கரம் உலகில் இளம் வயதில் சாதனை படைத்த மொஹமட் சஹீட்

574

கிரிக்கெட் விளையாட்டுக்குப் பிறகு இலங்கையின் நாமத்தை உலகிற்கு எடுத்துச் சென்ற விளையாட்டுகளில் கரம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் தென் கொரியாவில் நடைபெற்ற 5 ஆவது உலக கரம் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்கேற்ற சமில் குரேயின் தலைமையிலான இலங்கை ஆடவர் அணி, நடப்புச் சம்பியனான பிரபல இந்திய அணியை வீழ்த்தி 5ஆவது தடவையாகவும் உலக கரம் சம்பியன் பட்டத்தை வென்றது.

அதேபோல, மகளிர் பிரிவில் யஷிகா ராகுபெத்தவின் தலைமையிலான இலங்கை அணி இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் தோல்வியுற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

கொழும்பு மரதனை ஆக்கிரமித்த கென்ய வீரர்கள்

உள்ளூர் மற்றும் சர்வதேச வீரர்களின்….

இந்த நிலையில் ஆடவர் பிரிவில் சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணியில் இடம்பெற்ற இளம் வயது வீரரும், தனது இரண்டாவது சர்வதேச கரம் போட்டியில் பங்குபற்றியவருமான கொழும்பைச் சேர்ந்த மொஹமட் சஹீட்> தினகரன் வார மஞ்சரிக்கு வழங்கிய விசேட நேர்காணலைப் பார்ப்போம்.

முதலில் உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?  

நான் மொஹமட் சஹீட் ஹில்மி. எனக்கு 21 வயது. நான் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்றேன். குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையான எனக்கு அப்பா, அம்மா, இரண்டு சகோதரிகள் உள்ளனர். எனது அப்பா கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பணிபுரிகின்றார். உயர்தரம் முடித்த பிறகு தொழில் ஒன்றுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.

கரம் விளையாட்டை ஏன் தெரிவு செய்தீர்கள்?

நான் தரம் 9இல் கற்கும் போது பாடசாலையில் நடைபெற்ற இல்லங்களுக்கிடையிலான கரம் போட்டியொன்றில் பங்குபற்றினேன்.அந்தப் போட்டியில் எனக்கு வெற்றி கிடைத்தது. அதன்பிறகு கரம் விளையாட்டுக்குப் பொறுப்பாக இருந்த லசந்த ரணதுங்க ஆசிரியர் என்னை கரம் பயிற்சிகளுக்காக வரும்படி கேட்டுக் கொண்டார்.

நீங்கள் பெற்ற வெற்றிகளைப் பற்றிச் சொல்லுங்கள்?

2010ஆம் ஆண்டு நடைபெற்ற மேல் மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கரம் போட்டியில் முதற்தடவையாக பங்குபற்றியிருந்தேன். குழு நிலைப் போட்டியாக இடம்பெற்ற குறித்த தொடரில் 2016ஆம் ஆண்டு வரை சம்பியனாக தெரிவாகியிருந்தேன். அதிலும், 2014இல் சிறந்த வீரருக்கான விருதையும் 2016இல் அகில இலங்கை பாடசாலை கரம் போட்டிகளில் சிறந்த வீரருக்கான விருதையும் தட்டிச் சென்றேன். 2013இல் இந்தியாவில் நடைபெற்ற இலங்கைஇந்திய கனிஷ்ட கரம் சம்பியன்ஷிப் தொடரில் குழு நிலைப் போட்டிகளில் எனக்கு மாத்திரம் வெற்றிகிடைத்ததுடன், ஏனைய இரண்டு வீரர்களும் தோல்வியைத் தழுவிய காரணத்தால் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டோம்.

இறுதி வரை போராடியும் அரையிறுதி வாய்ப்பை இழந்த யாழ் ஏஞ்சல்

இதேவேளை, 2012 முதல் 2016 வரை நடைபெற்ற தேசிய கனிஷ்ட கரம் போட்டிகளில் தனிநபர் மற்றும் குழு நிலைப் போட்டிகளில் சம்பியனாகவும் தெரிவாகினேன்.  

அதன்பிறகு 2014ஆம் ஆண்டு மாலைதீவுளில் நடைபெற்ற 4ஆவது உலக கரம் சம்பியன்ஷிப் போட்டிகளில் முதற்தடவையாக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வாய்ப்பு கிட்டியது. இதில் ஸ்விஸ் லீக் போட்டிப் பிரிவில் 6ஆவது இடத்தையும், குழு நிலைப் போட்டியில் சம்பியன் பட்டத்தையும் வென்றோம்.

2016இல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கரம் சம்பியன்ஷிப் தொடரில் தனிநபர் போட்டியில் 8ஆவது இடத்தையும், குழு நிலைப் போட்டியில் சம்பியன் பட்டத்தையும் வெற்றி கொண்டோம்.  

குறித்த காலப்பகுதியில் நடைபெற்ற தேசிய மட்டப் போட்டிகளில் கரம் சம்பியன்களான சமில் குரேவை 2 தடவைகளும், நிஷாந்தவை ஒரு முறையும் வீத்தியிருந்தேன்.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் தென்கொரியாவில் நடைபெற்ற 5ஆவது உலகக் கிண்ண கரம் சம்பியன்ஷிப் தொடரில் தனிநபர் போட்டியில் 7ஆவது இடத்தையும், குழுநிலைப் போட்டியில் சம்பியன் பட்டத்தையும் வென்றோம்.

தென்கொரியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண கரம் போட்டிகளில் தனிநபர் போட்டிகளில் நீங்கள் தோல்வியைத் தழுவினீர்கள். அதுபற்றிச் சொல்லுங்கள்?

குறித்த போட்டியில் இந்திய வீரருக்கு பலத்த போட்டியைக் கொடுத்திருந்தேன். எனினும், 16-25, 19-25 புள்ளிகள் கணக்கில் தோல்வியைத் தழுவினேன். வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் போதியளவு அனுபவம் இல்லாததும், கரம் விளையாட பயன்படுத்தப்பட்ட பவுடர் பழக்கம் இல்லாத காரணத்தால் தோல்வியை சந்திக்க நேரிட்டது.  

நீங்கள் எவ்வாறு இதற்காகப் பயிற்சி பெறுகின்றீர்கள்?

ஒவ்வொரு நாளும் அதிகாலை 4.00 மணிக்கு தூக்கத்தை விட்டு எழும்பி சுமார் ஒரு மணித்தியாலங்கள் பயிற்சி செய்துவிட்டு காலை நேர பிரார்த்தனைக்கான பள்ளிவாசலுக்குச் செல்வேன். அதன்பிறகு மீண்டும் பயிற்சிகளை ஆரம்பித்து காலை 8 அல்லது 9 மணி வரை விளையாடுவேன். தோடர்ந்து மதிய நேர உணவு உட்கொண்ட பிறகு 2 மணித்தியாலங்கள் பயிற்சி எடுப்பேன். இவ்வாறு ஒவ்வொரு நாளும் 8 மணித்தியாலங்கள் பயிற்சி செய்வேன்.

ஒரு கரம் வீரராக வர விரும்புகின்ற ஒருவருக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகீறிர்கள்?

முதலில் அவரிடம் அர்ப்பணிப்பு இருக்க வேண்டும். காலத்தையும், நேரத்தையும் முழுமையான செலவிட வேண்டும். அதிலும் குறிப்பாக விளையாட்டுடன் அன்பு இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். பொதுவாக கரம் விளையாட்டுக்கு தமது முழு கவனத்தை செலுத்த வேண்டும். அதற்காகவே அதிகாலையில் எழும்பி பயிற்சிகளை எடுப்போம். பயிற்சிகள் செய்வதன் மூலமாகவே அனுபவங்களையும் பெற்றுக்கொள்ள முடியும். அதிலும், தனியாக பயிற்சிகள் எடுத்தால் எமது சிறுசிறு தவறுகளை இனங்கண்டு அவற்றை சரிசெய்ய முடியும்.

இலங்கையில் கரம் விளையாட்டு பிரபல்யம் இல்லை. ஆனால் கரம் உலகக் கிண்ணத்தை 3 தடவைகள் நாம் வென்றுள்ளோம். ஏன் இந்த விளையாட்டு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை?

இலங்கையைப் பொறுத்தமட்டில் கரம் விளையாடுவதன் மூலமாக எந்தவொரு வருமானமும் கிடைக்கப் போவதில்லை. இம்முறை உலகக் கிண்ணத்திற்கும் நாம் எமது தனிப்பட்ட செலவில் சென்று வந்தோம். எனவே, கிரிக்கெட்டைப் போல சம்பளம் கிடைக்காத காரணத்தால் தான் பெரும்பாலானோர் இந்த விளையாட்டை தெரிவு செய்ய பயப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக, இந்த விளையாட்டை தெரிவுசெய்தால் எதிர்காலம் இருக்காது என பெற்றோர்கள் நினைக்கின்றனர். நாங்களும் பணத்துக்காக இநத் விளையாட்டை தெரிவு செய்யவில்லை. மாறாக எம்மிடம் திறமை இருப்பதால் இதை முன்னெடுத்துச் செல்கின்றோம்.

உலக வலைப்பந்தாட்ட தரவரிசையில் இலங்கைக்கு முன்னேற்றம்

உலக வலைப்பந்தாட்ட …

கரம் விளையாட்டு மரண வீடுகளில், பொழுதுபோக்கு விளையாட்டாகவே கருதப்படுகின்றது.  இந்த விளையாட்டில் உள்ள விசேட அம்சம் என்ன?

கிட்டத்தட்ட 20 அல்லது 30 நாடுகளில் தொழில்சார் முறையில் கரம் விளையாடப்படுகின்றது. பொதுவாக மரண வீடுகளில் அல்லது நோன்பு (விரதம்) காலங்களில் பெரும்பாலானேர் பொழுதுபோக்குக்காகவே கரம் விளையாடுகின்றனர். ஆனால், சர்வதேச ரீதியாக இது முற்றுமுழுவதும் மாறுபட்ட விளையாட்டாகும்.

உதரணத்துக்கு உலகில் திறமையான கரம் வீரர்கள் இந்தயாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் உள்ளனர். அங்கு 15 ஆயிரம் கரம் கழகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்கள் தான் சர்வதேசப் போட்டிகளுக்கு வருவார்கள். இந்திய வீரர்களிடம் தான் கரம் விளையாட்டுக்கான அனைத்து நுட்பங்களும் உள்ளன. அவர்களுடன் மூளைப் பயன்படுத்தி 100 சதவீத அவதானத்துடன் விளையாடினால் மாத்திம் தான் வெற்றி பெற முடியும்.  

கரம் விளையாட்டு கொழும்புக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதாக உள்ளதா?

அதை நான் முற்றாக மறுக்கிறேன். வெளி மாவட்டங்களில் திறமையான வீரர்கள் உள்ளனர். எனினும், அவர்களுக்கு கரம் ஒன்றை வாங்குவதற்கான வசதிகள் கிடையாது. அதிலும் குறிப்பாக கொழும்பில் மாத்திரம் தான் கரம் விளையாட்டுக்கு என்று 10 கழகங்கள் உள்ளன. தேசிய மட்டத்தில் பாடசாலை வீரர்கள், தொழில்சார் வீரர்கள் என கிட்டத்தட்ட 1000 வீரர்கள் உள்ளனர். அவற்றில் தேசிய மட்டத்தில் முதல் 10 இடங்களுக்குள் கொழும்பைச் சேர்ந்த ஷெரீப் டீனும் பதுளையைச் சேர்ந்த அனாசும் உள்ளனர்.

கரம் விளையாட்டுக்கு இலங்கையில் போதியளவு வசதிகள் உண்டா?

எமது கரம் சங்கம் கொஹுவளையில் அமைந்துள்ளது. அங்கு கரம் விளையாடுவதற்கான பிரத்தியேகமாக 30 கரம் போர்ட்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு வந்து வீரர்களுக்கு பயிற்சிகளை எடுக்கலாம். அதற்காக சங்கத்தில் உறுப்புரிமையையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

உங்களது எதிர்கால இலட்சியம் என்ன?

தற்போது நான் அரச வேலையொன்றுக்கு விண்ணப்பித்துள்ளேன். அந்த தொழில் கிடைக்கும் என நம்பிக்கையுடன் உள்ளேன். அத்துடன் 2020இல் மலேஷியாவில் உலக கரம் சம்பியன்ஷிப் தொடரும், 2022இல் சுவிட்சர்லாந்தில் உலகக் கிண்ண கரம் போட்டித் தொடரும் நடைபெறவுள்ளன. அதில் பங்கேற்று இலங்கைக்கு பெருமையைத் தேடிக் கொடுக்க எதிர்பார்த்துள்ளேன்.

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க