தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் வருடத்தின் அதிவேக பாடசாலை வீரராகும் வாய்ப்பை தவறவிட்ட, நிகவெரட்டிய அம்புக்காகம முஸ்லிம் மஹா வித்தியாலயத்தைச் சேர்ந்த மொஹமட் சபான், இன்று (13) நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடத்தைப் பெற்று மீண்டும் அசத்தினார்.

இதன்படி, அவர் குறித்த போட்டியை 21.61 செக்கன்களில் நிறைவுசெய்து, அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 200 மீற்றரில் தொடர்ச்சியாக தனது 2ஆவது வெற்றியையும் பதிவு செய்தார்.

முன்னதாக நடைபெற்ற தகுதிகாண் சுற்றில் 21.94 செக்கன்களைப் பதிவு செய்து இறுதிப் போட்டிக்கு தெரிவான சபான், பலத்த போட்டிக்கு மத்தியில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், புதிய பாடசாலை வர்ண சாதனையையும் நிகழ்த்தினார்.

எனினும், முன்னதாக நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட அகுரம்பொட வீரகெப்பெட்டிப்பொல தேசிய பாடசாலையைச் சேர்ந்த அருண தர்ஷன, 21.63 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தையும், கொழும்பு நாலந்த கல்லூரியைச் சேர்ந்த கே.எஸ் பெரேரா, 21.69 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

பாடசாலை மெய்வல்லுனரில் யாழ் மாணவர்களின் பதக்க வேட்டை ஆரம்பம்

தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்ற அகில இலங்கை…

2013ஆம் ஆண்டு முதல் அகில இலங்கை பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் அம்புக்காகம முஸ்லிம் மஹா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப்பந்தயங்களில் பங்குபற்றி வெற்றிகளைப் பதிவு செய்து வருகின்ற சபான், நேற்று நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். அவர் குறித்த போட்டியை 10.96 செக்கன்களில் நிறைவுசெய்து, அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் தொடர்ச்சியாக தனது 2ஆவது வெற்றியையும் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 200 மீற்றரில் 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அவர், நேற்று (12) நடைபெற்ற 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தனது கடைசி பாடசாலை மட்டப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியுடன் விடைகொடுத்த சபான், அடுத்த வருடம் முதல் சிறந்த முறையில் பயிற்சிகளைப் பெற்று தேசிய மட்டப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக எமது இணையத்துக்கு வழங்கிய செவ்வியின் போது தெரிவித்திருந்தார்.