வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 25ஆவது சிங்கர் ப்ரீமியர் லீக் நொக் அவுட் இறுதிப் போட்டியில் எல்.பி பினான்ஸ் அணியை வீழ்த்தி லசித் மாலிங்க தலைமையிலான டீஜேய் லங்கா அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

கொழும்பு வர்த்தக கிரிக்கெட் சங்க மைதமானத்தில் (MCA) இன்று (29) நடைபெற்ற போட்டியில் மழை குறுக்கிட்டதால் டீஜேய் லங்கா அணி டக்வத் லூவிஸ் முறையில் 82 ஓட்டங்களால் இலகு வெற்றியீட்டியது. டீஜேய் லங்கா சார்பில் ஷாலிக்க கருணாநாயக்க மற்றும் சச்சித்ர சேனநாயக்கவின் அதிரடி துடுப்பாட்டம் அந்த அணிக்கு கைகொடுத்தது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற சகலதுறை வீரர் லக்ஷான் ரொட்ரிகோ தலைமையிலான எல்.பி பினான்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய டீஜேய் லங்கா அணி ஆரம்பத்தில் தடுமாற்றம் கண்டது.

முதல் விக்கெட்டை 19 ஓட்டங்களுக்கு பறிகொடுத்த டீஜேய் லங்கா, அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் 116 ஓட்டங்களை பெறுவதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டிலான் ஜயலத் (51) அரைச்சதம் ஒன்றைப் பெற்றபோதும் ஆரம்ப வரிசையில் எஞ்சிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

எனினும் 7 ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷாலிக்க கருணாநாயக்க மற்றும் சச்சித்ர சேனநாயக்க போட்டியை தமது அணிக்கு சாதகமாக திசைதிருப்பினர். இருவரும் இணைந்து 64 பந்துகளில் அதிரடியாக 101 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற டீஜேய் லங்காவின் மொத்த ஓட்டங்கள் 217 ஆக உயர்ந்தது.

பந்துகளை சிக்ஸருக்கு விளாசிய கருணாநாயக்க 40 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பெற்றார். இதில் ஒரு பவுண்டரியும் 4 சிக்ஸர்களும் அடங்கும். மறுமுனையில் துடுப்பாடிய சர்வதேச அனுபவம் கொண்ட சேனநாயக்க 45 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கலாக 67 ஓட்டங்களைக் குவித்தார்.

மேற்கிந்திய தீவுகளில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இலங்கை A அணி

மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான மூன்றாவது மற்றும் கடைசி உத்தியோகபூர்வமற்ற …

இறுதியில் டீஜேய் லங்கா 38.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 266 ஓட்டங்களைப் பெற்றது.

எல்.பி பினான்ஸ் சார்பில் பந்துவீச்சில் சஹான் ஆராச்சிகே 6 ஓவர்களுக்கு 53 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு சுழல்பந்து வீச்சாளர் சரித் சுதாரக்க 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

எல்.பி பினான்ஸ் அணிக்கு 50 ஓவர்களில் 267 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணக்கப்பட்ட நிலையில் டீஜேய் லங்கா அணியில் இலங்கை தேசிய அணிக்கு விளையாடும் லசித் மாலிங்க, சச்சித்ர சேனநாயக்க, மிலிந்த சிறிவர்தன, லக்ஷான் சந்தகன் போன்ற பந்துவீச்சாளர்கள் இருப்பது எதிரணிக்கு பெரும் சவாலாக இருந்தது.

இந்நிலையில் எல்.பி பினான்ஸ் அணி 15 ஓட்டங்களுக்கே முதல் இரண்டு விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லஹிரு இகலகமகே 6 ஓட்டத்துடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்க ஷஷீன் பெர்னாண்டோ 8 ஓட்டங்களோடு சேனநாயக்கவின் பந்துக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த குசல் மெண்டிஸ் அதிரடியாக ஆட முயன்றாலும் 2 சிக்ஸர்களை விளாசிய அவர் 24 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை வீழ்த்திய சேனநாயக்க மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த ஆராச்சிகேவையும் 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கச் செய்தார்.

அடுத்து பந்துவீச்சில் செயற்பட ஆரம்பித்த லசித் மாலிங்க மூன்று விக்கெட்டுகளை குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து வீழ்த்தினார். இதனால் எல்.பி பினான்ஸ் அணி 25 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டது. பிரியமால் பெரேரா 24 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

தொடர்ந்து மழை பெய்ததால் போட்டியை தொடர முடியாத நிலையில் அந்த தருணத்தில் வலுவாக இருந்த டீஜேய் லங்கா அணி டக்வத் லூவிஸ் முறைப்படி வெற்றி பெற்றது.

இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுக்க முரளி சொல்கின்ற ஆலோசனைகள் பலனளிக்குமா?

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தற்பொழுது கிரிக்கெட் ஆலோசகர் மற்றும் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு…

இதன்போது டீஜேய் லங்காவுக்காக அபாரமாக பந்துவீசிய சச்சித்ர சேனநாயக்க 9 ஓவர்கள் பந்து வீசி 25 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மாலிங்க 4 ஓவர்களுக்கு 22 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

எனினும் டீஜேய் லங்கா சரிந்திருந்தபோது தனது அதிரடிய ஆட்டத்தை வெளிக்காட்டி அணியை வலுப்பெறச் செய்த ஷாலிக்க கருணாநாயக்க போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

போட்டியின் சுருக்கம்

டீஜேய் லங்கா – 266 (38.4) – ஷாலிக்க  கருணாநாயக்க 68, சச்சித்ர சேனநாயக்க 67, டிலான் ஜயலத் 51, சஹான் ஆரச்சிகே 53/3, சரித் சுதாரக்க 39/2

எல்.பி பினான்ஸ் – 125/7 (25) –  சஹான் ஆராச்சிகே 26, பிரியமால் பெரேரா 24*, குசல் மெண்டிஸ் 24, லசித் மாலிங்க 22/3, சச்சித்ர சேனநாயக்க 25/3

முடிவு: டீஜேய் லங்கா 82 ஓட்டங்களால் வெற்றி (டக்வத் லூவிஸ் முறையில்)