் கிடைக்கப்பெற்றது.

பின்னர் இரண்டாவது பாதியில் இரு அணியினரும் கோல்களைப் பெருவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டும், அவை பயன் கொடுக்கவில்லை. குறிப்பாக கொழும்பு தரப்பினரின் பல சிறந்த வாய்ப்புகள் மொறகஸ்முல்ல அணியின் கோல் காப்பாளர் தரிந்து ருக்ஷான் மூலம் லாவகமான முறையில் தடுக்கப்பட்டன.

போட்டி முடிவுறும் தருணம் நெருங்கி இருக்கையில், அதாவது 86ஆவது நிமிடத்தில் 19 வயதின் கீழ் அணியின் நட்சத்திர வீரராகத் திகழ்ந்த டிலான் மதுஷங்க மூலம் பெற்ற கோலினால், 2 மேலதிக கோல்களுடன் வெற்றியை சுவைத்தது மொறகஸ்முல்ல யுனைடட் விளையாட்டுக் கழகம்.

முழு நேரம்: கொழும்பு கால்பந்து கழகம் 00 – 02 மொறகஸ்முல்ல யுனைடட் விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்

மொறகஸ்முல்ல யுனைடட் விளையாட்டுக் கழகம் – இசுரு பிரியன்கர 44’, டிலான் மதுஷங்க 86’

இத்தொடரின் அடுத்த போட்டிகள்

18ஆம் திகதி மாலை 3.45 மணிக்கு       – சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் மொறகஸ்முல்ல விளையாட்டுக் கழகம்

19ஆம் திகதி மாலை 3.45 மணி – ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் எதிர் குரே விளையாட்டுக் கழகம்