கிழக்கு மாகாணம் சார்பாக முதலாவது தங்கப்பதக்கம் வென்ற ஆஷிக்

775

43ஆவது தேசிய விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர் போட்டிகளில் கிழக்கு மாகாணத்திற்கு முதலாவது தங்கப் பதக்கத்தை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த Z.T.M ஆஷிக் பெற்றுக்கொடுத்தார்.

போட்டிகளின் முதல் நாளான இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதலில் கலந்துகொண்ட ஆஷிக், 42.97 மீற்றர் தூரம் எறிந்து தொடர்ச்சியாக 2ஆவது தடவையாக தேசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கம் வென்றார்.

எனினும், இம்மாத முற்பகுதியில் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற 95ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட ஆஷிக், ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதலில் 42.48 மீற்றர் தூரம் எறிந்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

கடந்த 10 வருடங்களாக தேசிய மெய்வல்லுனர் அரங்கில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற அம்பாறை மாவட்டம் நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட Z.T.M ஆஷிக் பாடசாலை மட்டப் போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனைகளை படைத்ததோடு, கடந்த 2015ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு விழாவிலும் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.

நிந்தவூர் அல்-மதீனா மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரும், நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட வீரருமான ஆஷிக், போட்டியின் பிறகு இணையத்தளத்துக்கு கருத்து வெளியிடுகையில்,

பரிதி வட்டம் எறிதலில் தங்கப் பதக்கம் வென்றமை மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு முதலில் எனது பயிற்சியாளர், பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் இவ்விளையாட்டுக்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்த நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகத்துக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் என்னைப் போன்று கிழக்கு மாகாணணத்தில் பல வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கும் இவ்வாறு தேசிய மட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கான வசதிகளைப் பெற்றுக்கொடுக்குமாறு உரிய அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்கிறேன்.

எனது அடுத்த இலக்கு ஆசிய மட்டப் போட்டிகள் – அனித்தா ஜகதீஸ்வரன்

அத்துடன் எமக்கு பயிற்சிகளை மேற்கொள்வதற்கு கிழக்கு மாகாணத்தில் எந்தவொரு மைதானங்களும் இல்லை. இதன் காரணமாக மேலதிக பயிற்சிகளுக்காக நாங்கள் வெளி மாகாணங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. எனவே இவ்வாறான சின்னச்சின்ன குறைபாடுகளை அதிகாரிகள் தலையிட்டு நிவர்த்தி செய்தால் நிச்சயம் கிழக்கு மாகாணத்திலிருந்து கூடுதலான வீரர்களை உருவாக்க முடியும்.

எனவே அடுத்த வருடம் பல சர்வதேச போட்டிகள் நடைபெறவுள்ளதால், தற்பொழுது முதல் பயிற்சிகளை மேற்கொண்டு தேசிய குழாமில் இடம்பெற்று இலங்கைக்காக கௌரவத்தைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளேன என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இப்போட்டியில் 2ஆவது இடத்தை மத்திய மாகாணத்தைச் சேர்ந்த தனுஷ்க பண்டார ரத்னாயக்க (41.68 மீற்றர்) பெற்றுக்கொண்டதுடன், 3ஆவது இடத்தை தென் மாகாணத்தைச் சேர்ந்த எம். சுணந்த நிரோஷன் (41.21 மீற்றர்) பெற்றுக்கொண்டார்.