ஹபீஸின் பந்துவீச்சு குறித்து மீண்டும் சந்தேகம்

571

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், சகலதுறை ஆட்டக்காரருமான மொஹமட் ஹபீஸின் (37 வயது) பந்துவீச்சு தொடர்பில் மீண்டும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3ஆவது ஒரு நாள் போட்டியின் பிறகு இந்த முறைப்பாடு போட்டி நடுவரிடம் செய்யப்பட்டுள்ளதையடுத்து, இது தொடர்பில் பாகிஸ்தான் அணியின் முகாமையாளருக்கு அறிவிக்கவும் போட்டி நடுவர்களான சுந்தரம் ரவி மற்றும் அசாத் ராசா ஆகியோர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

நான்காவது ஒரு நாள் போட்டியில் கபுகெதர பங்கேற்பதில் சந்தேகம்

பாகிஸ்தான் அணியுடனான மூன்றாவது ஒரு நாள்..

இதன்படி, எதிர்வரும் 14 நாட்களுக்குள் தனது பந்துவீச்சு பாணி குறித்து ஹபீஸ் .சி.சியின் ஆய்வகமொன்றில் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அதுவரை ஹபீஸுக்கு சர்வதேசப் போட்டிகளில் பந்துவீச முடியும் என .சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போட்டியில் 8 ஓவர்கள் பந்து வீசிய ஹபீஸ், ஒரு விக்கெட்டுக்கு 39 ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஐசிசி நிர்ணயித்த 15 பாகைக்கும் அதிகமாக முழங்கை வளைவு அளவுடன் பந்துவீசுவதாக கடந்த 2014ஆம் ஆண்டு நியூசிலாந்துடனான டெஸ்ட் போட்டியின் போது முதற்தடவையாக ஹபீஸின் மீது சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக, சென்னையில் உள்ள ஆய்வு மையத்தில் பலகட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர், 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவருக்கு பந்துவீசுவதற்கு .சி.சி அனுமதி வழங்கியது.

இதைத்தொடர்ந்து, கடந்த 2015ஆம் ஆண்டு காலியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் 20 ஓவர்கள் பந்துவீசி 2 விக்கெட்டுக்களை வீழ்த்தி பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஹபீஸுக்கு, அப்போட்டியிலும் பந்துவீச்சு சர்ச்சைக்குரிய முறையில் இருந்ததாக மீண்டும் நடுவரால் முறைப்பாடு செய்யப்பட்டது. எனினும், ஒரே ஆண்டுக்குள் இவ்வாறு 2ஆவது முறையாக புகார் அளிக்கப்பட்டதால், ஹபீஸுக்கு சர்வதேசப் போட்டிகளில் பந்து வீசுவதற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.

இலகு வெற்றியுடன் இலங்கையுடனான ஒரு நாள் தொடர் பாகிஸ்தான் வசம்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரு..

இதனையடுத்து அவர் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது பந்துவீச்சுப் பாணி தொடர்பில் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் அமைந்துள்ள தேசிய கிரிக்கெட் ஆய்வு மையத்தில் பரிசோதனைகளுக்கு முகங்கொடுத்திருந்ததுடன், அதன்போது பந்துவீச்சுப் பாணியை மாற்றியமையினாலேயே அவருக்கு மீண்டும் பந்துவீசுவதற்கு .சி.சி அனுமதி வழங்கியது.

இதன் காரணமாக இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுடனான போட்டித் தொடரில் ஹபீஸ் பந்துவீசியிருந்ததுடன், இவ்வருடத்தில் இதுவரை 6 ஒரு நாள் போட்டிகளில் கலந்துகொண்டு 7 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.

இதுவரை 193 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஹபீஸ், 136 விக்கெட்டுக்களையும், 50 டெஸ்ட் போட்டிகளில் 52 விக்கெட்டுக்களையும், 78 T-20 போட்டிகளில் 46 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.

இதற்கு முன்னதாக .சி.சியின் விதிமுறைகளுக்கு முரணாக பந்துவீசிய குற்றச்சாட்டில் பாகிஸ்தான் வீரர்களான சொஹைப் அக்தர், சாபிர் அஹ்மட், சயீட் அஜ்மல், சஹீட் அப்ரிடி மற்றும் பிலால் ஆசிப் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. எனினும், இவ்வீரர்களின் பந்துவீச்சுப் பாணியை சரிசெய்த பிறகும் பாகிஸ்தான் அணிக்குள் இடம்பிடிக்க முடியாமல் போன ஒரேயொரு வீரராக சயீட் அஜ்மல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.