பார்சிலோனா அணித் தலைவராகிறார் மெஸ்ஸி

589

அன்ட்ரெஸ் இனியஸ்டாவுக்கு அடுத்து பார்சிலோனா அணியின் தலைவராக லியோனல் மெஸ்ஸி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே ஆர்ஜன்டீன அணித் தலைவராக செயற்படும் மெஸ்ஸி, 2017-18 பருவத்துடன் பார்சிலோன கழகத்தில் தனது 22 ஆண்டு வாழ்வை முடித்துக் கொண்ட இனியஸ்டாவின் இடத்தை பிடித்துள்ளார்.

எனினும் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் ஸ்பெயினின் பலம் மிக்க கழகத்தின் உத்தியோகபூர்வ உப தலைவராக இருக்கும் மெஸ்ஸி ஒருசில சந்தர்ப்பங்களில் தலைவராக செயற்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் தற்போது லா லிகா சம்பியனான பார்சிலோனாவுக்கு நிரந்தர தலைவராக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செர்ஜியோ புஸ்கட்ஸ் உப தலைவராக செயற்படவிருப்பதோடு கெரார்ட் பிகு மற்றும் செர்ஜி ரொபார்டோ முறையே மூன்றாவது மற்றும் நான்காவது தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பார்சிலோனாவில் இணைந்தார் விடல்

இந்த நான்கு தலைவர்களும் பார்சிலோனாவின் இளையோர் அகடமியான லா மெசியா ஊடாக பிரதான அணிக்கு தகுதி பெற்றவர்களாவர்.

31 வயதான மெஸ்ஸி 2001 ஆம் ஆண்ட பார்சிலோனா கழகத்தில் இணைந்து அந்த கழகத்திற்கு அதிக கோல்கள் பெற்றவர் என்ற சாதனையை படைத்தவராவார்.

ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெறவிருக்கும் லா லிகா மற்றும் கோபா டெல் ரேய் வெற்றி அணிகளுக்கு இடையிலான ஸ்பானிஷ் சுபர்கோப்பா போட்டியின் மூலம் மெஸ்ஸி அணித் தலைவராக பார்சிலோனா அணிக்கு முதல் கிண்ணத்தை வெல்ல எதிர்பார்த்துள்ளார்.

இம்முறை ஸ்பானிஷ் சுபர்கோப்பா கிண்ணத்தில் 2017-18 பருவத்தில் லா லிகா மற்றும் கோபா டெல் ரேய் கிண்ணங்களை வென்ற பார்சிலோன அணி கோபா டெல் ரேய் தொடரில் இரண்டாவது இடத்தை பிடித்த செவில்லா கழகத்தை எதிர்கொள்ளவுள்ளது.

ரஷ்யாவில் நடந்த உலகக் கிண்ணத்தில் தான் தலைமை வகித்த ஆர்ஜன்டீன அணி 16 அணிகள் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் கண்ட நிலையிலேயே மெஸ்ஸி பார்சிலோனா அணிக்கு திரும்பியுள்ளார்.    

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க